☰ உள்ளே....

நான் யார் தெரியுமா?நான் யார் தெரியுமா? என்னோட ஸ்டேடஸ், முன்-பின்புலம் தெரியுமா? தலைக்கனத்தோடு நான் என்ற அகந்தை நம்மில் அனைவருக்குமே உண்டு. அதாவது நான்தான் சிறந்தவன்(வள்) என்ற மாயை. ஆனால் சிறுசிறு தாவரங்கள், பூச்சிகள், பறவைகள், விலங்குகள் என இந்த பூமியில் வாழும் அற்ப உயிர்கள் ஒவ்வொன்றிற்கும் நம்மைவிட சில தனித்துவம் இருக்கிறது இருந்தும் அவைகள் எதையும் வெளிக்காட்டிக் கொள்வதில்லை. மரங்கொத்தி பறவைக்குத்தான் தலைக்கனம் (மண்டை ஓடு) அதிகம். அது ஒரு பெரிய வலுவான மரத்தை துழையிட்டு அழகான தன் வீட்டை மட்டுமே கட்டிக்கொள்கிறது. இதுபோன்ற சில சுவாரசியமான தகவல்களை ரசிக்கலாம் வாருங்கள்.

கரப்பான் பூச்சிகள் (Cockroaches) .


கிட்டத்தட்ட 320 மில்லியன் வருடங்களாக எந்தவித மாற்றமும் இல்லாமல் இந்த பூமியின் வளர்ச்சியை பார்த்துக் கொண்டிருக்கும் ஒரே உயிரினம் கரப்பான் பூச்சிகள். அழிந்து போன டைனோசார்களுக்கே ஹாய் சொன்ன கரப்பான் பூச்சியின் உடல் அமைப்பு மிகவும் சிறப்பானது. இந்த உலகம் மீண்டும் ஏதாவது ஒரு காரணங்களால் அழிந்து போனாலும் அல்லது மாற்றமடைந்தாலும் இவைகள் வெகு விரைவாக உயிர்பெற்று பல்கிப்பெருகி தன் இனத்தை நிலைநாட்டிக்கொள்ளும். அதனால் அடுத்தமுறை வீட்டில் சிவப்பு Hit அடிக்கும்முன் இந்த உலகின் மிகப் பழமையான உயிரினத்திற்கு ஒரு சல்யூட் வைத்துவிடுங்கள்.

பண்ணிவாகை (Albizia saman).


ஊருக்கு வெளியே ஆற்றங்கரை அல்லது குளக்கரையில் அமைதியாக அமர்ந்து, மாலைப்பொழுது நெருங்கியதும் இலைகளை இழுத்துப் போர்த்திக்கொண்டு தூங்கும் "பண்ணிவாகை" (Albizia saman) என்ற மரத்திற்கு நாமெல்லாம் வைத்த செல்லப் பெயர் தூங்குமூஞ்சி மரம். என்னதான் இந்த மரம் தூங்கினாலும் இரவிலும் ஆக்ஜிசனை வெளியிட்டுக் கொண்டேயிருக்கும். 15 மீட்டர் உயரம் வளர்ந்த ஒரு தூங்குமூஞ்சி மரம் ஒருவருடத்தில் 28.5 டன் கார்பன் டை ஆக்சைடை சுத்திகரிப்பு செய்கிறது. மேலும் நன்கு வளர்ந்த ஒரு மரம் தன்னைச்சுற்றி 60000 லிட்டர் தண்ணீரை வேரில் சேமித்து வைத்துக்கொள்கிறது. இத்தனை சிறப்புமிக்க செயலை நமக்குத் தெரியாமல் செய்யும் இந்த மரத்திற்கு நாம் பொருத்தமில்லாத பெயரை வைத்திருக்கிறோம் (தூங்குமூஞ்சி மரம்).

விஷத்தவளை (Arrow Poison Frag).


