கொல்கத்தா பயணமும் வங்கமொழி பாடல்களும்.

இந்தியாவின் முதல் தலைநகரம் கிழக்கிந்திய கம்பேனியும் இன்னபிற வெளியாட்களும் விளையாடிய தளம், சுதந்திர போராட்டத்திலும் மதக் கலவரத்திலும் கொதித்த பூமி, உலகின் மக்கள்தொகை நிறைந்த இடம், குப்பை நகரம், காளிதேவியின் பிறப்பிடம், கம்யூனிசம் ஆண்ட கோட்டை என பல சிறப்புகள் பெற்ற கொல்கத்தாவிற்கு செல்லும் வாய்ப்பு இரண்டாவது முறையாக கிடைத்தது. எங்கு பயணித்தாலும் தொழில் சம்பந்தமான வேலையை தவிர்த்து எனக்கான சில நேரங்களை கொஞ்சம் ஒதுக்கிக்கொள்வேன். அங்குள்ள தெருக்களைச் சுற்றுவது, வகையாக சாப்பிடுவது, புத்தகம், சினிமா, பாடல்கள் என அந்த நேரத்தில் புதிதாக எதையாவது தேடுவதை வாடிக்கையாக வைத்திருப்பேன். ஆனால் இந்த கொல்கத்தா பயணத்தில் எதையும் நிர்மாணிக்க முடியாமல் போனது. தங்கியிருந்த அறையில் சன்னலை வெறித்தபடியே பாதி நாட்களின் பொழுது கழிந்தது. கொல்கத்தா நண்பர் மோஹித் மட்டும் சற்று ஆறுதலாக இருந்தார், நானும் அவரும் வங்கமொழி படங்களையும் சில பாடல்களையும் பற்றி ஒருநாள் பேசிக் கொண்டிருந்தோம். வருடம்தோறும் தேசிய விருதிற்கான வரிசையில் முதலில் நிற்கும் வங்கமொழி படங்களில் சிலவற்றை அடுத்தநாள் அவர் எனக்காக தேடிப்பிடித்து வாங்கிவந்து கொடுத்திருந்தார். சிந்தனையும் நேரமும் நேர்க்கோட்டில் சந்திக்காத காரணத்தால் அதை தொடாமல் வைத்திருந்தேன். மேலும் எனக்கான வேலை முடிந்து கொல்கத்தாவிலிருந்து புறப்படும் கடைசி தருணத்தில் மோஹித் சில வங்கமொழி பாடல்களை எனது மொபைலுக்கு அவசரமாக பரிமாற்றம் செய்திருந்தார். Indigo 6E-503 க்காக நேதாஜி டெர்மினல் காத்திருப்பில் அந்த பாடல்களை சற்று சாய்ந்து கேட்க ஆரம்பித்தேன் பாடல்களில் மெல்ல லயிக்கத் தொடங்கினேன்.


மனதிற்கு அமைதியான சில பாடல்களை கேட்க பழைய காலத்திற்கும் பக்கத்திலிருக்கும் மலையாளத்திற்கும் செல்லும் நான் இந்த வங்கமொழி பாடல்களை கேட்டு மெய்மறந்து போயிருந்தேன். சில வங்கமொழி திரைப்படங்கள் மற்றும் ஆல்பங்களிலிருந்து நண்பர் கொடுத்த அந்த பாடல்களை அடடா! இத்தனை நாட்களாக எப்படி தவறவிட்டோம் என்ற எண்ணம் அலையடிக்கத் தொடங்கியது. பாடல்களுக்கான அந்த வேர் மூலத்தை தேடினேன். பாடல்களுக்கான அடியேனின் தேடுதல்களில் மொழியை பெரிதாக எண்ணுவதில்லை அந்தவகையில் தற்போது வங்கமொழி பாடல்களையும் சேர்த்துக்கொள்ள தொடங்கிவிட்டேன். அப்படி என்ன இருக்கிறது அந்த பாடல்களில்? தங்களின் பார்வைக்கும் சில.

பாடல்களைக் காண