பாலைவன சிங்கம்.



உலக செய்திகளை திறந்தால் ஒரு குண்டுவெடிப்பு சம்பவம் நிச்சயம் இடம்பெரும். குறிப்பாக ஆப்பிரிக்க, அரபு நாடுகளில் குண்டுவெடிப்பு என்பது டீயோடு சேர்த்து சமோசா சாப்பிடும் அன்றாட நிகழ்வு. ஆல்பிரட் நோபலுக்கும் ஐன்ஸ்டினுக்கும் தினம் தினம் அங்கு பூர்ணகும்ப மரியாதை செலுத்துகின்றனர். புரட்சி, புண்ணாக்கு, புளியங்கொட்டைகள் எல்லாம் வெறும் உள்ளங்கைக்குள் அடங்கிவிட்ட இந்த நவீன யுகத்தில் ஏன் அந்த நாடுகளில் மட்டும் இப்படி நடக்கிறது? அப்படி என்ன அங்கு இருக்கிறது? என்று தோண்டினால் ....எண்ணெய் வரும். நூற்றாண்டு காலமாக அங்கு பற்றி எரியும் எண்ணெய் யுத்தத்திற்கு வளர்ந்த நாடுகள் பல இன்றைக்கும் திரி திரித்துக் கொண்டிருக்கின்றனர். சாதாரண மக்களை ஒன்றுபடுத்தும் மதமும், அரசியலும், கல்வியும் பொய்த்துப்போன அந்த நாடுகளின் நிலமை சற்று கவலைக்கிடமானது. குறிப்பாக வழி நடத்தும் நல்ல தலைவர்கள் இல்லாது போனதே அந்த நாடுகளை சிதைத்து சின்னாபின்னாமாக்கிக் கொண்டிருக்கின்றது. வரலாற்று புத்தகத்தை கொஞ்சம் தூசுத்தட்டி கொட்டாவி வரும்முன் புரட்டிப் பார்த்தால் அந்த நாடுகளிள் சில தலைவர்கள் விடிவெள்ளியாக தோன்றி மறைந்து கல்லறைக்குள் உறங்கிக் கொண்டிருப்பது அப்பட்டமாக விளங்கும். அப்படிபட்ட ஒருவரின் கதைதான் "Lion of Desert" கதைக்களம் லிபியா.



லிபியா.

வடக்கு ஆப்பிரிக்காவின் உச்சந்தலையில், சூடான், நைஜர், அல்ஜீரியா போன்ற நாடுகளை தன் பக்கத்தில் வைத்துக் கொண்டிருக்கும் உலகின் 17- து பெரியநாடு லிபியா. நிலப்பரப்பில் பாதியளவு பாலைவனத்தை கொண்டிருக்கும் இந்த நாடு எண்ணெய் உற்பத்தியில் டாப்டென் லிஸ்டில் இருக்கிறது . சொல்லவா வேண்டும் அனைத்து நாடுகளும் கருவாட்டிற்கு பூனையாக மோப்பம்பிடித்து வர, துருக்கியிடம் இருந்து 1911 -ஆம் ஆண்டு இத்தாலி லிபியாவை கைப்பற்றியது. 30 வருடங்கள் இத்தாலியின் பிடியில் சிக்கித்தவித்து ஒவ்வொருவராக கைமாறி, இரண்டாவது உலகப்போருக்கு பின் ஒரு வழியாக 1951 ஆம் ஆண்டு சுதந்திரம் அடைந்தது. சுதந்திரம் என்பது கழுகிடம் இருந்து கிளியை காப்பாற்றி கூண்டிற்குள் அடைத்து வளர்பதை போன்றது என்பதற்கேற்ப இந்த நாடு ஆளும் வர்க்கத்தினரிடம் மாட்டிக்கொள்ள புரட்சி, அதிகாரம் என கையில் எடுத்துக்கொண்டு 1969 -ஆம் ஆண்டு "ஜெனரல் கடாபி" இராணுவ ஆட்சியை பிடித்தார். அதற்குப்பின் ஒரளவுக்கு பொருளாதாரம் வர்த்தகம் என முன்னேரினாலும், சாதாம் உசேனுக்கு பிறகு கழுகின் பார்வை லிபியா அதிபர் கடாபி மீது விழுந்தது. அனுஆயுதம் வைத்திருக்கிறார், வெடிகுண்டு வைத்திருக்கிறார், ஜன்டுபாம் வைத்திருக்கிறார் அயோடெக்ஸ் வைத்திருக்கிறார் என சல்லடையாக தேட, புரட்சி, உள்நாட்டு கலவரம், பொருளாதாரதடை என லிபியா மீண்டும் பற்றி எரியத் தொடங்கியது. ஒருவழியாக கடாபி செத்துமடிய 2011 - ஆம் ஆண்டு மீண்டும் பொம்மை ஆட்சி மலர்ந்தது. இன்றைய நிலவரப்படி லிபியாவின் காலைப்பொழுது ஒட்டகம் கத்தி நல்லபடியாக விடிந்தாலும், கலவரமும் குண்டுவெடிப்புகளும் நிகழ்ந்த வண்ணம் இருக்கின்றன. தினமும் வெடிகுண்டு சமோசா சாப்பிடும் நாடுகளில் லிபியாவும் ஒன்று. இவற்றையெல்லாம் அமைதியாக கல்லறையில் சாய்ந்தபடி பார்த்துக் கொண்டிருகிறார் லிபியாவின் விடுதலைக்காகவும், அமைதிக்காகவும், மறுமலர்சிக்காகவும், உண்மையான மதத்திற்காகவும் போராடிய "ஓமர் முக்தர்". 

