மாரிமுத்து அண்ணனும் முதலியார் மளிகைகடையும்.

ங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே? சில முகங்களை பார்க்கும்போது தோன்றக்கூடும். அதுவே சொந்த ஊரை மறந்து எங்கோ ஓடித்திரிந்து ஏதாவது ஒரு பண்டிகைக்கு மட்டும் திரும்பும் என்னைப் போன்ற சிலருக்கு ஊரில் புதிதாக யாரைப் பார்த்தாலும் மனதில் அடிக்கடி தோன்றும், அன்றும் அப்படித்தான் இருந்தது. முண்டா பனியனுடன் நீலக்கலர் லுங்கியில் சற்று கனத்த கருத்த உருவத்துடன் பேக்கரியில் கண்ணாடிப் பெட்டிக்குள் சுடச்சுட கேக்குகளை அடுக்கிக் கொண்டிருந்த அந்த முகம் எங்கேயோ பார்த்து பழகியதுபோல் தோன்றியது. டீயை உறிஞ்சியபடி குறைவான GB கொண்ட எனது மெமரிகார்டின் போல்டர்களில் தேடினேன் சட்டென நினைவுக்கு வந்தார் முதலியார் மளிகைகடையில் வேலைசெய்த மாரிமுத்து அண்ணன்.

காலணா காசை கவர்மெண்ட் கையால் பெற்று மாதத்திற்கு ஒருமுறை மட்டும் மளிகை சாமான்களை வாங்கி பாட்டில்களிலும் டப்பாக்களிலும் அஞ்சரை பெட்டியிலும் நிரப்பி மாதக் கடைசியில் தலைகீழாக தட்டிப்பார்க்கும் நடுத்தர குடும்பம் எங்களது. முதல் தேதி தொடங்கியதும் பிள்ளையார்சுழி போட்டு வெல்லம் - 1 கி என இனிப்போடு மளிகை சாமான்களுக்கான பட்டியலை தயார் செய்வோம். அந்த பட்டியலை அப்பா வேலைக்குச் செல்லும் காலையில் முதலியார்கடையில் கொடுத்துவிடுவார். பாக்கெட்டில் அடைக்கப்பட்ட மளிகை சாமான்கள் இல்லாத அந்த காலகட்டத்தில் தொப்பையும் தொந்தியுடன் அமர்ந்து முதலியார் பட்டியலை படிக்க அனைத்தையும் ஒவ்வொன்றாக பொட்டலம் போட்டு மடித்து நிரப்பிவைப்பார் முத்து அண்ணன். பள்ளிக்கூடம் முடிந்து டிசர்ட் அரைக்கால் டவுசருடன் கிடைக்கும் ஐந்துரூபாய் வெகுமதிக்காக மூன்று கி.மீ சைக்கிள் மிதித்துக்கொண்டு முதலியார் கடையிலிருந்து அந்த மளிகை சாமான்களை வாங்கிவருவது அடியேனின் மாதாந்திர பழக்கம். சாமான்களை பக்குமாக அடுக்கி சைக்கிளின் பின்புறத்தில் இறுக்கிக்கட்டி என்னை தாங்கிப் பிடித்து பத்திரமாக கிளம்பும் வரை மாரிமுத்து அண்ணன் உடன் இருப்பார். கிளம்பும் முன் யாருக்கும் தெரியாமல் ஒன்றிரண்டு கடலை மிட்டாய் அல்லது பாப்பின்ஸ் மிட்டாயை கையில் அழுத்தி வழியில் சாப்பிடு என புன்னகைத்து அனுப்பிவைப்பார்.

ஜாதி மதம் தொழில் வயது என வித்தியாசம் பார்க்காமல் அனைவருடன் நட்போடு பழகக்கூடியவர் அப்பா.  "ஓ! சார் பையனா"... என பலரிடம் பல சலுகைகளை சிறுவயதில் அனுபவித்திருக்கிறேன். மாரிமுத்து அண்ணாவிடம் அன்று கிடைந்த அன்பும் அத்தகையதே. பால்ய காலம், சம்பளத்தேதி, முதலியார் மளிகைகடை வாசம், ஐந்து ரூபாய் டிப்ஸ், பாப்பின்ஸ் மிட்டாய், மாரிமுத்து அண்ணன், அந்த அன்பு என அனைத்தும் ஒரு டீயை உறிஞ்சிக் குடிக்கும் முன் நிழலாடியது. சற்று தயக்கத்துடன் அந்த கனத்த உருவத்திடம் சென்று... நீங்கள் மாரிமுத்து அண்ணன்தானே?...  "என்னை நினைவிருக்கிறதா"?... எனக்கேட்டு அறிமுகம் செய்து கொண்டேன். சற்றுநேரம் யோசித்தவர் அப்பாவின் பெயரை சொன்னதும்... "ஓ! சார் பையனா"... எவ்ளோ பெரிய ஆளா வளர்ந்திட்டீங்க (5 அடி 11 அங்குலம்).. என கையை பற்றிக் கொண்டார். இருவரும் குடும்பத்தை பற்றி நலம் விசாரித்துக்கொண்டோம். முதலியார் கடை என்னவாயிற்று என அவரிடம் தயக்கத்துடன் ஆரம்பித்தேன். சற்று அமைதியாக இருந்தவர் அமர்ந்து பேசத் தொடங்கினார்.

