ஓநாய் குலச்சின்னம்.




இன்றைய வளர்ந்த நாகரீகம் என்பது காடுகள் மலைகள் ஆறுகள் சமவெளி பிரதேசம் என பிரதான இடங்களை காவுகொடுத்து நிர்மாணிக்கப்பட்டவை. சிறு புற்கள் பூச்சிகள் பறவைகள் விலங்குகள் உட்பட அதனை சார்ந்து வாழ்ந்த பல உயிர்கள் (பழமையான மனிதர்கள் உட்பட) அனைத்தையும் அழித்துவிட்டு அவற்றின் ஆன்மாவில்தான் தற்போது நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். காட்டுயானைகள் ஊருக்குள் புகுந்த செய்தியும், சிறுத்தையை பிடித்த கதைகளும் அவ்வபோது நமக்கு இவற்றையெல்லாம் நினைவுபடுத்திச் செல்கின்றன. அவ்வாறு அழிக்கப்பட்ட சீனாவின் ஆயிரம் ஆண்டு பழமையான மேய்ச்சல் நில நாகரீகம் ஒன்றின் கதைதான் ஓநாய் குலச்சின்னம் (Lang Tuteng - Wolf Totem). "இயற்கையால் ஒவ்வொன்றின் தேவைகளை பூர்த்தி செய்யமுடியும் ஒற்றை மனிதனின் பேராசையை தவிர்த்து" என்ற மகாத்மாவின் வரிகளுக்கு தீனிபோடுகிறது இந்த நாவல்.

கலாச்சார புரட்சியை தொடர்ந்து சீனாவில் மேற்கொள்ளப்பட்ட புரட்சி நடவடிக்கைகள் ஏராளம் அவற்றுள் ஒன்று பழங்குடி மற்றும் கிராமங்களில் நிலவிவரும் நான்கு பழமைகளான பழைய சிந்தனை, பழைய கலாச்சாரம், பழைய சடங்குகள், பழமையான பழக்கவழக்கங்களை அகற்றி புதிய புரட்சியை விதைப்பதாகும். "மனிதனே பிரதானமானவன்" என்ற மாவோவின் சிந்தனையின்படி இளைஞர்கள் பலர் இந்த நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டனர். ஒத்த சிந்தனையும் கருத்தும் கொண்ட நான்கு மாணவர்கள் சீனாவின் வடக்கு எல்லையில் ஷிங்கி மலைப்பிரதேசத்திற்கு அருகில் உள்ள ஓலோன்புலாக் எனும் மேய்ச்சல் பழங்குடி வசிப்பிடத்திற்கு செல்கின்றனர். ஆடு மேய்ப்பவராகவும், மாடு மேய்ப்பவராகவும், குதிரை மேய்ப்பவராகவும் ஈடுபடும் அவர்கள் அந்த மேய்ச்சல் நில நாகரீகத்தில் தங்களை முழுவதும் ஒப்படைக்கின்றனர். நால்வரில் ஒருவனான ஜென் சென் என்பவனுக்கு அந்த மேய்ச்சல்நில தலைவன் பில்ஜி என்பவரின் அரவணைப்பு கிடைக்கிறது. அவரிடன் உதவியுடன் அந்த நாகரீகத்தின் தொன்மைகளையும் மரபு கதைகளையும் அறிந்துகொள்கிறான். அவர்களின் குருவாகவும், போர்க்கடவுளாகவும், மேய்சல் நில காவலனாகவும், குலச்சின்னமாகவும் போற்றப்படும் ஓநாய்களிடம் தன் மனதை பறிகொடுக்கிறான். அதன் வசியத்துக்கும் ஆட்படும் அவன் ஓநாய்கள் குறித்த நேரடி அனுபவம் பெற ஓநாய்குட்டி ஒன்றையும் எடுத்து வளர்க்கிறான். அந்த சீன இளைஞனின் சுய வாழ்க்கையின் வழியே பாரம்பரியமிக்க மங்கோலிய மேய்ச்சல் நிலம் பாலை நிலமாக மாறியதை விளக்குகிறது இந்த நாவல்.

