☰ உள்ளே....

Don't Waste Food Ever ...

பிறந்தநாள், திருமணநாள், வேலை, முதல்மாத சம்பளம், புரமோஷன், பாராட்டு, திட்டு, புதிதாக பைக், மொபைல், ஆடைகள் வாங்கினால், அட! செருப்பு கூட புதிதாக போட்டிருந்தால் நட்புகளிடம் கேட்கும் வார்த்தை எப்ப? டிரீட்.


முன்பெல்லாம் டிரீட் என்றால் சோமபானம் மட்டுமே இருக்கும் தற்போது திருந்தி சமரச சன்மார்க்க நிலையை கடைபிடிப்பதால் ஏதாவது பெரிய ஹோட்டலுக்குச் சென்று டீரீட் கொடுப்பவரின் ATM அல்லது பர்ஸை மட்டும் காலி செய்துவிட்டு வருவதுண்டு. பறந்து கொண்டிருக்கும் வாழ்க்கையில் ஒருநாள் சகாக்களுடன் பெரிய ஹோட்டலில் அரட்டையடித்துக் கொண்டு கண்டதை ஆர்டர் செய்து டேபிள் முழுவதும் நிறைத்து பாதி தின்று மீதி வைத்து மனம்விட்டு பேசிக்கழிக்கும் அந்த தருணங்கள் மகிழ்ச்சியாகத்தான் இருக்கும். அதுபோன்ற நேரங்களில் வீணடிக்கப்படும் உணவுகளைப்பற்றி கொஞ்சம் வருத்தமும் ஏற்படும். பொதுவாக பெரிய ஹோட்டல் மற்றும் விழாக்களில் பரிமாறப்படும் உணவு வகைகளில் தேவையில்லாதவைகளையும் சாப்பிட முடியாதவைகளையும் அடியேன் திரும்ப எடுத்துக்கொள்ளுமாறு செய்துவிடுவேன். சிறுவயதில் பள்ளிக்கு எடுத்துச்செல்லும் சாப்பாட்டில் மிச்சம் கொண்டு வந்தால் "நீ சாப்பிடு அல்லது நண்பர்களுக்கு கொடு திரும்ப கொண்டுவராதே" என்ற அம்மாவின் அர்ச்சனையில் தொடங்கிய பழக்கம் இது. ஆனால் சிலநேரங்களில் அதையும் கடைபிடிக்காமல் தவறவிடுவதுண்டு இன்றும் அப்படித்தான் நிகழ்ந்தது.

சுபகாரியங்கள் முதல் சிறிய சந்தோச நிகழ்வுகள் வரை நாம் ஒவ்வொருவறும் எண்ணற்ற உணவுகளை தினமும் வீணடிக்கின்றோம். வயிறுமுட்ட சாப்பிட்டுவிட்டு பீடாவை அதக்கிக்கொண்டு நெளிந்து வெளிவரும்போது அங்கு கையேந்தி நிற்பவர்களையும் மிச்சமீதிக்காக காத்திருப்போரையும் ஜஸ்ட் லைக் என கடந்துவிடுகிறோம். நாம் வயிறையும் குப்பைத் தொட்டியையும் நிரப்பும் அதே நேரத்தில் உலக மக்கள்தொகையில் 12.9 சதவீதம் பேர் பசித்திருக்கிறார்கள் என்கின்றனர் WFA - வை சேந்தவர்கள்.

2015 ஆம் ஆண்டு World Food Association (WFA) ஐ.நா சபையில் உலகில் ஏழ்மை மற்றும் பசியால் பாதிக்கப்பட்டவர்களைப் பற்றிய ஆய்வுகளை சமர்பித்தனர் அதன்படி உலகில் 795 மில்லியன் மக்கள் பசியால் சரிவிகித உணவு கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளனர் என்கின்றனர். குறிப்பாக ஆப்பிரிக்கா நாடுகளையும் தாண்டி ஆசிய நாடுகளில் வாழும் மக்களே (526 மில்லியன் ) அதிக அளவில் போதிய உணவு கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒளிர்கிறது, மிளிர்கிறது, வளர்கிறது என்ற இந்தியாவை பொருத்தவரை 194.6 மில்லியன் மக்கள் (இதில் நாம் நம்பர் - 1) பசித்திருக்கின்றனர் என்று அவர்களது ஆய்வரிக்கை கூறுகிறது. மேலும் 3.1 மில்லியன் குழந்தைகள் உட்டச்சத்து குறைபாடினால் ஒவ்வொரு வருடமும் இறக்கின்றனர் என்றும், பிறக்கும் ஆறில் ஒரு குழந்தை எடைக்குறைவாலும், பள்ளிக்குச் செல்லும் 66 மில்லியன் குழந்தைகள் பசியால் உட்டச்சத்து இல்லாமலும் பாதிக்கப்பட்டுள்ளனர் என அவர்களது ஆய்வரிக்கை எச்சரிக்கிறது.

