பொலிவியன் டைரி.




அக்டோபர் 8 1968 - காயம்பட்ட ஒரு வீரர் சண்டை நடந்த இடத்திலிருந்து லா ஹிகுவேரா (La Higuera) என்னும் இடத்திலுள்ள இடிந்த பள்ளிக்கூடம் ஒன்றிர்க்கு கைதியாக பிடிக்கப்பட்டு மாற்றப்படுகிறார். வலியால் அவதியுற்று மூச்சுவிடவே சிரமப்படும் அவரால் சரிவர நடக்க முடியவில்லை, சில மாதங்களாக அவர் எடை கூடுவதால் தோள்கள் வலித்தன. துக்கம் மற்றும் மோசமான உடல்நிலை, நண்பர்கள் மற்றும் நெருக்கமானவர்களின் மரணம், சிலரின் நம்பிக்கை துரோகம், சிலரது வாழ்க்கைக்கு அவர் ஏற்றிருக்கும் பொறுப்பு, அவர் நேசிக்கும் மனிதர்களைப் பற்றிய ஏக்கம் இவையனைத்தும் அவரை மேலும் பலவீனப்படுத்தியது. ஆனாலும் செங்கல் சுவரில் கட்டப்பட்டு, வரப்போகும் தீர்ப்புக்காக காத்திருக்கும் அவரது உடல் மிகுந்த தன்னம்பிக்கையுடன் போருக்கு தயார் என்ற நிலையில் நிமிர்ந்து நிற்கிறது.

வெறும் 50 கொரில்லா போராளிகளை வைத்துக்கொண்டு பலம் பொருந்திய பொலிவியாவின் இராணுவத்திற்கும், அமேரிக்க கைக்கூலி ஆட்சியாளர்களுக்கும் ஆட்டம் காட்டிய அந்த வீரர், ஒரு மருத்துவர், இராணுவ தளபதி, நீதிமன்றத்தைக் கூட மேடையாக மாற்றிப்பேசும் திறன் கொண்டவர், அயராத உழைப்பாளி, ஏகாதிபத்தியத்திடமிருந்து சுகந்திரமடைந்த ஒப்பாற்ற நாட்டின் அமைச்சர், தன் சக தோழர்களுக்கு சகோதரன், உண்மையான ஆண்மகன், ஆழமான புரட்சியாளர், எல்லாவற்றிற்கும் மேலாக அன்புக்கு கட்டுப்படும் ஒரு மென்மையான மனிதர். அவரை வீழ்த்திய மகிழ்ச்சியில் சிலர் கொண்டாட்டத்தில் ஈடுபடுகின்றனர், அவரைப்பற்றி நன்கறிந்த சிலருக்கு என்ன செய்வதென்ற குழப்பமும் ஏற்படுகிறது.

அந்த வீரர் பிடிபட்டு 24 மணிநேரம் கடந்திருந்தது. அவர் எதிரிகள் யாரிடமும் பேச மறுத்திருந்தார் குடிபோதையில் அவரை தொந்தரவு செய்த அதிகாரிக்கு ஒரு அறை மட்டும் கொடுத்திருந்தார். பொலிவியாவில் உள்ள லா பாஸ்ஸில் நடந்த விவாதத்தில் பாரியன்டோஸ், ஓவாண்டோ என்ற உயர் அதிகாரிகளும் மற்ற சிலரும் பிடிபட்ட அந்த வீரரை கொல்ல முடிவு செய்கின்றனர். மேஜர் மிகுவெல் ஆயோரா மற்றும் கர்னல் ஆண்டிரே செலிஸ், வாரண்ட் ஆபிசர் மரியோ டெரான் என்பவருக்கு அந்த வீரரை கொல்ல உத்தரவிடப்படுகிறது. குடிபோதையில் இருந்த வாரண்ட் டெரான் பள்ளிக்கூடத்திற்கு நுழைகிறான் ஏற்கனவே வில்லி மற்றும் சீனோ என்ற பிடிபட்ட போராளிகளை அவன் சுட்டு வீழ்த்தியிருந்தான். களைத்துபோயிருந்த வரலாற்று நாயகனை சுடப்போவதை நினைத்து தயங்குகிறான். பயப்படாதே! என்னை சுடு என அந்த வீரர் மார்பைக் காட்ட டெரான் தயக்கத்துடன் வெளியேறுகிறான். மீண்டும் அவனது உயர் அதிகாரிகள் உத்தரவிட திரும்பிவந்து துப்பாக்கியால் அந்த வீரரின் இடுப்பிற்குக் கீழே சுடுகிறான். தாக்குதலில் அந்த வீரர் கொல்லப்பட்டார் என்ற செய்தி முன்னமே பரப்பப்பட்டது அதனால் அவரை மார்பிலும் தலையிலும் சுடக்கூடாது என தகவல் கொடுக்கப்பட்டிருந்தது. மேலும் மற்றொரு சார்ஜென்ட் கைத்துப்பாக்கியால் இடதுபக்கம் சுட இந்த நூற்றாண்டின் புகழ்பெற்ற மனிதர்களுள் ஒருவரான "எர்னெஸ்டோ குவாரா டெ லா செர்னா" (Ernesto Guevara de la Serna) சுறுக்கமாக "சேகுவாரா" என்ற அந்த வீரரின் உயிர் பிரிந்தது.