சிவப்பு, பச்சை, மஞ்சள் என ஆன்லைனில் விற்கப்படும் புடவைபோல் பளபளப்பான உடலைக்கொண்ட "Arrow Poison Frag" (Dot Frag) என்ற தவளையினம்தான் உலகிலேயே நிலத்தில் வாழும் உயிரினங்களில் மிகவும் கொடுமையான, அஞ்சத்தக்க உயிரினமாகும். Lipo philic alkaloid வேதியியல் வகுப்பை சேர்ந்த Allopumiliotoxin 267A, Batrachotoxin, Epibatidine, Histrionicotoxin மற்றும் Pumiliotoxin 251D போன்ற விஷத்தன்மை கொண்ட நொதிகளை தன் தோலில் சுரக்கும் இந்த தவளையை தொட்டால் போதும் மூன்று நிமிடங்களில் சொர்க்கவாசல் திறந்துவிடும். எதிரிகளிடமிருந்து தப்பிக்க இயற்கை கொடுத்த இந்த அற்புத ஆயுதத்தால் ஒரே சமயத்தில் 1200 மனிதர்களை வீழ்த்த முடியும், ஒரு யானையை 20 நிமிடங்களில் சாய்க்க முடியும். இத்தனை பலம் இருந்தாலும் தென்அமேரிக்காவில் அதிகமாக வாழும் இந்த தவளையினம் அந்நியன் அம்பி போல் பரம சாது.

பேசும் தாவரங்கள்.


மனிதர்களைப் போல தாவரங்களும் பேசிக் கொள்கின்றன என விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். நம்மைப்போன்று வெட்டியாக மணிக்கணக்கில் கடலை போடாமல் உருப்படியாக தகவல்களை அவைகள் பரிமாறிக் கொள்கின்றன. அதாவது இயற்கை மாற்றம், நீர் பற்றாக்குறை மற்றும் ஆபத்து நெருங்குகையில் தாவரங்கள் ஒற்றோடுஒன்று தகவலை பரிமாரி தங்களை பாதுகாத்துக் கொள்கின்றன. இங்கிலாந்தின் எக்ஸ்டெர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர்கள் முட்டைக்கோசு தாவரத்தை ஆராய்ந்தனர், ஆபத்துகாலத்தில் மூட்டைக்கோசு தாவரம் தன் இலையில் சிறிய பிளவை ஏற்படுத்தி ஒருவித வேதிப்பொருளை காற்றில் பரவவிட்டு அடுத்த செடிக்கு தகவலைத் தந்து எச்சரிக்கை செய்கிறது என ஆதாரப்பூர்வமாக நிறுபித்துள்ளனர். பெரிய மரம் முதல் சாதாரண தொட்டிச் செடிவரை  தனக்கே உரிய மொழியில் பேசிக்கொள்கின்றன.  இனி தொட்டிச்செடியில் பூக்களை பறிக்கும்போது கவணமாக காதுகொடுத்து கேளுங்கள், அது உங்களை கெட்ட வார்த்தையில் நாலு திட்டு திட்டிவிட்டு அடுத்த செடிக்கு தகவல் தரக்கூடும்.

பண்ணா மீன் (Cod fish).


சிறுவயதில் அழுகிய மனத்துடன் கூடிய மீன் எண்ணொய் அடைக்கப்பட்ட சிறிய டியூப் மாத்திரைகளை மீன் மாத்திரை என விழுங்கியிருப்போம். வைட்டமின் A,D,E மற்றும் Omega-3 நிறைந்த இந்த மாத்திரையை Cod Liver oil tablet என்கின்றனர். வடக்கு அட்லாண்டிக் மற்றும் பசிபிக் கடலில் வாழும் Cod fish (பண்ணா) என்ற மீன்களிலிருந்து இது தயாரிக்கப்படுகிறது. பல நூற்றாண்டுகளாக உணவிற்காகவும், மருத்துவ குணங்களுக்காகவும் பிடிக்கப்படும் இந்த மீன்கள் "அந்த விசயத்தில்" மிகவும் கில்லாடி, இனப்பெருக்கத்தில் இதை மிஞ்சிய உயிரினம் வேறு எதுவுமில்லை. ஒரு Cod fish ஒரு முறை 9 மில்லியன் முட்டைகளை இடுகின்றன இதில் பாதி பொறிந்து குஞ்சுகளாக வெளிவந்து எதிரிகளிடமிருந்து தப்பிப் பிழைத்து வளரும் மீன்களை கணக்கில் கொண்டால், ஒரு வயதான தாத்தா Cod fish -ன் வாரிசுகள் எத்தனை இருக்கும் என்பதை நீங்களே யூகித்துக் கொள்ளுங்கள்.

