இன்ன பிற.


இதுதான் பிடிக்கும் என எதுவுமில்லை இன்னபிற என்பதுதான் அடியேனின் சுவை, அதனைத் தேடி, துரத்தி, பொறுக்கி மேய்ந்து, அசைபோடுவதில்தான் பொழுது கழிகிறது. பாடல்களுக்கான தேடுதலும் ரசனையும் அதே வகைதான் தனிப்பட்ட மொழி, இசை, பாடகர் என ஒருதலைபட்சமாக சாய்வதில்லை கிடைக்குமிடத்தில் பொறுக்கிக் கொள்வேன். அப்படி சமீபத்தில் மேய்ந்த புதிய பாடல்கள் இவை கொஞ்சம் அசைபோடுகிறேன்.

Cham Cham Cham - Baaghi (ஹிந்தி).

தெலுங்கில் டார்லிங்கை (திரிஷா) நனைத்து, தமிழில் ஸ்ரேயாவை நனைத்து, ஹிந்தியில் ஷாரதா கபூரை நனையவிட்டிருக்கிறார்கள் மழைக்காக. வர்ஷம் (மழை) படத்தின் ஹிந்தி ரீமேக்கான Baaghi படத்தில் இடம்பெற்ற பாடல்தான் இது, அதே மழைச்சாரலில் நனையவைக்கிறது. எல்லா படத்திலும் சோகமாக இருக்கும் ஷாரதா கபூர் (Aaashiqui2-ல் நடித்தவர்) மழையில் நனைந்தபடியே இதில் ஆட்டம் போட்டிருக்கிறார். படத்திற்கு பாடல்கள் முக்கியம் என்பதால்  நான்கு ஐந்து இசையமைப்பாளர்கள் குறிப்பாக இந்த பாடலுக்கு Meet bros இசையமைத்து இடையில்வரும் ஆண் குரலையும் கொடுத்திருக்கிறார். Monali Thakur -ன் மயக்கும் குரலில் குதுகலமான மழைபோல் இயல்பாக பொழிகிறது இந்த பாடல்.


I Love You Mummy - Bhaskar the Rascal (மலையாளம்).

மம்முட்டி, நயன்தாரா, சிறந்த கதை, எதார்த்தம், என சூப்பர்ஸ்டார் வேல்யூ இருந்தாலும் சந்திராயன் செல்லும் ராக்கெட்டில் போஸ்ட்டர் அடித்து ஒட்டி ஆர்ப்பாட்டம் செய்து அலட்டிக்கொள்ளாமல்  மலையாளத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம்தான் Bhaskar the Rascal. படத்திற்கு இசை Deepak Dev, அவரது மகள் Devika -வின் மழலையில் Shweta Mohan உடன் இணைந்து அழகாக ஒலிக்கிறது I Love you Mummy பாடல். அப்பா - மகள் சென்டிமென்ட் ஹிட்டாகும் தற்போதைய டிரன்டில் அம்மா- மகளின் பாசத்தை கவிதையாக பேசுகிறது. அன்னையர் தினத்திற்கான ஸ்பெஷல் பாடல் இனிய தாலாட்டு.


La Bicicleta - Carlos Vives & Shakira (ஆங்கிலம்).

நீண்ட நாட்களுக்குப்பிறகு தேவதை Shakira -வின் ஹிட்பாடல். Carlos Vives என்ற லத்தின் பாடகருடன் இணைந்து La Bicicleta ஆல்பத்திற்காக பாடியிருக்கிறார். Loca Loca பாடலுக்குப் பிறகு மிகவும் பிரபலமான கொலம்பியன் வெர்சன் பாடல், La Bicicleta என்றால் Bi Cycle என்று அர்த்தம். ஆர்ப்பரிக்கும் இசையுடன் கொலம்பியாவின் தெருக்களை சுற்றிவருகிறது இந்த பாடல்.


Ey Sandakaara
Usuru narambula - Iruthisutru (தமிழ்).

இறுதிச்சுற்று படத்தின் இந்த பாடல்களுக்குப் பிறகு சமீபத்தில் வெளிவந்த புதிய பாடல்கள் அவ்வளவு சுவாரசியமானதாகவும் கொஞ்சம் புதுமையாகவும் இருப்பதாக தெரியவில்லை. தீ யின் குரலில் சந்தோஷ்நாராயணனின் இசையில் குதுகலமாகவும் கொஞ்சம் சோகமாகவும் சண்டைக்காரியின் உணர்வுகளாக வெளிப்படும் இந்த பாடலை விட்டு (ஏனோ தெரியவில்லை)  அடியேன் இன்னும் வெளிவரவேயில்லை (Repeate).