புரட்சி என்ற வார்த்தைக்கு தனிமனித அடையாளமாக விளங்கியர் சேகுவாரா. ஏகாதிபத்தியத்தின் சுரண்டலை எதிர்த்து மனித சக்திகளை ஒன்றிணைத்து பல நூற்றாண்டுகளாக பொருளாதாரம், விஞ்ஞானம், தொழில்நுட்பம் இவற்றில் பின்தங்கிய 30 கோடி லத்தீன் அமேரிக்காவில் வாழும் மக்களுக்கு மாற்றம் கொண்டுவர நினைத்த மாமனிதர். வியட்னாம், சீனா, மற்றும் அமேரிக்காவில் கருப்பர் புரட்சி இயக்கம் முதல் உலகமுழுவதிலும் உள்ள சாதாரண டீக்கடை புரட்சி இயக்கம் மற்றும் அரசியல் கட்சிகளுக்கும் இவரே முன்னுதாரணம்.

அனைவராலும் அன்போடு "சே" என அழைக்கப்படும் சேகுவாரா தினசரி நிகழ்வுகளை நாட்குறிப்பில் எழுதும் வழக்கம் உடையவர். சிறுவயதில் இளமைக்காலத்தில் அவர் எழுதிய மோட்டர் சைக்கிள் பயணம் கட்டுரையும் 1956-58 ஆம் ஆண்டு கியூபாவில் நடைபெற்ற போராட்டத்தைப் பற்றிய குறிப்பும் அனைவரும் அறிந்ததே. அந்த வரிசையில் பொலிவியாவில் அவர் தொடங்கிய போராட்டத்தின் நடுவே எழுதிய டைரியின் தொகுப்புதான் இந்த புத்தகம் "The Bolivian Diary". 1966 நவம்பர் 7 ஆம்தேதி சேகுவாரா பொலிவியாவில் உள்ள நசாஹூவாசுவிற்கு வந்து சேர்ந்ததில் தொடங்கும் இந்த டைரிக்குறிப்பு மேற்சொன்ன சேகுவாராவின் கடைசி நாளுக்கு இரண்டு நாட்களுக்கு (அக்டோபர் 7 1966) முன் முடிவடைகிறது.

சேகுவாரா சுடப்பட்டு இறந்ததும் அவரது டைரி கைப்பற்றப்பட்டு நகல்களாக அமேரிக்கவின் CIA -விற்கும் பென்டகன் அமைப்பிற்கும் அனுப்பப்பட்டது. CIA உடன் தொடர்புடைய சில பத்திரிக்கையாளர்களுக்கும் அந்த நகல்கள் கிடைத்தன. அனைவரும் அதை வெளியிடாமல் இரகசியம் காத்தனர். புரட்சி என்ற வார்த்தைக்கு அர்த்தம் கண்டுபிடித்தவனின் எழுத்து தீப்பொறியாகும் என பயந்தனர். ஆனால் காலம் சென்று அந்த குறிப்புகள் ஒவ்வொன்றாக கிடைக்கப்பட்டது. அவருடன் போராட்ட களத்தில் இருந்தவர்களிடம் சரிபார்த்து அடையாளப்படுத்திக் கொள்ள விரும்பாத சிலர் அவரது டைரி குறிப்புகளை தொகுத்தனர். மருத்துவம் பயின்ற சேகுவாரா புரியாத கையெழுத்தில் எழுதக்கூடியவர் அதைனைப் படிக்க சிரமப்பட்டு, அவரது தோழியின் "அலெய்டா மார்ச்" அவர்களின் உதவியுடன் கடைசியாக டைரிக்குறிப்புகளை "The Bolivian Diary" என புத்தமாக வெளியிட்டனர்.

போராட்டகளத்தின் நடுவே கிடைக்கும் ஓய்வுநேரங்களில் அவர் எழுதிய குறிப்புகள் மூலம் அவரது கடைசி நாட்களைப் பற்றிய மிகச் சரியான விலைமதிப்பில்லாத தகவல்களை இதில் காணலாம். மிகக்கடுமையான சூழ்நிலையில் அவர் வேலை செய்த விதமும் ஒப்பற்ற போராளியின் மன உறுதியையும் சில குறைபாடுகளையும் எதிர் குற்றச்சாட்டுகளையும் நடுநிலமையோடு அறிந்து கொள்ளலாம். வெறும் 200 ரூபாய்க்கு விற்கும் சேகுவாரா முகம் கொண்ட டி- சர்டை மாட்டிக்கொண்டு 20 ரூபாய்க்கு விற்கும் ஸ்டிக்கரை ஒட்டிக்கொண்டு புரட்சி புண்ணாக்கு எனத் திரியும் இன்றைய 4G தலைமுறைக்கு சேகுவாராவைப் பற்றி புரிந்துகொள்ள இந்தப் புத்தகம் மிகவும் உதவும்.
Documentary.

உலகமெங்கும் பல மொழிகளில் வெளிவந்த இந்த புத்தகத்தை கண்ணதாசன் பதிப்பகம் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளனர். உலகின் தலையெழுத்தை மாற்ற நினைத்த தனிமனிதன் ஒருவனின் கையெழுத்தை ஒருமுறை வாசித்துப் பாருங்கள்.