காதல் வாகனம்..


வேலை காரணமாக ஜப்பானில் வசித்துவந்த அமேரிக்கரான "Revarant Jonathan Kobi" என்பவர்  உடல்நலக் குறைவால் நடக்கமுடியாது போன தன் மனைவிக்கு வெளி உலகத்தையும் மகிழ்ச்சியையும் காண்பிக்க நினைத்தார். நகை வேண்டும், பட்டுப்புடவை வேண்டும், பீட்சா வேண்டும், அது இது வேண்டும், ஷாப்பிங் போகலாம், டின்னர் சாப்பிடலாம் என சம்பளத்தேதியில் மோனராகத்தோடு கேட்கும் மனைவிபோல் இல்லாமல் அவரது மனைவியும் தன் கணவனோடு சேர்ந்து வெளிஉலகை ரசிக்க ஆசைப்பட்டாள். மரச்சக்கரம் புழக்கத்திற்கு வந்த காலகட்டத்தில் 1869 அம் ஆண்டு தன் மனைவியை வைத்து இழுத்துக்கொண்டு செல்லும் வகையில் மரத்தாலான ஒரு வாகனத்தை Jonathan Kobi தயாரித்தார் அதுதான் கையால் இழுக்கக் கூடிய "ரிக்ஷா" (Rikshaw). அதற்குப்பிறகு அவர் கண்டுபிடித்த வாகனம் நடக்க முடியாத மற்றும் வயதானவர்களுக்கு பெரிதும் உதவ, "Izumi Yosuki" என்பவரின் வடிவமைப்பில் "Suzuki Tokujiro" மற்றும் "Takayama Kosuke " என்பவர்கள் இணைந்து 40000 ரிக்ஷாக்களை 1870 ஆம் ஆண்டு ஜப்பான் முழுவதும் இழுக்கவிட்டனர்.

கையால் இழுக்கக்கூடிய இந்த ரிக்ஷாவிற்குப் பிறகு சைக்கிள் போல் மிதிக்கும் ரிக்ஷா, மோட்டார் வைத்து இழுப்பவை, டிசல் என்ஜினில் ஓடும் ஆட்டோ ரிக்ஷா என மாற்றங்களோடு பல வந்தாலும் Jonathan Kobi கண்டுபிடித்த ரிக்ஷாதான் அனைத்திற்கும் முன்னோடியாக இருந்தது. என்பது தொன்னூறுகளில் பிறந்த நமக்கு MGR அல்லது சத்தியராஜ் படம் ஒட்டிய சிறிய காற்றாடி வைத்த, பளபளக்கும் வேலைபாடுகளுடன் கூடிய மிதிக்கும் ரிக்ஷாவில் பயணித்த அனுபவம் நிச்சயம் இருக்கும். கண்ணாடியை ஏற்றிவிட்டு Ac காற்றில் பயணிக்கும் எந்திரமயமாகிவிட்ட நவீன யுகத்திலும் அந்த பசுமையான ரிக்ஷா நினைவுகள் மீதமிருக்க காரணம், Jonathan Kobi அவரது மனைவியின்மேல் வைத்திருந்த அந்த காதலாகக் கூட இருக்கலாம்.