உண்மைக் கதைகள்.




உண்மை நிகழ்வுகளை திரைப்படமாக்குவது சவால். எல்லோருக்கும் தெரிந்த பரவலாக விமர்சிக்கப்பட்ட நிகழ்வுகள் என்றால் அதை திரைப்படமாக்க மாபெறும் தைரியம் தேவைப்படும். இங்கிருக்கும் இனம், மொழி, மதம், அரசியல் மற்றும் நிகழ்வோடு தொடர்புடையவர்களை சம்மதித்து, சமாளித்து அதை காட்சிப்படுத்துவது என்பது கத்திமேல் நடப்பதற்குச் சமம். அதையும் தவிர்த்து சென்சார் போர்டு, மனிதநல ஆணையம், புளூகிராஸ், ரெட்கிராஸ், ஆரஞ்சு, மஞ்சள், ஊதா, கருப்பு, என எல்லா கிராஸ்களையும் கிராஸ் செய்து, குப்பை படத்தின் டிரைலரையும் பாடல்களையும் YouTube சுடாகும் வரை பார்க்கும் நம் ரசிகர்களிடம் கொண்டு சேர்ப்பதற்குள் இயக்குனருக்கு இடுப்புவலி வந்துவிடும்.தமிழில் அப்படி வெளிவந்த திரைப்படங்கள் குறைவு என்பதை விட மிகக் குறைவு என சொல்லலாம். இங்கு பெயர் வைத்தாலே பூகம்பம் வந்துவிடுகிறது. ஆனால் வடக்கே 1947 -ல் கிடைத்த சுதந்திரம் கொஞ்சம் மிச்சமிருக்கிறது, ஹிந்தி, மராத்தி, குஜராத்தி, வங்காளி மொழியில் வருடத்திற்கு இரண்டு திரைப்படங்களாவது மசாலா வாடையில்லாமல் உண்மை நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு வெளிவருகின்றன. வசூல் சாதனை என்றில்லாமல் ஓரளவிற்கு கையை கடிக்காமல் ரசிகர்களையும் ஏமாற்றாமல் விருதுகளையும் அள்ளிச் சென்றுவிடுகின்றன. அப்படி சமீபத்தில் வெளிவந்த இரண்டு திரைபடங்கள் "Sarbjit" மற்றும் "Airlift" இரண்டு திரைப்படங்களும் 1990 ஆம் ஆண்டு நிகழ்ந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது. இரண்டு கதைகளும்  தனி மனிதனின் போராட்டத்தின் வாயிலாக மொத்த சம்பவத்தையும் விவரிக்கின்றன. 




Sarabjit (சரப்ஜித்).

பஞ்சாபில் உள்ள Taran Tarn மாவட்டத்தில் தன் மனைவி மற்றும் அழகிய இரண்டு பெண் குழந்தைகளுடன் வசித்து வந்தவர் Sarabjit Singh. பாகிஸ்தானின் எல்லையான இவரது கிராமம் சுதந்திரம் அடைந்ததிலிருந்து சற்று கலவரத்துடன் கொதித்துக் கொண்டிருக்கும். 1990 ஆம் ஆண்டு இந்திய எல்லையைத் தாண்டி பாகிஸ்தான் பஞ்சாப் கிராமத்திற்கு சுபகாரியத்திற்காக சென்றுவந்த இவரை இராணுவம் பிடித்துக் கொண்டது. இந்திய உளவாளி எனக் கருதி இவரை லாகூர் குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு தொடர்பு படுத்தியது. அப்பாவியான இவரது கைதை எதிர்த்து பஞ்சாபில் போராட்டம் வெடித்தது, இந்திய இராணுவத்தின் சார்பில் பாகிஸ்தானுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. போதிய விளக்கம் இல்லை என பாகிஸ்தான் மறுக்க சரப்ஜித் சிறையில் காலம் தள்ளினார். சரப்ஜித்தை மீட்க அவரது தங்கை Delbir Kaur களத்தில் இறங்கினார், திறக்காத கதவுகளையும் தட்டத் தொடங்கினார். தன் வாழ்நாளின் பெரும் பகுதியை தன் அண்ணனை மீட்பதற்காக போராடினார். அவரது குரல் பாராளுமன்றம் வரை ஒலித்தது. இந்திய அரசின் சார்பில் அளித்த விளக்கம் எதையும் பாகிஸ்தான் செவிசாய்க்கவில்லை. இருபத்து மூண்று வருட போராட்டத்திற்குப் பிறகு 2013 ஆம் ஆண்டு இந்தியாவில் முப்பை குண்டுவெடிப்பிற்கு தொடர்புடைய அப்சல்குரு தூக்கிலிட்ட சிலநாட்கள் கழித்து மே மாதம் 2 ஆம் நாள் பாகிஸ்தான் சிறையில் மர்மமான முறையில் சரப்ஜித் இறந்துபோனார். பாகிஸ்தான் சார்பில் சிறைக் கலவரத்தில் அவர் இறந்து போனார் என பதிவு செய்யப்பட்டாலும் இந்த வழக்கு இன்றுவரை நிழுவையில் உள்ளது. சரப்ஜித் இறந்ததை பஞ்சாப் முழுவதும் மூன்று நாட்கள் துக்கமாக கடைபிடித்தனர். அந்த சரப்ஜித்தின் கைது நடவடிக்கையையும், சிறைச்சாலையில் 23 வருட கொடுமையான வாழ்க்கையையும். அவரது தங்கையின் உரிமை போராட்டத்தின் வாயிலாக விவரிக்கிறது இந்த திரைப்படம்.
சரப்ஜித்தாக Randeep Hooda நடித்திருக்கிறார், அவரது தங்கையாக போராட்ட களத்தில் நடித்திருப்பவர் Aishwarya Rai. இந்த திரைப்படத்தை கவணமுடன் இயக்கியவர் Omung Kumar. இசை, ஒளிப்பதிவு என உண்மைச் சம்பவத்தை கண்முன் கொண்டுவருகிறது இந்த திரைப்படம்.


