ஒரு மரமும் ஒட்டுமொத்த தன்னம்பிக்கையும் ஒரு காதலும்..


ழைப்பிற்கும் தன்னம்பிக்கைக்கும் எடுத்துக்காட்டாய் விளங்குபவர்கள் ஜப்பானியர்கள். உலகம் என்ற அழகியின் மூக்குத்தி அளவில் இருந்துகொண்டு இரண்டாம் உலகப்போரில் கலந்து அணுகுண்டு சோதனையில் சிக்கி சின்னாபின்னமானது முதல் புயல் வெள்ளம் நிலநடுக்கம் சுனாமி என ஒவ்வொரு அழிவு காலகட்டத்திலும் அவர்கள் பீனிக்ஸ் பறவையாக எழுந்து வந்துள்ளனர்.

நான்கு பக்கமும் நீரால் சூழப்பட்ட ஜப்பானின் நில அமைப்பு மிகவும் சிக்கலானது, அங்கு இயற்கை சீற்றங்கள் வருடா வருடம் கோடை விடுமுறைக்கு பிறந்த வீட்டிற்கு வரும் பெண் போல வந்து அனைத்தையும் வாரி சுருட்டிக்கொண்டு போகிறது. அத்தகைய பெரும் இழப்பிலும் ஜப்பானியர் ஒழுக்கத்தையும் தன்னம்பிக்கையும் விடாமுயற்சியையும் கடைபிடித்து அதிலிருந்து மீண்டுவந்து உலகத்தில் உள்ளவர்களுக்கு ஏதாவது ஒரு செய்தியை பாடமாக அறிவிக்கின்றனர். அவ்வாறு சமீபத்தில் நமக்கெல்லாம் அவர்கள் கற்றுக்கொடுத்த தன்னம்பிக்கை பாடம்தான் மிராகிள் பைன்.

11 மார்ச் 2011 ஆம் ஆண்டு ஜப்பானை மிகப்பெரிய சுனாமி தாக்கியது. பல லட்சம் பொருட்களையும் வீடுகளையும் 19000 அதிகமான மக்களையும் காவு வாங்கிச் சென்றது. ஜப்பானில் உள்ள ரிக்குசென்டகாட்டா என்ற சிறிய நகரமும் இயற்கையின் பசிக்கு இறையானது. அந்த நகரத்தை சுற்றி அழகுடன் காட்சியளித்த 70000 பைன் மரங்களையும் அதன் பொழிவையும் தின்று ஏப்பம் விட்டிருந்தது. பசி தீர்ந்து இடிபாடுகளுக்கிடையில் கிளைகள் முறிந்த நிலையில் கொஞ்சம் உயிர்ப்புடன் தன்னந்தனியே நின்ற ஒரு பைன் மரம் அந்த நகரத்தின் மேயர் பியூடோஷி தோபா என்பவரின் மனதிற்குள் ஏதோ சொல்லியது. உடனே மற்ற நடவடிக்கைகளோடு அந்த மரத்தையும் மீட்க ஒரு இயக்கத்தை அவர் தொடங்கினார். அரசாங்கமும் மக்களும் அவருக்கு துணை நிற்க 88 அடி உயரம் இருந்து 22 அடியாக முறிந்த அந்த மரத்தை நவீன தொழில்நுட்பம் கொண்டு வேறொரு மரத்தின் பாகங்களை அதனுடன் ஒட்டவைக்க முயன்றனர். செயற்கையாக தயாரிக்கப்பட்ட பசைகளைக் கொண்டு மாற்று அறுவை சிகிச்சைபோல் செய்து மீண்டும் அந்த பைன் மரத்தை உயிர்ப்பித்தனர். சுனாமியின் நினைவாகவும் தன்னம்பிக்கையின் வடிவமாகவும் தன்னந்தனியே நிற்கும் அந்த மரத்தைப்பற்றி கேட்டதற்கு மேயர் அளித்த பதில் ஒட்டுமொத்த ஜப்பானியர்களையும் இன்னும் ஒருபடி தன்னம்பிக்கை மனிதர்கள் என்ற இடத்திற்கு கொண்டு சேர்த்தது.

"The miracle pine gave us the strength and hope to carry on living "

இன்று உலகமெங்கும் பலர் இந்த மரத்தை தினமும் பார்வையிடுகின்றனர் அவர்களுக்கு இது தன்னம்பிக்கை சின்னமாக காட்சியளிக்கிறது. ஆனால் இந்த மரத்தை மீட்ட மேயர் மட்டும் இதனை தன் காதலாக பார்க்கிறார் ஏனென்றால் அந்த சுனாமியில் அவர் தன் காதல் மனைவியை இழந்திருந்தார்.