தயாரிக்கப்படும் உணவுவகையில் மூன்றில் ஒருபங்கு வீணடிக்கப்படுகிறது. வருடந்தோரும் 1.3 பில்லியன் டன் உணவுக்கழிவுகளை இந்த பூமி தாங்கிக் கொள்கிறது. கொட்டப்படும் கழிவுகள் சிதைந்து 3.3 பில்லியன் டன் கார்பன்-டை- ஆக்சைடை ஒவ்வொரு வருடமும் வெளியிடுகிறது. வளர்ந்த நாடுகளில் கூட 35% நகர்புற கழிவுகள் உணவுக்கழிவுகளாக கொட்டப்படுக்கிறது. உலக நாடுகளைப் பொருத்தவரை ஆஸ்திரேலியாதான் இதில் முதலிடம் வகிக்கிறது நமக்கு இதில் மூன்றாவது இடம் கிடைத்திருக்கிறது.

சரி!, நாம் சாப்பிட்டு மீச்சம் வீசிய உணவு எங்கோ ஒரு மூலையில் இருக்கும் ஒருவரின் பசியை எவ்வாறு போக்க முடியும்? மனதிற்குள் இந்த கேள்வி எழத்தான் செய்கிறது. கொஞ்சம் இந்த வீடியோவைப் பாருங்கள்.


நமது தட்டில் விழும் ஒவ்வொரு உணவுவகைகளுக்குப் பின்னால் ஒரு நாட்டின் இயற்கை வளம், நீர், உழைப்பாளிகளின் வியர்வை, விலை, இடைத் தரகர்கள், அரசியல், பொருளாதாரம் போன்ற கண்ணுக்குத் தெரியாத எண்ணற்ற சக்திகள் ஒளிந்திருக்கிறது. நாம் வீணடிக்கும் உணவோடு சேர்ந்து இந்த சக்திகளும் ஒன்றுசேர வீணடிக்கப்படுகிறது. இந்த சக்திகளை நம்பியே ஹைட்டெக்கான இந்த உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது இதுவே ஒரு நாட்டின் ஏழ்மையை தோற்றுவித்து 795 மில்லியன் மக்களை பசித்திருக்கச் செய்கிறது. சுறுக்கமாகச் சொன்னால் ஒவ்வொரு பருக்கையிலும் கண்ணுக்குத் தெரியாத பல சக்தி ஒளிந்திருக்கிறது.

நண்பரின் மகள் பிறந்தநாளிற்காக ஏற்பாடு செய்யப்பட்ட உணவுகளை சாப்பிட்டது பாதி வீணடித்தது மீதி என எழுந்து வந்தபோது ஹோட்டலில் ஏதோ ஒரு டிவி சேனலில் ஓடிக்கொண்டிருந்த Don't waste food என்ற வீடியோவைப் (மேலே உள்ள) பார்த்தேன். மேலும் உணவுப் பொருட்களை வீணடிப்பதை பற்றி பேசிக் கொண்டிருந்த போது சில தகவல்களையும் சேகரித்தேன். உணவுப்பொருட்களை வீணடிக்ககூடாது என்ற எண்ணம் மனதில் இருந்தபோதும் இன்று அதை மீறியிருந்தேன். சில நேரங்களில் தமக்கான தனித்துவங்களை பொதுவானவைகளுக்காக மறந்துவிடுகிறோம் என்ற கழிவிரக்கம் தோன்றியது. சிறுவயதில் அம்மா கற்றுக் கொடுத்தவற்றையும் அந்த வீடியோவில் உள்ள வாசகத்தையும் ஒருமுறை மனதிற்குள் சொல்லிப் பார்த்தேன்.

"நீ சாப்பிடு அல்லது நண்பர்களுக்கு கொடு திரும்ப கொண்டுவராதே"

Don't Waste Food Ever..