ஓலோன்புலாக்கின் மேய்ச்சல் நிலம் என்பது பெரிய உயிர். அதைச் சார்ந்து வாழும் பிற உயிரினங்கள் முதல் மனிதன் வரை அனைத்துமே சிறிய உயிரினங்கள். அத்தகையை மேய்ச்சல் நிலத்தை பேணிக்காத்து பராமரித்து பாதுகாப்பவர்கள் மங்கோலிய நாடோடி மக்களும் அந்த ஓநாய்களுமே. பெரிய சிறிய உயிர்கள் ஒன்றோடுஒன்று பல ஆண்டுகளாக சமநிலையில் வாழ்ந்த முறையை சீனாவின் புதிய கலாச்சாரம் சிதைக்கிறது. அங்கு வாழ்ந்த ஓநாய்களை அழித்ததின் விளைவாக அந்த நிலம் சமநிலையை இழந்து பாலைவனமாக மாறுகிறது. இந்த நாவல் மங்கோலிய மேய்ச்சல் நில நாடோடி மக்களின் மகத்தான நாகரீகத்தையும், வன்முறையால் மறைந்தபோன அதன் அவலத்தையும், இயற்கை சிதைந்ததையும் விளக்குகிறது. 

2004-ல் வெளிவந்த இந்த நாவலை எழுதியவர் ஜியாங் ரோங் (Jiang Rong). 1946 ஆம் ஆண்டு பிறந்த இவரது இயற்பெயர் லூ ஜியாமின் (Lu- Jiamin). மாவோவின் தலைமையேற்று புரட்சிக்காக 1967 ஆம் ஆண்டு மங்கோலியாவின் கிழக்கு "உஜிம்கியுன் பேனர்" என்ற இடத்திற்கு அனுப்பப்பட்ட இவர் அங்கு வாழ்ந்த நாடோடி மக்களின் வரலாறு கலாச்சாரம் மற்றும் மரபுகளை அறிந்துகொண்டார். பதினோரு ஆண்டுகள் அந்த கலாச்சாரத்தில் ஒன்றிய அவர் மேய்சல் நில ஓநாய்களைப் பற்றி தெரிந்துகொள்ளும் தீவிர வேட்கையில் இருந்தார். இந்த நாவலின் வரும் முதன்மை காதாபாத்திரமான ஜென் சென்னின் பிரதிபலிப்பே இவரது வாழ்க்கை. இதை நாவல் என்று கூறுவதைவிட சுயசரிதை என்பதே பொருத்தமாக இருக்கும். அந்த சுயசரிதை வழியே மங்கோலிய மேய்ச்சல் நிலத்தின் ஆன்மாவை தமது எழுத்துக்களால் மீட்டெடுக்கிறார்.


சீனாவில் மாவோவின் சிவப்புப் புத்தகத்திற்கு அடுத்தபடியாக அதிகம் விற்பனையான இந்த புத்தகம் உலகின் பல மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளது. இதனை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து உலகரியச் செய்த "Goldblatt" மற்றும் தமிழில் மொழிபெயர்த்து அடியேனைப் போன்ற சாமானியனிடம் கொண்டு சென்ற "சி. மோகன்" இருவரையும் பாராட்டத்தகும். பிரான்சின் புகழ்பெற்ற இயக்குனர் "Jean -Jacgnes Annaud" என்பவர் தமது எண்ணத்தில் இந்த நாவலை அழகிய திரைப்படமாக எடுத்திருந்தார். சிறந்த காட்சிகளினால் நாவலின் மன ஓட்டத்தை அப்படி பிரதிபலித்தது இந்தத் திரைப்படம்.

உலக இலக்கியங்களின் வரிசையில் ஒரு புதுவித அனுபவத்தை பெற இந்த புத்தகத்தை தவறாமல் வாசியுங்கள்.

Lang Tuteng (Chinese).
Wolf Totem (English).

தமிழில்
ஓநாய் குலச்சின்னம்.
சி. மோகன்.
அதிர்வு பதிப்பகம்.