☰ உள்ளே....

மாலைப்பொழுதிலொரு - (பாரதி).

சார், எல்லா புத்தகங்களையும் வாசிக்கிறீர்கள் பாரதியாரின் கவிதைகளை படித்திருக்கிறீர்களா?  என துரை என்பவர்தான் எனக்கு பாரதியை ஆழம் வரை காட்டினார். பள்ளிக்கூட வயதில் பரிட்சைக்கு கிடைக்கும் ஐந்து மதிப்பெண்னுக்காக பாரதியை படித்திருக்கிறேன். புகழ்பெற்ற அவரது கவிதைகள் ஒன்றிரண்டு தெரியும் ஆனால் அடி ஆழம்வரை தொட்டதில்லை. பரிசாக கிடைத்த பாதியாரின் கவிதைகள் தொகுப்பு என் புத்தக அலமாரியில் நீண்ட வருடங்களாக தூங்கிக் கொண்டிருந்தது. உலக இலக்கியம் சிறந்த படைப்புகள் என ஒருசிலவற்றை மேய்ந்த பிறகே பாரதியை கையில் எடுத்தேன். ஏழை கவிஞன், அன்பு, காதல், கோபம், பக்தி, கனவு, ஆசை, வறுமை, இயலாமை, ஆசுவாசம் என கவிதையில் வாழ்ந்தவன் இந்த மீசைக்காரனத் தவிர உலகில் எவருமில்லை. அவனுக்கு மிஞ்சிய கவிஞன் என யாருமில்லை. கொஞ்சம் ஆசுவாசம் மற்றும் சில வலி மறைய ஆறுதல் தேவைப்பட்டால் உடனே பாரதியை கையில் எடுத்துவிடுவேன் அவன் கவிதைவரிகளில் தொலைந்து போவேன் இல்லை என்றால் ஒலிவடிவில் அவன் பாடல்களில் சரணடைந்து விடுவேன். பாரதியின் கவிதைகளை நல்ல இசையோடு பாடல்களாகக் கேட்பது தனியழகு. கர்நாடக சங்கீதத்திலும் சில திரைப்படங்களிலும் அவவனது பாடல்களை கேட்கலாம். பாம்பே ஜெயஸ்ரீயின் குரலில் ஒலிக்கும் இந்த கவிதை பாடல் பாரதி எனும் மகா சமுத்திரத்தில் ஒரு துளி. ஒலி வடிவில் இருந்த அந்த துளியை "மாலைப்பொழுதிலொரு" ஏழை மனதிற்கு சற்று ஆசுவாசமளிக்கலாம் என்ற நம்பிக்கையில் வீடியோவாக காட்சிப் படுத்தியிருக்கிறேன். ஒரு சின்ன முயற்சி.