அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்.

எத்தகைய கடினமான கல்மனதையும் அன்பு என்ற அம்பு துளைத்துவிடும்.- அன்னை தெரசா.

ஒரு மனிதன் பிறக்கும்போது அவன் உடல் உறுப்புகளைப் போல மனதும் மிருதுவாகத்தான் இருக்கிறது சமூகமும், வளர்ப்பும், காலச் சூழ்நிலையும் ஒருவனை கல்மனம் படைத்தவனாக மாற்றிவிடுகிறது. இன்றைய சூழலில் குற்றவாளியாக நிற்கும் ஒவ்வொருவரின் மனதில் ஏதோவொரு மூலையில் அன்பு ஒட்டிக்கொண்டுதான் இருக்கிறது. பரிசீலிக்கப்படாத அந்த அன்பே அவர்களை குற்றவாளியாக நிறுத்தி வேடிக்கை பார்க்கிறது. இந்த திரைப்படத்தில் வரும் நாயகனின் கதையும் இத்தகையதே. தாயை இழந்து தந்தையின் கொடுமைக்கு பயந்து தெருவோரம் வளர்ந்து கொலை, கொள்ளை என வாழ்ந்துவரும் வாழ்க்கையில் மூன்றுமாத கைக்குழந்தை குறுக்கிடுகிறது, இறுகிப்போன அவனது கல்மனதிலிருந்து அன்பை மீட்டெடுக்கிறது.




நுரையீரல் புற்றுநோயால் தாயை இழந்த David தந்தையின் கொடுமைக்கு ஆளாகிறான். அவரிடமிருந்து தப்பித்து நகரத்திற்கு வெளியே தெருவோரம் வசிக்கும் கைவிடப்பட்ட சிறுவர்களோடு மூர்க்கத்தனமாக வளர்கிறான். நண்பர்களான Butcher, Aap மற்றும் Boston என்பவர்களுடன் இணைந்து சிறுசிறு திருட்டு கொள்ளை என வாழ்ந்துவரும் அவன் "Tsotsi" என்ற பெயரில் (little Gangstar) பெரிய குற்ற சம்பவங்களைத் தொடர முடிவு செய்கிறான். ஒருமுறை இவர்கள் கொள்ளையடிக்கும் போது அவனது நண்பன் Boston காயமடைகிறான், அங்கு நிலவும் கலவரத்தில் Pumla என்ற பெண்மணியை சுட்டுவிட்டு அவளது காரையும் திருடிக்கொண்டு Tsotsi தப்பிக்கிறான். திருடப்பட்ட அந்த காரின் பின் இருக்கையிலிருந்து அவனுக்கு மூன்றுமாத கைக்குழந்தை ஒன்று கிடைக்கிறது அதனை விட்டுவிட மனமில்லாது தனது வசிப்பிடத்திற்கு கொண்டு வருகிறான். கொள்ளை மற்றும் கொலை முயற்சியில் ஈடுபட்ட Tsotsi- யின் முகம் கணினியில் வரையப்பட்டு பத்திரிக்கையில் வெளிவருகிறது, காவல்துறை அவனுக்கு வலைவிரிக்கத் தொடங்குகின்றனர்.

இதுவரை துப்பாக்கியை மட்டும் கைகளில் ஏந்தியவனுக்கு மூன்றுமாத குழந்தையை தாங்கிப்பிடிப்பது புதுவித அனுபவமாக இருக்கிறது. குழந்தையை பாராமரிக்கத் தெரியாது தடுமாறும் அவன் தனது தெருவில் வசிக்கும் Miriam என்பவளின் உதவியை நாடுகிறான். குழந்தைபெற்ற அவளை மிரட்டி திருடப்பட்ட குழந்தைக்கு தாய்ப்பால் புகட்ட வைக்கிறான். குழந்தையின் கவணிப்போடு அவர்கள் இருவருக்குமிடையே நல்ல நட்பு இழையோடுகிறது. கொலை கொள்ளை போதை, நண்பர்கள் எனத் திரியும் அவனது வாழ்க்கையில் அந்த குழந்தையால் மாற்றம் நிகழ்கிறது அதன் சிரிப்பில் தன் பால்யகால நினைவுகளையும், தொலைத்துபோன சந்தோசங்களையும் மீட்டெடுக்கிறான். இதற்கிடையில் காயம்பட்ட நண்பன் Boston ஐ பாதுகாக்கிறான் மேலும் அதிக பணம் கிடைக்கும் என்ற நோக்கத்தில் முன்பு தவறவிட்ட கொள்ளை திட்டத்தையும் தொடர முடிவு செய்கிறான்.

