பப்பி.


னக்கும் பப்பிக்கும் எங்கள் வீட்டின் சோபாவில் யார் உட்காருவது என அடிக்கடி சண்டைவரும். யாருக்காகவும் எதற்காகவும் பப்பி அந்த இடத்தை விட்டுக் கொடுக்காது. காலை நீட்டிக்கொண்டு ஃபேன் காற்றில் ஹாயாக தூங்கும் அதனிடம் கொஞ்சம் தள்ளிஉட்காரு பப்பி என இடத்திற்கு கெஞ்ச வேண்டிவரும். இந்த பப்பியாக பிறந்திருக்கலாம் பாரு எப்படி தூங்குகிறது? என அப்பா புலம்புவார். அந்த சோபாதான் அதன் ஆஸ்தான படுக்கை சிம்மாசனம் எல்லாமே. அதில் எப்போதும் பப்பியின் வெள்ளை முடி (மயிறு) சிதறிக்கிடக்கும் சோபாவில் உட்காரும்போது அந்த முடிகள் போட்டிருக்கும் உடையிலும் ஒன்றிரண்டு உடலிலும் ஒட்டிக்கொள்ளும். இதேபோல் வீடெங்கும் சில இடங்களிலும் தலைதுவட்டும் துண்டு, மெத்தை போன்றவற்றிலும் பப்பியின் முடிகள் சிதறியிருக்கும். வெளியாட்களுக்கு அது அறுவறுப்பாகத் தெரிந்தாலும் நாங்கள் அதை பெரிதாக பொருட்படுத்தியதில்லை எனென்றால் நாங்கள் பப்பியை ஒரு நாயாக பார்த்தில்லை.



மாமா வீட்டில் பிறந்த நாய்க்குட்டிகளில் இதுமட்டும் பெண்குட்டி என யாரும் அதை சீண்டவில்லை, எங்கள்வீட்டில் பெண்குழந்தை இல்லை நாங்கள் வளர்க்கிறோம் என தம்பிதான் அதை தூக்கிவந்தான். என்ன பெயர் வைக்கலாம் என ஆளுக்கு ஒன்றாக யோசிக்க, ஏதாவது வைத்துக்கொள்ளுங்கள் அதுவரை நான் பப்பி என்று கூப்பிடுவேன் என்றாள் மானஷா இதுவரை அதுதான் அதன் பெயர். தாயிடமிருந்த பிரிந்த சில நாட்களுக்குப்பின் தாயன்போடு எங்களிடம் ஒட்டிக்கொண்டது பப்பி.

பப்பி இங்க வாடி, அங்க போகாத டீ, அண்ணனை போய் எழுப்பிவிடு, அப்பா வந்தவுடன் சாப்பிடலாம் என்று பெண்பிள்ளையென உறவாடுவாள் அம்மா. நாங்கள் இல்லாத வீட்டின் அவள் தனிமை முழுவதிலும் பப்பியே நிறைந்திருந்தாள். ஏற்கனவே பிராக் என்ற நாய் வீட்டில் இருந்தாலும் பப்பியின்மீது மட்டும் தனி பாசம் வைத்திருந்தாள்.
நடக்க முடியாமல் படுக்கையில் விழுந்த அம்மாவின் நாட்களில் பப்பி அருகிலிருந்து அவளை கவணித்துக்கொண்டது இரவு அவள் இருமினால் கூட கத்தி எங்களை எழுப்பிவிடும். பப்பியை வீட்டில் விட்டுவிட்டு அம்மா ஒருநாளும் பிரிந்ததில்லை மருத்துவமனையில் கண்விழித்தபோது கூட பப்பி ஒழுங்கா சாப்பிட்டுச்சா என விசாரித்ததை அப்பா அடிக்கடி கிண்டல் செய்வார். 


மீன் கவுச்சி வீசும் எங்கள் வீட்டிற்குத் தகுந்தாற்போல் பப்பியும் சுத்த அசைவம், கொஞ்சம் பிஸ்கட் இரவு ஒருகுவளை பால் விரும்பி சாப்பிடும். குழத்தைகள் என்றால் பப்பிக்கு மிகவும் பிடிக்கும் சுபிக்ஷா பிறந்து கைக்குழந்தையாக வீட்டிற்கு தூக்கிவந்தலிருந்து இன்றுவரை எங்களைப் போலவே அவள்மீது தனி பிரியம் வைத்திருந்தது. மாலை வேளையில் தம்பியின் பைக்கில் ஏறிக்கொண்டு ஊர்சுற்றுவதை வாடிக்கையாகவும் வீட்டில் சுதந்திரமாக எல்லா இடங்களையும் சுற்றித்திரியும் பப்பி அப்பாவின் அதட்டலுக்கு மட்டும் சிறிது பயப்படும்.

