☰ உள்ளே....

எண்ணிக்கை.


எண்ணம் எப்படி இருந்தால் என்ன? இன்றைக்கு எண்ணிக்கைதான் முக்கியம். தனி மனிதனின் அடையாளம் என்பது வசதி வாய்புகள், சொத்து பத்து பணம், உறவுகள் என்பதன் எண்ணிக்கையை வைத்தே அளவிடப்படுகிறது. பேஸ்புக், டிவிட்டர் போன்றவற்றில் போடப்படும் ஸ்டேடஸ்களுக்கு விழும் லைக் கமான்ட்டுகள் கூட நாம் வைத்திருக்கும் நண்பர்களின் எண்ணிக்கையை பொருத்தே அமையும். அதேபோல் நமது இனிமையான நினைவுகளின் எண்ணிக்கையை வைத்தே மகிழ்ச்சியான வாழ்க்கையும் இருக்கிறது. அதைவிடுங்கள் பிரம்மிப்பூட்டும் சில பொதுவான ஆச்சரியமான எண்ணிக்கைத் தகவல்களை கொஞ்சம் பார்க்கலாம்.

இந்த உலகம் முக்கால்வாசி கடலால் ஆனது, அந்த கடலின் பரப்பளவை வைத்து a2 b2 கணக்கெல்லாம் போட்டு கடல்நீரின் மொத்த எடையை தோராயமாக கணக்கிட்டிருக்கிறார்கள் அதன் எண்ணிக்கை 1450000000000000000 Kg. அதே கடலில் வாழும் உயிரினங்களில் மீன், ஆமை, நத்தை, என இதுவரை 199146 இனங்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். ஆனால் நமக்குத் தெரியாத எண்ணிக்கை 25 மில்லியன் இனங்கள் கடலில் இருக்கிறதாம் (கடல்கன்னி கூட இருக்கலாம்) .
.......

இந்தியா வளர்கிறது ஒளிர்கிறது, மிளிர்கிறது என வாய்கிழிய கத்தினாலும் அதெல்லாம் ஒருபக்க வளர்ச்சி. கல்வி, மருத்துவம், விவசாயம் இந்த மூண்றில் எந்த ஒரு நாடு தன்னிகர் பெறுகிறதோ அந்த நாடுதான் வளர்ந்த நாடாகக் கருதப்படுகிறது. நமக்கு என்ன குறைச்சல் என்கிறீர்களா? கல்வியை எடுத்துக்கொள்வோம் இந்தியாவில் வருடம்தோறும் பள்ளிக்கூடம் செல்லாத குழந்தைகளின் எண்ணிக்கை சுமார் 20000000 (நாம இன்னும் வளரனும்) .
.......

உலகிலேயே மிகப் பெரிய, சிக்கலான, போக்குவரத்து நிறுவனம் இந்தியன் இரயில்வே சர்வீஸ். 245267 சரக்கு பெட்டிகள், 66392 பயணிகள் பெட்டிகள், 10499 எஞ்சின்களை(அதில் 5633 டீசல், 4823 மின்சாரம், 43 நீராவி எஞ்சின்கள்) இந்தியன் இரயில்வே சொந்தமாக வைத்திருக்கிறது.  டொர்னான்டோ, சாகாப்தி, சுப்பர் பாஸ்ட், ஓட்டை ஒடசல், புதுசு, பழசு என 12617 இரயில்கள் 115000 கிலோமீட்டர் நீளம் கொண்ட இந்திய இருப்புப்பாதையில் தினமும் கொஞ்ச தூரம் வாக்கிங்காவது சென்றுவருகிறது.
(ரிசர்வேஷன் சாப்பாட்டு மெனுவை மாற்றினால் தேவலை).
.......

இதுவரை 7.290 கி.மீ தூரம் ஆழம்வரை பூமியை குடைந்து மனிதன் சென்று வந்திருக்கிறான் எதற்குத் தெரியுமா? எல்லாம் தங்கம் ஆசையாக வாங்கிக் கேட்கும் தங்கத்திற்காக. கர்நாடகா மாநிலத்தில் உள்ள கோலார் தங்கவயலில் இருக்கும் "Champian Kipirts" என்ற இடம்தான் மனிதனால் உருவாக்கப்பட்ட மிக ஆழமான இடமாகும். 2 கி.மீ நீளமும் 2600 அடி ஆழமும் கொண்ட இந்த சுரங்கத்தில் இதுவரை 51200000 டன் பாறைகளை வெட்டி எடுத்திருக்கிறார்கள். இந்த பாறைகளிலிருந்து பெறப்பட்ட தங்கத்தின் மொத்த எண்ணிக்கை 800 டன் (தற்போது மூடப்பட்டுவிட்டது) .
....... 

உலகிலேயே மிகவும் பணக்கார கடவுள் நம்ம திருப்பதி வெங்கிதான். 100000 கோடி சொத்துமதிப்பு கொண்ட இவரை பார்க்க தினமும் 100000 பேர் சராசரியாக வருகிறார். அவர்களுக்கு ஊழியம் செய்ய 25000 பணியாளர்கள் இருக்கிறார்கள். வருடத்திற்கு 225 கோடி வட்டி மட்டுமே சம்பாதிக்கும் வெங்கிக்கு சொந்தமான நகைகளின் எண்ணிக்கை மட்டும் 1200 கிலோ. அதையெல்லாம் மொத்தமாக சிப்ட் பண்ணவேண்டும் என்றால் 2 கண்டெய்னர் தேவைப்படும். (கோவிந்தா கோவிந்தா) .
.......

