கனவு மெய்ப்பட வேண்டும்.


காலையில் அலாரம் வைத்து அதற்குமுன் எழுந்து; மாமியாருக்கு டீ, கணவருக்கு காஃபி, குழந்தைகளுக்கு ஹார்லிக்ஸ் கலந்து கொடுத்து; இட்லிக்கு ஜோடி சட்ணியா, சாம்பாரா, பொடியா யோசித்து காலை உணவு தயாரித்து; பள்ளி, அலுவலகம் செல்லும் குழந்தைகளை ஒழுங்குபடுத்தி வாசலில் நின்று வழியனுப்பி; அவசரமாக மிச்சத்தை அள்ளிப்போட்டு வயிற்றை நிரப்பி; பாத்திரங்களை கழுவி, தரையை சுத்தம் செய்து, துணிகளை துவைத்து அலசி காயவைத்து மடித்து; மதிய உணவும் மாலை பலகாரமும் செய்து; குழந்தைகளோடு கொஞ்சி விளையாடி, செடி கொடிகளுக்கு தண்ணீர் விட்டு; கிடைக்கும் நேரத்தில் டிவியில் தோன்றும் சீரியல் கதையையும் பக்கத்துவீட்டு சீரியஸ் கதையையும் உள்வாங்கிக் கொண்டு; இரவு சப்பாத்திக்கு மாவு உருட்டி; ஒரு நாளை ஒரு மாதிரியாக முடித்து; அனைவரும் உறங்கியபின் களைத்துப்போய் சாயும் சாதாரண வாழ்க்கை குஜராத்தில் வசித்து வந்த ப்ரீத்தி சென் குப்தா என்ற குடும்பத் தலைவிக்கு சலிப்புத்தட்டியிருந்தது. ஒரு நாள் தனியாளாக இந்த உலகை சுற்றிப் பார்க்கும் தனது நீண்டநாள் கனவை தன் கணவனிடம் அவர் கூறினார்.

குஜராத்தி, ஹிந்தி, கொஞ்சம் சமஸ்கிருதம் இதை வைத்துக்கொண்டு தனி மனுசியாக இந்த உலகை சுற்ற நினைத்த ப்ரீத்தி சென்னின் கணவர்  முதலில் இதற்கு மறுப்பு தெரிவித்தார். பிறகு அவரது ஆசையை நிறவேற்ற பாதுகாப்பாக தன் நண்பர்களின் உதவியுடன் முதலில் அமேரிக்காவின் சில இடங்களை மட்டும் சுற்றிப் பார்த்துவிட்டு வா என கையசைத்து வழியனுப்பிவைத்தார். முதல் பயணத்தை வெற்றிகரமாக முடித்த. ப்ரீத்தி சென் அதன் அனுபவங்களில் லயிக்கத் தொடங்கினார். இந்த முறை அவரது மனதை நன்கறிந்த அவரது கணவர் தன் மனைவியின் ஆசைக்கு முழுதாக பச்சை கொடி காட்டினார்.

செல்லுமிடத்தை பற்றிய குறிப்புகள், சிறிது பணம், ஒன்றிரண்டு வார்த்தைகள், சிலரின் முகவரி இவற்றைக் கொண்டு ப்ரீத்தி உலகமெங்கும் பயணிக்கத் தொடங்கினார். மொத்தம் 23 பயணங்களில் உலகின் 112 நாடுகளுக்கு தனியாளாக சென்று பயணத்தின் ருசியறிந்து தனது நீண்டநாள் கனவை நிறைவேற்றிக் கொண்டார். மிக முக்கிய பயணமாக பனி நிறைந்த உலகின் வட துருவத்திற்கு சென்று அதன் அனுபவங்களை My Journey To the Magnetic North Pole என்ற புத்தகமாகவும் வெளியிட்டார். இன்று மேலே குறிப்பிட்ட சலித்துப்போன இயல்பான வாழ்க்கை வாழும் குடும்பப் பெண்களுக்கு திருமணத்திற்கு பிறகும் ஒரு பெண் தம் கனவுகளை மீட்டெடுக்கலாம் என காட்டும் நம்பிக்கை சிகரமாக அவர் விளங்குகிறார்.

90 % இந்திய பெண்களின் கனவுகளும் லட்சியங்களும் திறமைகளும் திருமணத்திற்கு பின்பான வாழ்க்கையில் அடியோடு மாறிவிடுகிறது. ஒரு கயிறு அல்லது மோதிரம் இவற்றோடு அவைகள் கட்டப்பட்டுவிடுகின்றன. கலை, இலக்கியம், அறிவியல், விளையாட்டு என பள்ளி கல்லூரிகளில் சிறந்து விளங்கிய தோழிகள் மற்றும் உறவினர்கள் சிலரின் முற்றிலும் மாறிய திருமணத்திற்கு பிந்தைய வாழ்க்கையை அடியேன் அறிந்திருக்கிறேன். பழைய நினைவுகளைப் பற்றி அவர்களிடம் விவாதிக்கும்போது எங்கப்பா அதுக்கெல்லாம் நேரம்... குடும்பம், குழந்தைகள், வேலை என வாழ்க்கை மாறிவிட்டது...அதெல்லாம் ஒரு காலம்... தற்போது வயதும் ஆகிவிட்டது என்ற பதில்களையே கிடைக்கப் பெற்றிருக்கிறேன். எல்லோராலும் ப்ரீத்தி சென் போன்று உலகை சுற்ற இயலாது, எல்லோருக்கும் அவரது கணவரைப் போல கிடைப்பதும் அரிது. ஆனாலும் ஒவ்வொருவருக்கும் சில திறமைகள்  இருக்கிறது, அதனை துரத்தும் கனவும் இருக்கிறது. அந்த கனவை தக்கசமயம் பார்த்து கணவரிடம் தெரிவிக்க முயலலாம். மறுப்புகள் இருப்பின் நவீன காலத்தில் இதற்கு உதவ சோஷியல் மீடியாக்களில் தங்களின் கனவுப் பயணத்தை மீட்டெடுக்கலாம். இதுவே

உலக வாழ்க்கையின் நுட்பங்கள் தேரவும்,
ஓதுபல நூல்வகை கற்கவும்,
இலகு சீருடை நாற்றிசை நாடுகள்
யாவுஞ் சென்று புதுமை கொணர்ந்திங்கே
திலக வாணுத லார்நங்கள் பாரத
தேசமோங்க உழைத்திடல் வேண்டுமாம்
விலகி வீட்டிலோர் பொந்திர் வளர்வதை 
வீரப் பெண்கள் விரைவில் ஒழிப்பாராம்.

- என்ற முண்டாசு கவிஞனின் விருப்பமாகவும் இருக்கக்கூடும்.
ஆக இன்றே கனவை துரத்துங்கள். வாழ்க்கையும் வயதும் அதற்கு தடைகளாக இருப்பின் ஒரு குட்டி தகவல் சொல்கிறேன் கேளுங்கள். ஒரு கனவு இருந்து அந்த கனவின் வழியே இந்த உலகை சுற்ற புறப்பட்டபோது ப்ரீத்தி சென் குப்தாவிற்கு வயது 63.