ஞாயிற்றுக்கிழமை விருந்து.

கூட குறைச்சல்
அதிகாலை 
காஃபியில் தொடங்கி
புத்தகங்களையும்
துணிகளையும் அடுக்கி
அறையையும்
தரையையும் சுத்தம் செய்து
என்ன சமைக்கலாம்
யோசித்து
எதையோ சமைத்து
சமாளித்து பரிமாறி
பாத்திரங்கள் முதல்
படுக்கயறை வரை
ஒழுங்குபடுத்தி
இரவு விருந்திற்கு
இன்னபிற செய்யும்
ஞாயிற்றுக்கிழமை பெண்மைக்காக
ஒவ்வொரு வாரமும்
காத்திருக்கிறது
ஆறுநாள் ஆண்மை. 
ஈரம் காயாத தலையை
துவட்டிவிடுகிறது
முந்தானை,
கலைந்திருக்கும் முடியை
கோதிவிடுகிறது
வாளை கை,
சட்டைக் காலரிலும்
பொத்தான்களிலும்
கோலமிடுகிறது
விரல்கள்,
அனைத்தும் மூடியிருக்கிறதா
நோட்டமிட்டு சிரிக்கிறது
செவ்வாய்,
முன்னும் பின்னும்
மேலும் கீழும்
சரிபார்த்து அசைகிறது
தலை,
எல்லாம் முடிந்தபின்
இறுக்கியணைத்து
இதழ் பதித்து
வழியனுப்புகிறது
காதல்.
சாம்பார் வைத்தால்
உப்பு குறைவாக இருக்கும்
அல்லது
உறைப்பு தூக்கலாக இருக்கும்.

வற்றல் குழம்பென 
புளிக்குழம்பும்
புளிக் குழம்பென 
வற்றல் குழம்பும் ஊற்றப்படுகிறது.

தோசையும்
சப்பாத்தியும்
வட்டமாகவோ
கருக விடாமலோ
ஒருநாளும் வார்த்ததில்லை.

பாலா டிக்காஷனா
எது குறைச்சல்
கண்டுபிடிப்பதற்குள்
காஃபி 
உறிஞ்சப்படுகிறது.

அப்பளம் வற்றல்
பொறிக்கப்படும்போது
கையும் சேர்ந்து
பொறிந்து கொள்கிறது.

புதுசா பண்ணியிருக்கேன் 
நீட்டுவதை 
விழுங்கும்போது
புதிதாக 
ஏதோ செய்கிறது. 

எது எப்படியோ!
பரிமாறும் போது
அஷ்டகோணலான
உன் முகமும்
அது பிரதிபலிக்கும் 
பரிதவிப்பும்
உனக்கு சமைக்கத் தெரியாது
ரகசியத்தை
ஒன்றுமில்லாமல்
செய்துவிடுகிறது. 
கலைத்துவிட்டிருந்த
பொருட்கள்
போட்டது போட்டபடியே
கிடக்கிறது. 
நுழைந்ததும் 
கொஞ்சிக் குலாவும் பப்பி
சுணங்கியபடி 
சுருண்டிருக்கிறது.
பிடித்த பாடல்
ஒளித்துக் கொண்டிருந்த
தொலைக்காட்சி
வருகையறிந்து
மாற்றப்படுகிறது. 
வாங்கி வந்த பூக்கள்
வைத்த இடத்திலிருந்து
வாசனையை
வீசிக் கொண்டிருக்கிறது.
ஆவலுடன் 
திறந்து பார்க்கும்
என்ன சமையல்
அடுப்படியில்
அதனிலிருக்கிறது.
ஒரேயொரு தலையனையை சுமந்த
மெத்தையில்
ஒன்றிரண்டு புதிதாக
முளைத்திருக்கிறது.
முன்னமே தூங்கிவிடும்
படுக்கயறை விளக்கு
கேளி செய்து
சிரித்துக் கொண்டிருக்கிறது.
அத்தனையும் கடந்து
நாளைக்கு விடிந்துவிடும்
நம்பிக்கையில்
கண்மூடுகிறது
காலையில்
நமக்குள் நிகழ்ந்த ஊடல். 

கோவிலுக்குப் போக
எந்த புடவை கட்டிக்கொள்ள?
ஒவ்வொன்றாய் அடுக்குகிறாய்
உன் தோளில்

இந்த பச்சை?

... ம்கூம்

ஊதாப்பூ?

... ம்கூம்

மஞ்சள் ஓகே வா?

... ம்கூம்

மயில் கழுத்து

... ம்கூம்

உனக்கு பிடித்த நீலம்?

... ம்கூம்

இந்த சிவப்பாவது?

... ம்கூம்

கொஞ்சம் முறைத்துவிட்டு
அத்தனையையும் அள்ளிவீசி
சலிப்புடன் நகர்கிறாய்.
சற்றுமுன் 
நான் ரசித்த வானவில்
அறை முழுவதும்
சிதறிக் கிடக்கிறது.

என்ன சமைக்க?

ஏதாவது...

ஏதாவதுன்னா?

மனுசன் சாப்பிடுறமாதிரி...

அடுப்படியிலிருந்து வரும்
அணல் பறக்கும் பார்வையில்
உலையில் கொதிக்கிறது
ஞாயிற்றுக்கிழமை விருந்து.