மனிதனின் கண்கள் தினமும் 13 சொட்டுகள் கண்ணீரை சுரக்கிறது. அதில் 6 துளிகள் காற்றில் ஆவியாகிவிடுகின்றன. மீதமிருக்கும் எண்ணிக்கை மூக்கிற்கு சென்றுவிடுகிறது. இது சராசரிதான் சீரியசாக அழுதாலும், சீரியல் பார்த்து அழுதாலும் வரும் கண்ணீர் துளிகளுக்கு கணக்கில்லை. அதேபோல் சாதாரணமான மனித இதயம் ஒருநாளைக்கு 103680 முறை துடிக்கிறது.

13 - க்கு மேல்
கலங்காமல்
பார்த்துக்கொ(ல்)ள்..
..
103680 முறையும்
உன் பெயர்
சொல்லுதடி இதயம்
என இனி கவிதை எழுதலாம்.
.......

யாகவராயினும் நாகாக்க என்று சொல்லுவார்கள் கண்டிப்பாக நாக்கை அடக்கவேண்டும். ஆனால் பச்சோந்திக்கு இது உதவாது அது நாகாத்தால் ஸ்வாகாதான். தன் நீளத்தை விட எண்ணிக்கையில் இரண்டு மடங்கு நாக்கு அதற்கு இருக்கிறது இரையை பிடிக்க இறைவன் படைத்த அற்புதம். பச்சோந்தி தன்னுடைய நாக்கை கொண்டு 0.07 நொடி துள்ளியத்தில் இரையை பிடித்துவிடும். அதன் நாவல் 45 கிராம் எடையை அசால்டாக இழுத்து தன் சாப்பாட்டு டேபிளுக்கு மெனுவாக கொண்டுவர முடியும்.
........

பொது இடங்களில் புகைபிடிப்பவர்களை வளைத்து வளைத்து பிடிக்கிறார்கள். என்னோட வாய் பொது இடமா என கேட்டால் எக்ஸ்ரா 100 அபராதம் கட்ட வேண்டிவரும். பழைய மாதிரி திருட்டுத்தனமாக இரயில்வே கேட், முட்டுச்சந்து, ஆற்றங்கரைக்கு சிகரெட்டை வாங்கிக் கொண்டு ஓடவேண்டும் போலிக்கிறது. முதலில் விற்பவனை நிறுத்துங்கள் தயாரிப்பவனை தடுத்து நிறுத்துங்கள் என புரட்சி வசனங்களை பேசினால் எதுவும் நடக்கப் போவதில்லை புகைப்பவர்கள் சுயமாக திருந்தினால் மட்டுமே புகையை ஒழிக்க முடியும். உலக மக்கள்தொகையில் 16.1 % பேர் தினமும் ஒரு தம்மாவது அடித்துவிடுகின்றனர் (சீனாவில் 80% இந்தியாவில் 45% அமேரிக்கா 42%) இவர்கள் சேர்ந்து ஒரு ஆண்டிற்கு புகையாக ஊதித் தள்ளும் பணத்தின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?  420 பில்லியன் டாலர். (ஃபூ) .
.......

கடலின் எடை பூமியின் ஆழம் சூரியனின் தூரத்தைகூட துள்ளியமாக அளந்து எண்ணி ஆராய்ந்து வைத்திருக்கிறார்கள். ஆனால் தமிழ் சீரியல்களை ஆராய்ந்தவர் (முடிவு என்ன என்பதை உட்பட) எவரும் இல்லை. எண்ணிக்கை தகவலுக்காக அதிக நாட்கள் ஓடிய டிவி சீரியல்களை தேடினேன் முன்னுக்குப் பின்னான தகவலே கிடைத்ததது. அதை வைத்து தயாரித்த பட்டியல்,

1. கோலங்கள் 1533 - 53
2. கஸ்தூரி 1532
3. திருமதி செல்வம் 1360
4. நாதஸ்வரம் 1356
5. தென்றல் 1325
........

ஏதோ ஓரளவிற்கு எனக்குத் தெரிந்த எண்ணிக்கைத் தகவல்களை தொகுத்திருக்கிறேன். அப்படியே இந்த பதிவை பேஸ்புக்கில் போட்டால் கணக்கு வைத்திருக்கும் 165 கோடிபேர்களில் ஒரு சிலராவது படிப்பார்கள், 2-3 பேராவது லைக்போடுவார்கள். ஒரு நிமிடத்திற்கு 5 பேர் புதிதாக இணையும் பேஸ்புக்கின் சென்றவருட வருமானமான 1792.8 கோடி டாலரை தாண்ட இந்த பதிவு ஏதோ உதவக்கூடும். மேலும் தற்போது நிலவரப்படி 4940.7 கோடி டாலர் சொத்து வைத்திருக்கும் மார்க் சக்கர் பெர்க்கின் மதிப்பின் எண்ணிக்கையும் கொஞ்சம் உயரக்கூடும்.