☰ உள்ளே....

அவளும் நானும்.இலக்கிய பாடல்கள் மற்றும் பாரதியார், பாரதிதாசன் கவிதைகள் போன்றவைகளை அழகான திரைப்பட பாடல்கள் வடிவில் கேட்பதென்பது மிக அரிது. தேர்தல் முடிந்தும் தொகுதி பக்கம் வரும் எம்.எல்.ஏ மாதிரி அத்தி பூத்தார்போல எப்போதாவது வரும் அப்படிப்பட்ட பாடல்கள் கவணிக்கப்படாமலே காற்றில் கரைந்துவிடுவதுண்டு, குற்றம்கடிதல் திரைப்படத்தில் வரும் சின்னஞ்சிறு கிளியே பாரதியின் வரிகளுக்குப் பிறகு அந்த வரிசையில் வெளிவரவிருக்கும் பாடல்தான் "அவளும் நானும்". பாரதிதாசனின் கவிதை வரிகளை சிதைக்காமல் முன்பின் மாற்றி "அச்சம் என்பது மடமையடா " திரைப்படத்திற்காக இதனை உருவாக்கியிருக்கிறார்கள்.ஒரு இனிமையான தருணத்தில் நினைவுகளை அசைபோட்டுக் கொண்டே பயணிப்பதுபோல் கடக்கிறது ரஹ்மானின் இசை. பாடலின் நடுவே வரும் அந்ந வயலின் சிம்பொனி மற்றும் புல்லாங்குழல் ரீங்காரத்தில் ரஹ்மான் மீண்டும் தொன்னூறுக்கு திரும்புகிறார்( இதைத்தான் சார் நாங்க எதிர்பார்க்கிறோம்). அப்பாவை அப்படியே நினைவுபடுத்துகிறார் விஜய் யேசுதாஸ் அதே அமைதியான குரல்.

காற்றில் தவழ்ந்த அந்த பாடல் காட்சிகளாய் எப்படியிருக்கும்?, தமிழ் காதலோடு கலந்த பாரதிதாசனின் "அவள்!" எப்படி இருப்பாள்? - மனதிற்குள் ஓட்டிப்பார்த்தேன். ஓவியர் மாருதியின் கைவண்ணங்களில் உயிரோட்டமாக இருக்கும் பெண் ஓவியங்கள் என் நினைவுக்கு வந்தன. வார இதழ்களில் கதை மற்றும் கவிதைகளுக்காக மாருதி அவர்கள் வரைந்த அந்த முகங்களைக் கொண்டு இந்த பாடலை காட்சிப் படுத்தியிருக்கிறேன் ஒரு சிறிய முயற்சி.மூல வரிகள் பாரதிதாசனின் கவிதை தொகுப்பிலிருந்து.

நானும் அவளும்! உயிரும் உடம்பும்,
நரம்பும் யாழும், பூவும் மணமும்,
தேனும் இனிப்பும், சிரிப்பும் மகிழ்வும்,
(நானும் அவளும்!)

திங்களும் குளிரும், கதிரும் ஒளியும்
மீனும் புனலும், விண்ணும் விரிவும்,
வெற்பும் தோற்றமும், வேலும் கூரும்,
ஆனும் கன்றும், ஆறும் கரையும்
அம்பும் வில்லும், பாட்டும் உரையும்
(நானும் அவளும்!)

அவளும் நானும் அமிழ்தும் தமிழும்
அறமும் பயனும், அலையும் கடலும்,
தவமும் அருளும், தாயும் சேயும்,
தாரும் சீரும், வேரும் மரமும்
(அவளும் நானும்!)

அவலும் இடியும், ஆலும் நிழலும்;
அசைவும் நடிப்பும், அணியும் பணியும்,
அவையும் துணிவும், உழைப்பும் தழைப்பும்,
ஆட்சியும் உரிமையும், அளித்தலும் புகழும்!
(அவளும் நானும்!)

பாடலுக்காக மாற்றப்பட்ட வரிகள்.

அவளும் நானும்
அமுதும் தமிழும்
அவளும் நானும்
அலையும் கடலும்
அவளும் நானும்
தவமும் அருளும்
அவளும் நானும்
வேரும் மரமும்

ஆலும் நிழலும்
அசைவும் நடிப்பும்
அணியும் பணிவும்
அவளும் நானும்

அவையும் துணிவும்
உழைப்பும் தழைப்பும்
அவளும் நானும்
அளித்தலும் புகழும்

****
மீனும் புனலும்
விண்ணும் விரிவும்
வெற்பும் தோற்றமும்
வேலும் கூரும்

ஆறும் கரையும்
அம்பும் வில்லும்
பாட்டும் உரையும்
நானும் அவளும்

நானும் அவளும்
உயிரும் உடம்பும்
நரம்பும் யாழும்
பூவும் மனமும்

நானும் அவளும்
உயிரும் உடம்பும்
நரம்பும் யாழும்
பூவும் மனமும்

அவளும் நானும்
தேனும் இனிப்பும்
அவளும் நானும்
சிரிப்பும் மகிழ்வும்

அவளும் நானும்
திங்களும் குளிரும்
அவளும் நானும்
கதிரும் ஒளியும்

அவளும் நானும்
அமுதும் தமிழும்
அவளும் நானும்
அலையும் கடலும்
அவளும் நானும்
தவமும் அருளும்
அவளும் நானும்
வேரும் மரமும்

ஆலும் நிழலும்
அசைவும் நடிப்பும்
அணியும் பணிவும்
அவளும் நானும்

அவையும் துணிவும்
உழைப்பும் தழைப்பும்
அவளும் நானும்
அளித்தலும் புகழும்