தெள்ளுப்பூச்சி (Fleas).


உயிரினங்களுக்கு தகுதியின் அடிப்படையில் ஒலிம்பிக் போட்டி வைத்தால் இறக்கைகளே இல்லாத கணுக்கால் கொண்ட தெள்ளுப்பூச்சிக்கு (Fleas) நீளம் மற்றும் உயரம் தாண்டுதல் போட்டியில் தங்கம் கிடைப்பது உறுதி. விலங்குகள், பறவைகள் மற்றும் மனிதர்களின் இரத்தத்தை உறிஞ்சி ஒட்டுண்ணியாக வாழும் இவை செங்குத்தாக 18 செ.மீ உயரமும் நீளவாக்கில் 33 செ.மீ தூரமும் தாண்டும் வல்லமை கொண்டது. இது ஒரு பெரிய அளவா? எனக் கேட்டால் இத்தனை தூரம் தாண்டும் தெள்ளுப்பூச்சி வெறும் 3.3 மி.மீ அளவே இருக்கும். உடலமைப்பு தகுதியை கணக்கிட்டால் தன்னைவிட பலமடங்கு தூரம் தாண்டும் உயிரினம் இதுவாகத்தான் இருக்கும்.

ஆர்க்டிக் டெர்ன் பறவை (Arctic Tern).


பறவையாக பறக்கும் ஆசை நம்மில் அனைவருக்கும் உண்டு அதிலும் "ஆர்க்டிக் டெர்ன்" என்ற பறவைபோல் பறக்க நினைத்தால் ஏக சந்தோஷம். இங்கிலாந்தின் "ஃபானோ" தீவுகளில் வாழும் இவை அங்கு நிலவும் கோடைக்காலத்தை அனுபவித்துவிட்டு வலசை செல்ல தொடங்கிவிடும். ஹாயாக இங்கிலாந்தில் கிளம்பி, ஆப்பிரிக்காவின் மேற்கிலிருந்து தெற்கு நோக்கி பறந்து, இந்திய பெருங்கடலைத் தாண்டி ஒரு யூடேர்ன் போட்டு, அன்டார்டிகாவை அடைந்து, வட துருவத்தில் ஒன்று தென் துருவத்தில் ஒன்று என இரண்டு கோடைக்காலத்தை அனுபவித்துவிட்டு திரும்புவது இந்த பறவைகளின் வழக்கம். ஒரு ஆர்க்டிக் டென் பறவை வருடத்தில் 96000 கி.மீ தூரமும், தன் வாழ்நாளில் 30 லட்சம் கி.மீ தூரமும் இவ்வாறு பயணிக்கின்றன. உலகிலேயே அதிக தூரம் பயணிக்கும் இந்த பறவையின் எடை எவ்வளவு தெரியுமா? வெறும் 100 கிராம்.

இராணுவ எறும்புகள் (Amazon army ants).


எர்வோமேட்டின் கிடைக்கும் அதே அமேசான் காடுகளில் வாழும் இராணுவ எறும்புகளை சாதாரண எறும்புதானே என ஒதுக்கிவிட முடியாது. பல மில்லியன்கள் என கூட்டமாக வாழும் இவைகளைக் கண்டால் காட்டில் அனைத்து விலங்குகளுக்கும் காய்ச்சல் வந்துவிடும். எப்போதும் கூட்டமாக இருக்கும் இவைகள் ஷாப்பிங் கிளம்பினால் கூட 2 இலட்சம் எறும்புகளாக செல்லும். சுத்த அசைவமான இது செல்லும் வழியில் யாராவது குறுக்கிட்டால் முடிந்தது கதை. சாதாரணமாக ஒரு சிறிய எறும்புக்கூட்டம் காலையில் டிபன் சாப்பிட 30000 வெட்டுக்கிளிகள் தேவைப்படும். வெட்டுக்கிளிகள் மட்டுமில்லாமல் காட்டில் திரியும் சிறிய பெரிய உயிரினங்கள் அனைத்தும் இவைகளின் சாப்பாட்டு மெனுவில் உண்டு. ஒரு குதிரையை இந்த எறும்புகள் ஒன்று சேர்த்து அரைமணி நேரத்தில் அனைத்தையும் தின்று செரித்து எலும்புக்கூட்டை மட்டும் உயிரியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்க முடியும்.