Air Lift (ஏர் லிப்ட்).


1990 ஆம் ஆண்டு வளைகுடா போர் தொடங்கிய தருணம், சதாம் ஹூசைன் குவைத் நாட்டின் மீது போர் தொடுத்தார். மூன்றாம் உலகப்போர் தொடங்கிவிடுமோ என உலகமே இதை கவணித்துக் கொண்டிருக்க, இந்தியாவில் உள்ளவர்களுக்கு குவைத்தில் வேலைசெய்யும் 171000 உறவுகளைப் பற்றிய பயம் தொற்றிக்கொண்டது. இந்திய அரசும் குவைத்தில் வாழும் ஒட்டுமொத்த இந்தியர்களை மீட்க முயற்சி செய்தது. I.K குஜ்ரால் பிரதமராக இருந்த அச்சமையத்தில் அத்தனை நபர்களையும் எப்படி மீட்பது என ஆலோசிக்கப்பட்டது. போர்சூழல் நிகழும் நேரத்தில் இராணுவத்தை அனுப்புவது இயலாத காரியம் என நினைத்து அமைதியாக மீட்க முடிவு செய்தனர். இறுதியில் முறையாக அனைவரையும் மீட்க வான்வழியை தேர்வு செய்தனர். இந்தியன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானங்களை இதற்காக பயன்படுத்தினர். 1990 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13 ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 20 வரை மொத்தம் 63 நாட்கள், ஒவ்வொரு முறையும் 4117 கி.மீ தூரம் பயணம் செய்து , 488 விமானங்களைக் கொண்டு இரவுபகலாக குவைத்திலிருந்து 170000 இந்தியர்களை மீட்டனர். இந்த வரலாற்று நிகழ்வு கின்னஸ் புத்தகத்தில் சாதனையாக உள்ளது. இந்த சம்பவத்தையும் இந்தியாவின் மீட்பு நடவடிக்கை திட்டத்தையும் Ranjit Ktyal என்ற இந்திய தொழிலதிபரின் வாயிலாக விவரிக்கிறது திரைப்படம். தொழிலதிபராக Akshai Kumar நடித்திருக்கிறார், Raja Krishna Menan இந்த திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். Sunny Mathive என்ற குவைத்தில் வாழ்ந்த (1990) நிஜ தொழிலதிபரை முன்மாதிரியாகக் கொண்டு கதை பின்னப்பட்டுள்ளது.


இரண்டு பிரபல நடிகர்கள், இரண்டு உண்மைச் சம்பவங்கள், இரண்டும் இந்தியாவின் மானப் பிரச்சனை. கொஞ்சம் சலிப்பூட்டும் திரைப்படங்களை தவிர்க்க நினைத்தால் இந்த "இரண்டை" ரசிக்கலாம்.