☰ உள்ளே....

கபாலி...யூரோ கோப்பை... கொரியன் சீரியல்...


கபாலி டிரைலரே பலலட்சம் லைக்குகளை அள்ளியது, சமீபத்தில் இன்டர்நெட்டே சூடாகும்படி பாடல்களையும் வெளியிட்டனர். பாடல்கள் வெளியீட்டிற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு டி.வி, பேஸ்புக் வாட்ஸ்அப், கட்டவுட், போஸ்டர் என எங்கு பார்த்தாலும் கபாலியாக தெரிந்தார். குறிப்பாக போஸ்டர், கொஞ்ச நாட்களாக இல்லாத போஸ்டர் கலாச்சாரம் மீண்டும் தொடங்கிவிட்டதாக தோன்றுகிறது. சென்னையில் எங்கு பார்த்தாலும் கபாலி போஸ்டர் மயம் (நகரத்து மாடுகளுக்கு நல்ல தீனி). நல்லவேளை நடமாடிக் கொண்டிருந்தேன் இல்லையென்றால் முதுகில்கூட போஸ்டர் ஒட்டியிருப்பார்கள். அப்படி என்னதான் அந்த பாடல்களில் இருக்கிறது என கபாலிக்காக இல்லையென்றாலும் சந்தோஷ் நாராயணனுக்காக டவுன்லோடு செய்ய முயற்சித்தேன் வட்டம் சுற்றிக்கொண்டே இருந்தது. சரி எப்படியும் ஒருநாள் காற்றில் வரும் செவிக்கு உணவில்லாத போது சிறிது கேட்டுக்கொள்ளலாம் என விட்டுவிட்டேன்.

.......................................................................

யூரோ கோப்பை கால்பந்து போட்டிகள் தொடங்கிவிட்டது இனி தூக்கம் தொலையும். சச்சினுக்குப் பிறகு கிரிக்கெட் போட்டிகளை பார்பதையே நிறுத்திவிட்டேன் ஆனால் கால்பந்திற்கு அப்படியில்லை, 20 சதவீத முடிகள் நரைத்தாலும் கண்விழித்து போட்டியைக் காணும் சிறுபிள்ளையின் ஆர்வம் இன்னும் குறையவில்லை.பீலே, மரடோனா, பிளிப் லேம், டேவிட் பெக்கம், ரொனால்டோ, ரிவால்டோ, மெஸ்ஸி, காகா இவற்களுக்குப் பிறகு மேனுவல் நூயூவர், தாமஸ் முல்லர், ஐகெர் கெசிலாஸ், ஜேமி வார்டி, ஆலிவர் ஜெரால்டு என அடுத்தடுத்த தலைமுறை வீரர்கள் புதிதாக தோன்றி ரசிக்க வைக்கின்றனர். இதனால்தான் கால்பந்தாட்டத்திற்கு உலகமெங்கும் ரசிகர்கள் இருக்கிறார்கள் போலும். யூரோ கோப்பை என்பது மற்றுமொரு உலககோப்பை போட்டிகள் மாதிரி இந்த வருடம் பெரும் ஜாம்பவான் அணிகள் மோதிக் கொள்கின்றன. சுவாரசியத்திற்கு குறைவிருக்காது. நள்ளிரவு ஆட்டத்தை கண்விழித்து பார்த்துவிட்டு அடுத்தநாள் அலுவலகம் தூங்கி வழியும் அதுதான் குறை. பள்ளிக்கூட வயதில் கால்பந்தே கதியென கிடந்ததுண்டு பிறகு வாழ்க்கை எட்டி உதைக்க விளையாடும் ஆர்வமெல்லாம் தொலைந்தேவிட்டது. தற்போது போட்டிகளை டிவியில் பார்க்கும்போது ஒடிச் சென்று விளையாடத் தோன்றுகிறது. இடுப்பொடிந்து கிடக்கும் அடியேனுக்கு அது சாத்தியமில்லை எனத் தெரிந்தும் மனம் கால்பந்தை உதைத்துக்கொண்டுதான் இருக்கிறது.

...........................................................

கொரியன் திரைப்படங்களைப் போலவே கொரியன் சீரியல்களும் உலக பிரபலம். Boys over Flower, You're Beautiful, Playful kiss, The Heirs, Heart Strings, The first shop of Coffee, City Hunter, Angel eyes, High school Love, 49 Days, Iris என இளசுகளின் சாய்ஸ் இந்த கொரியன் சீரியல்கள். இந்தி சேனல்கள் சிலவற்றில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு ஒளிபரப்பப்பட்ட இவைகள் தற்போது தமிழ் சேனல்களிலும் காணக் கிடைக்கிறது. இரண்டாவது மனைவி பிரச்சனை, முதல் புருசன் தொல்லை, கேன்சர், குழந்தையில்லை, மாமியார் - மருமகள் டிஸ்யூம், தொலைந்து போனவர்கள், கடத்தப்பட்டவர்கள், கொலை, ஒரு ஹீரோயின், ஐந்து காதலன், கூட்டுக் குடும்பம், குழப்பம், காச்மூச், டாமல்-டூமீல் பின்னணி இசை, தொடரும் - என ச்சீ! இந்த பழம் புளிக்கும் சீரியல்களை தவிர்க்க நினைத்தால் இவற்றை ரசிக்கலாம். தூங்கி வழியாத கதைக்களம், இயல்பான நடிப்பு, இழுவையில்லாத முடிவு என கொரியன் சீரியல்கள் பார்பதற்கு ஆர்வமூட்டுகின்றன. சீரியல்களில் வருபவர்கள் பொம்மைபோல் அழகாக இருக்கின்றனர் ஆண் எது? பெண் எது? என்றுதான் தெரியவில்லை.