Tsotsi மற்றும் அவனது நண்பர்கள் Butcher மற்றும் Ape இணைந்து முன்பு தவறவிட்ட கொள்ளைக்காக Pumla -வின் கணவன் Huber John என்பவனை பின்தொடர்ந்து அவர்களது வீட்டிற்குள் நுழைகிறார்கள். காரின் பின் இருக்கையில் கிடைத்த அந்த குழந்தையின் அறைக்குச் சென்று Tsotsi சில பொருட்களை சேகரிக்கிறான். மற்ற இருவரும் வீட்டிற்குள் சில பொருட்களை எடுக்க, வெளியாட்கள் நுழைந்ததை உணர்ந்த John தற்காப்பிற்காக துப்பாக்கியை எடுக்கிறார். Butcher பதிலுக்கு துப்பாக்கியை நீட்டுகிறான், தன்னுடன் வந்த நண்பன் என பாராமல் அந்த குழந்தையின் தந்தையை காப்பாற்ற Tsotsi அவனை சுடுகிறான். நண்பனையே கொன்ற அவனை மற்றவர்கள் பிரிகின்றனர். காவல்துறையும் தீவிரமாக தேடத் தொடங்குகின்றனர்.



இதுவரை குழந்தையை கவணித்து வந்த Miriam உண்மையை தெரிந்து கொள்கிறாள் அந்த குழந்தையை தாயிடம் ஒப்படைக்குமாறு கெஞ்சுகிறாள். ஆபத்து எனத் தெரிந்தும் Tsotsi குழந்தையை ஒப்படைக்க நகரத்தில் உள்ள Pumla வீட்டிற்குச் செல்கிறான். அவளது கணவன் John உத்தரவுபடி பாதுகாப்பு அதிகாரியும் அங்கு வருகிறார். Tsotsi கைக்குழந்தையை தாங்கியபடி நிற்கிறான், John அவனிடம் பேசி குழந்தையை பெற முயல்கிறான், பாதுகாப்பு அதிகாரியின் துப்பாக்கி அவனை நோக்கி பார்த்துக் கொண்டிருக்கிறது, பெறும் அமைதி அங்கு நிலவுகிறது. என்ன நிகழக்கூடும்? என்ன நிகழ்ந்தது?. திரைப்படத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.


வறுமை,தொழில், அரசியல், மற்றும் போதைக்காக கேங்ஸ்டார் என சொல்லக்கூடிய வாழ்க்கை ஆப்பிரிக்க நாடுகளில் இன்றும் தொடர்கிறது. அந்த வாழ்கையினுடே மெல்லிய அன்பையும் அதன் வலிமையும் அழகாக உணர்ந்துகிறார் இயக்குனர் Gavin Hood. ஆப்பிரிக்க நாட்டின் தலைநகரான Johannesburg நகரத்தை மஞ்சள் கலந்த இருள் வெளிச்சத்தில் நகரம் மற்றும் சேரி என இருவேறுபட்ட வண்ணங்களில் காட்டுகிறது Lance Gewer-ன் ஒளிப்பதிவு. மெல்லிய சாரலாக உணர்வுகளை மௌனத்தின் சிதறல்களாக வெளிப்படுத்துகிறது Vusi Mahlasela , Mark Kilian மற்றும் Paul Hepker மூவரின் இசை. ஆப்பிரிக்க நாட்டின் பிரபலமான இசைகளான Kwaito, Hip-hop, Afro-pop போன்றவைகளை பல காட்சிகளுக்கு இடையில் கேட்பது இதமளிக்கிறது. 

கேங்ஸ்டாராக திமிரோடு சுற்றித்திரியும் போதும், குழந்தையை சமாளிக்க முடியாமல் திணறும் போதும், அதன் புன்னகையில் நெகிழும் போதும், அந்த இறுதிக் காட்சியிலும் Tsotsi ஆக நடித்த "Presley Chweneyagae" மனதில் நின்றுவிடுகிறான். Miriam அக நடித்த Terry Pheto மற்றும் அந்த குட்டிக் குழந்தை அவனது தாய், தந்தை, நண்பர்கள் என அனைத்து கதாபாத்திரங்களிலும் இயல்பான நடிப்பு வெளிப்படுகிறது. திரைப்படத்தின் இறுதியில் என்ன நடந்தது? என்ன நடக்கும்? என்பதை பார்வையாளர்களிடம் விட்டுவிடுவதில் இயக்குனரின் இராஜதந்திரம் புலப்படுகிறது. என்ன நடக்கும்? என்ற அந்த முடிவே மொத்த திரைப்படத்தையும் தாங்கி நிற்கிறது, மனதையும் கனக்கச் செய்கிறது. அதுவே உலகமெங்கும் பல விருதுகளையும் உச்சகட்டமாக ஆஸ்கார் விருதையும் இந்த திரைப்படத்திற்கு பெற்றுத்தந்தது. தவறாமல் ஒருமுறை தரிசியுங்கள்.

Directed by - Gavin Hood.
Screen play - Gavin Hood.
Music - Vusi Mahlasela, Mark Kilian, Paul Hepker.
Cinematography - Lance Gewer.
Language - Afrikaans, Isizulu, Isixhosa.
Country - South Africa.