பாடும் பறவையின் மௌனம்.



உலக புகழ்பெற்ற புத்தகங்கள், விருதுகளை தட்டிச் சென்ற படைப்புகள் இவற்றை மொழிபெயர்ப்பதில் சில நேரங்களில் சிக்கலான சவால்களை சந்திக்க நேரிடலாம். உலக மொழிகள், கலாச்சாரம், வாழ்க்கை முறை, பெயர்கள், வாய்வழி உரையாடல்கள் இவற்றின் சுவை மாறாமல் மொழிபெயர்த்து வாசகனை புத்தகத்தின் பக்கத்திற்குள் இழுத்துக் கொண்டுவர சில தடைகளைத் தாண்ட வேண்டும். புலிட்சர் விருதுபெற்ற " To Kill a Mocking bird " என்ற இந்த நாவலை மொழிபெயர்த்ததிலும் மேற்கண்ட சில நடைமுறை சிக்கல்கள் தெரிகின்றன அவற்றைத் தாண்டி இந்த புத்தகத்தை புரட்டலாம் வாருங்கள்.

நாவலின் கதை "Southern Gothic " மற்றும் "Bildungsroman" என்று சொல்லக்கூடிய புனைவுப் பகுதியை சாந்தது. இந்த நாவலை எழுதிய "Harper Lee" தன்னுடைய சிறுவயது அனுபவங்களை தான் வசித்துவந்த, தன்னோடு வாழ்ந்த நபர்களோடு, நிகழ்வோடு, கதையாக பின்னியிருக்கிறார். கதை 6 வயது சிறுமி ஸ்கௌட்டின் பார்வையில் விரிகிறது. அவளது தந்தையான ஃபிஞ்ச் என்பவரின் அன்பும், அண்ணன் ஜெப் என்பவனின் ஆறுதலும், நண்பர்களின் தோழமையும், விளையாட்டு அனுபவங்களும் , பக்கத்தில் வசிப்பவர்களின் குணாதியங்களோடு சேர்த்து அக்காலகட்டத்தில் அமேரிக்காவில் நிலவிய கருப்பு வெள்ளை இனப் பிரச்சனையைத் தொட்டு கதை பயணிக்கிறது.

வழக்கரிஞர் வேலை செய்யும் ஆட்டிகஸ் ஃபிஞ்ச் தன் மகன் ஜெப் மற்றும் 6 வயது மகள் ஸ்கௌட்டுடன் அமேரிக்காவில் உள்ள அலபாமா மாநிலத்தில் வசித்துவருகிறார். அமைதியாக சென்றுகொண்டிருந்த வாழ்க்கையில் அவர் ஒரு வழக்கை சந்திக்க நேருகிறது. அலபாமா மாநிலத்தில் வெள்ளையினத்தைச் சார்ந்த பெண்ணை பலாத்காரம் செய்துவிட்டதாக டாம் ராபின்சன் என்ற நீக்ரோ இளைஞன் குற்றம் சாட்டப்படுகிறான். அவனுக்காக வாதாட ஃபிஞ்ச் முன்வருகிறார். நகரத்தில் வசித்துவரும் பெரும்பாலான வெள்ளையின மக்களுக்கு இது பிடிக்கவில்லை. ஆனால் ஃபிஜ்ச் பிடிவாதமாக ஒடுக்கப்பட்ட மக்களுக்காக வாதாடியே தீருவேன் என முடிவில் இருக்கிறார். வழக்கின் முடிவு என்ன? ஃபிஞ்ச் சந்தித்த சாவல்கள் என்ன? இந்த வழக்கில் அலபாமா இனப் பிரச்சனையில் மாற்றம் ஏற்பட்டதா? நீக்ரோ இளைஞனின் கதி என்னவாயிற்று? ஆறுவயது சிறுமி ஸ்கௌட்டின் வாயிலாக சொல்லக்கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.

முப்பதுகளில் அமேரிக்காவில் நிலவிய கருப்பு வெள்ளை இனப் பாகுபாட்டை புனைவுக் கதையின் வாயிலாக எடுத்துச் சொன்னதற்காக இந்த நாவல் புலிட்சர் பரிசு பெற்றது. கதையை விளையாட்டாக நகச்சுவை கலந்து சொல்லப்பட்ட விதம் அனைவரையும் கவருகிறது. சிறுமி ஸ்கௌட்டின் தந்தை ஃபிஜ்ச் போல நமக்கொரு தந்தை கிடைக்கவில்லையே என புத்தகத்தை வாசித்தபின் தோன்றக்கூடும். 1962 -ஆம் ஆண்டு "Robert Mulligan" இந்த நாவலை திரைப்படமாக எடுத்திருந்தார். புகழ்பெற்ற நடிகர் "George Peck " மற்றும் "Marry Badham" நடித்திருந்தனர், "Elmer Bernstein " இசையமைத்திருந்தார். திரைக்கதை, சிறந்த நடிப்பு, இசை என ஆஸ்கார் முதல் கோல்டன் குளோப், அகாடமி அவார்டு வரை அள்ளிச் சென்றது இந்த கதை.


1926 -ஆம் ஆண்டு அலபாமா மாநிலத்தில் உள்ள மான்ரோவில் பிறந்தார். சட்டம் பயின்ற இவர் கல்லூரி இதழ்களில் எழுதத் தொடங்கினார். இனவெறிக்கு எதிராக அனல்பறக்கும் வார்த்தைகளால் நிறம்பியிருக்கும் இவரது எழுத்துக்கள். 1950-ல் நியூயார்க்குக்கு இடம்பெயர்ந்து தன் வேலையை விட்டுவிட்டு முழுநேர எழுத்தாளரானார். பல பத்திரிக்கைகளில் கட்டுரைகள் எழுதிய இவர் தன் வாழ்நாளில் To Kill a Mocking bird (1960) மற்றும் Go set Watchman (2015) என்ற இரண்டு நாவல்களை மட்டுமே எழுதியுள்ளார்.  அதில் இந்த நாவலுக்காக இலக்கியத்தின் உயரிய விருதான புலிட்சர் (1961) விருதையும் பெற்றார். மேலும் 2007-ல் அமேரிக்காவின் உயரிய விருதான "Presedent of Litrature " விருது வாங்கிய இவர் பிப்ரவரி 2016 ஆம் ஆண்டு மறைந்தார்.

பாடும் பறவையின் மௌனம்.
சித்தார்த்தன் சுந்தரம்.
எதிர் வெளியீடு