வளர்ந்து பெரிதான பப்பியை சரியான இணை சேர்த்திருந்தோம். இரண்டுவருடங்களுக்கு முன் கருவுற்றிருந்த பப்பி வீடு முழுவதும் குட்டிகளை தவழவிடும் என்ற ஆவலில் இருந்தோம். ஆனால் வயிற்றில் ஏற்பட்ட ஏதோ தொந்தரவினால் உடல்நிலை மோசமடைந்த பப்பி மட்டுமே எங்களுக்கு திரும்ப கிடைத்தது. சிறிது நாட்களுக்குப்பின் தேரிய பப்பி மீண்டும் மகாராணியாக வீட்டைச்சுற்றி வளம்வந்தது. சென்றவாரம் ஊருக்குசென்ற போது வாசலில் வந்து வழக்கமாக வரவேற்ற பப்பி சற்று சுனங்கியே இருந்தது. இரண்டு வருடங்களாக எங்கள் வீடே அந்த நிலமையில் இருந்த காரணத்தால் பப்பியை சரிவர கவணிக்கவும் தவறியிருந்தோம். சில நாட்களாக அது அப்படித்தான் இருக்கிறது என தெரிந்தபோது உள்ளுக்குள் சற்று பயமெடுத்தது. சரியான மருத்துவரிடம் கொண்டு காண்பித்து பப்பி கருவுற்றிருக்கிறாள் என அறிந்துகொண்டபோது மீண்டும் சந்தோசம் பிறந்திருந்தது. எல்லாம் சரியாக இருக்கிறது என மருத்துவர் கூறியதும் சற்று நிம்மதியாகவும் இருந்தது.

மனிதர்களிடம் நெருக்கிப் பழகும் விலங்குகளில் நாய் மட்டுமே தனித்துவமானது. மனிதன் குகையில் வசித்த காலத்தில் ஓநாயை பழக்கியிருந்தான் இந்த ஓநாயின் பரிணாம வளர்சியில் தொடங்கிய உறவுதான் நாயை மட்டும் அதிகமாக நேசிக்கும் செல்லப்பிராணியாகவும் நெருங்கிய உறவாகவும் வைத்திருக்கிறது. பல நூற்றாண்டுகளாக நாய்கள் மனிதர்களிடம் நெருங்கி பழகிய காரணத்தால் அவனது கட்டளைக்கும் அன்புக்கும் அடிபணிந்தே வந்திருக்கின்றன. கண் பார்வையற்றவர்களுக்கும் வயதான மற்றும் நோயாளிகளுக்கும், காவல், மற்றும் உயிர்காக்கும் உதவிக்கும் உற்ற துணையாக இருந்த நாய்களைப் பற்றிய கதைகள் உலகில் ஏராளம். ஒவ்வொரு வீட்டிலும் வேண்டாவிருப்பாக வளர்த்தால்கூட விசுவாசமிக்க நாய்களைப்பற்றி சுவாரசியங்களும் நினைவுகளும் அதிகம்.

காலையில் வீட்டிலிருந்து அழுகையுடன் அந்த செய்தி வந்தது. மீண்டும் பப்பிக்கு அதே பிரச்சனை தெந்தரவு செய்ய, இந்தமுறை போதுமென நினைத்து எங்களைவிட்டு நிரந்தரமாக பிரிந்தது. ஊருக்கு செல்லும் போதெல்லாம் ஓடிவந்து முதல் ஆளாக காலைச் சுற்றிக்கொள்ளும் பப்பி இனி என்னை வரவேற்க வாசலுக்கு ஒருபோதும் வராது. சென்றுவருகிறேன் என ஊரிலிருந்து புறப்படும்போது வாசல்வரை வந்து வாலாட்டி அனுப்பும் அந்த பார்வையும் இனி எனக்கு கிடைக்காது. அதன் ஆஸ்தான படுக்கையும் எங்களின் சண்டையும் இனி காலியாகத்தான் இருக்கும். ஒன்றுபோனால் மற்றொன்று கிடைக்கும் என மனதை தேற்றிக்கொண்டாலும் ஒன்றின் இடத்தை மற்றொன்றால் நிரப்பிவிட முடியாது என்பதை அறிவேன். இன்றைய நாள் மோசமாகவே தொடங்கி அப்படியே முடிந்திருந்தது. அலுவலகம் முடிந்து தங்கியிருக்கும் அறைக்கு வந்து சலிப்புடன் விழுந்தேன். வீட்டின் ஒரு நபராக வெள்ளையாக சுற்றித்திரியும் அந்த உருவம் மனதிற்குள் நகர்ந்து கொண்டிருந்தது. சரி ஏதாவது வேலை செய்யலாம் அப்போதாவது பப்பியைப்பற்றிய நினைவுகள் வராது என நினைத்தேன். ஒருவாரம் அழுக்குத்துணிகள் நிறைய தேங்கியிருந்தது துவைக்கலாம் என பொறுக்கிக் கொண்டிருந்தேன் கசங்கிக் கிடந்த காலுறையில் பப்பியின் வெள்ளை முடிகள் சில ஒட்டியிருந்து. பலநூறு மைல்களுக்கு அப்பால் ஒட்டிக்கொண்டுவந்த அந்த முடிகள் வெறும் "மயிர்" என எனக்குத் தோன்றவில்லை..