ஒரு காலத்தில் எங்கள் ஊரில் பெரிதானதும் பிரபலமாகவும் இருந்தது முதலியார் மளிகை கடை. ஈரோட்டிலிருந்து மசாலா பொருட்கள், அரிசிக்கு தஞ்சாவூர், எண்ணெய்க்கு ஆடுதுறை, கடுகு சீரகம் சோம்பு முதலிய பொருட்களுக்கு கொள்ளிமலை, மிளகாய்க்கு இராமநாதபுரம் என ஒவ்வொரு மாவட்டத்திலிருந்து நேரடியாக கொள்முதல் செய்து கலப்படமில்லாது நேர்மையுடன் அவர் விற்று வந்தார். எங்களைப் போன்ற குடும்பங்களுக்கும் ஊரைச் சுற்றியுள்ள சிறுசிறு கடைகளுக்கும் முதலியார் மளிகை ஒன்றே கடனாகவும் ஆதாரமாக இருந்தது. அப்பளம், பப்படம், வற்றல், சுடம், சாம்பிராணி, மெழுகுவர்த்தி, என சில குறுந்தொழில்களுக்கு படியளந்து வந்த அவரது மளிகைகடை இன்று இருந்த இடம் தெரியாமல் தொலைந்துவிட்டது. 

காய்கரிகள், பழங்கள், உணவுப்பொருட்களை செயற்கையாக பதப்படுத்த முடியாது என்ற இயற்கை அறிவும், அரிசியையும் பருப்பையும் எண்ணெயையும் சுத்தீகரிப்பு செய்தால் சத்துக்கள் நீங்கிவிடும் என்ற வேதியியல் அறிவும் எக்கச்சக்கமாக இருந்தும் தரமான பொருட்களை வாங்கும் பழக்கம் இன்று நோய்வாய்ப்பட்டு கிடக்கிறது. எதில் தயாரிக்கிறார்கள்? எங்கு தயாரிக்கிறார்கள்? எப்படி தயாரிக்கிறார்கள்? எனத்தெரியாது பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட பொருட்களை கவர்ச்சி விளம்பரத்தில் மயங்கி ஏசி அறைக்குள் வாங்கும் ஷாப்பிங் பழக்கத்திற்கு மாறிய இன்றைய சுழலில் முதலியார் கடை தொலைந்து போனது ஒன்றும் பெரிதாக தோன்றவில்லை. மேலும் சிறுசிறு கடைகளை நசுக்கிவிட்டு ரிலையன்ஸ், ஃபியூச்சர், மோர் போன்ற உள்நாட்டு மொத்த வணிக நிறுவனங்கள் எங்கள் ஊரைப் போல சிறுசிறு இடங்களில்கூட நுழைந்ததாலும், வால்மார்ட் போன்ற அந்நிய நிறுவனங்களின் அச்சுறுத்தலாலும் மாரிமுத்து அண்ணன் போன்றவர்களின் வாழ்க்கை தடமாறியது ஆச்சரியத்தக்க விஷயமாகவும் தோன்றவில்லை. இருந்தும், எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே? எனத்தோன்றிய அந்த கனத்த உருவத்தை அடையாளங்கண்டு நீண்ட வருடங்களுப்பின் சந்தித்ததில் மனநிறைவாக இருந்தது. வளர்ச்சி என்ற பாதையில் தரமானவற்றையும், சில எளிய மனிதர்களை தள்ளிவிட்டு பயணிக்கிறோம் என்ற எண்ணமும் உறுத்தியது.

மீண்டும் ஒரு கைகுலுக்கள் மற்றும் தழுவலோடு அவரிடம் விடைபெற்று புறப்பட எனது வண்டியை ஸ்டார்ட் செய்யத் தொடங்கினேன். "ஒரு நிமிசம் நில்லுங்க தம்பி".. என பேக்கரியிலிருந்து ஓடிவந்த மாரிமுத்து அண்ணன், "நீங்க குடிச்ச டீக்கு காசு வேணாம்... என் கணக்குல எழுதிக்கிறேன்"... என பத்துரூபாய் நோட்டை நீட்டினார். அதை பெறவா மறுக்கவா யோசனையில்.. "பணம் வேண்டாம் ஏதாவது சாக்லெட் வாங்கித்தாருங்கள்"... என்றேன். மீண்டும் பேக்கரிக்குள் ஓடியவர் இரண்டு பெரிய சாக்லெட்டுகளை கொண்டுவந்து கையில் அழுத்தி அதே பழைய அந்த புன்னகையுடன் வழியனுப்பிவைத்தார்.

டீசர்ட், அரைக்கால் டவுசருடன் மளிகை சாமான்களை ஏற்றி கைநிறைய சாக்லெட்டுகளை வைத்துக்கொண்டு தட்டுத் தடுமாறி அடியேன் சைக்கிள் மிதிக்கத் தொடங்கியிருந்தேன்.