ஓமர் முக்தர். 

ஓமர் முக்தர் 1861 ஆம் ஆண்டு லிபியாவில் மினிபா என்னும் பழங்குடி இனத்தில் பிறந்தார். விவசாயம் மட்டுமே நாட்டின் முதுகெலும்பு என நம்பிய இவர் ஓய்வு நேரங்களில் கிராம மக்களுக்கு குரான் போதிக்கும் ஆசானாக விளங்கினார். 1911 ஆம் ஆண்டு இத்தாலி லிபியாவை கைப்பற்றிய பிறகு அதை எதிர்த்து போராட்டத்தில் குதித்தார். அன்றைய நாளில் பலம் பொருந்திய இராணுவமாக விளங்கிய முசோலினியின் "பெனிட்டோ" படைக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினார். பாலைவன பிரதேசத்தில் கொரில்லா தாக்குதலை முன்நிறுத்தி எதிரிகளை நிலைகுலையச் செய்தார். 20 வருட தாக்குதல் போராட்டம், பேச்சுவார்த்தைக்குப் பிறகு எதிரிகளால் சுற்றி வளைக்கப்பட்டு பொது இடத்தில் 1931 அம் ஆண்டு தூக்கிலிடப்பட்டார். சாகும் தருணத்தில் அவர் பேசிய வார்த்தைகள் இன்றும் உயிர்புடன் இருக்கின்றன. எதிரிகளே இவரை வாயார பாலைவன சிங்கம் (Lion of Desert) என புகழ்ந்தனர். சுதந்திரம், விவசாயம், கல்வி, மதம் இவைதான் ஒரு நாட்டை வளப்படுத்தும் என நம்பிவாழ்ந்த இவர் லிபியர்களால் ஒப்பற்ற தலைவராக இன்றளவும் மதிக்கப்படுகிறார். ஓமர் முக்தரின் இத்தாலி இராணுவத்துடனான சுதந்திர போராட்டத்தையும், பாலைவனத்தில் அந்த கிழட்டு சிங்கத்தின் வேட்டையையும், அழகாக சித்தரிக்கும் திரைப்படம்தான் இந்த "Lion of Desert ".

Lion of Desert.

லிபியாவிற்கான ஆறாவது கவர்னராக ஜெனரல் கிரிஷ்யானி (Graziani) முசோலினியால் நியமிக்கப்படுகிறார். ஒட்டுமொத்த லிபியாவையும் கைக்குள் கொண்டுவரும் பொருப்பு அவரிடம் ஒப்படைக்கப்படுகிறது. சக்திவாய்ந்த இத்தாலியின் பெனிட்டோ முசோலினி படை கிராமங்களில் நுழைந்து தாக்குவதில் தொடங்குகிறது திரைப்படம். சேதம் ஒருபுறம் இருக்க ஓமர் முக்தரின் விடுதலைப்படை சாதாரண நாட்டுத் துப்பாக்கியை வைத்துக்கொண்டு கொரில்லா தாக்குதலில் இத்தாலிய படையை நிலைகுலையச் செய்கின்றனர். ஜெனரல் கிரிஷ்யானிக்கு ஓமரின் படை தலைவலியாக இருக்க அவரை ஒழித்துக்கட்ட வியூகம் வகுக்கிறார். லிபியாவின் தலைநகரை பிடிக்கும் அவரின் நோக்கமும் ஓமர் முக்தரை பணியவைக்கும் முயற்சியையும் வரலாற்று நிகழ்வாக காட்டுகிறது இந்த திரைப்படம். ஓமர் முக்தராக நடித்த (வாழ்ந்த) Anthony Quinn ரசிக்க வைக்கிறார். எதிரிகளிடம் சீறும்போதும், மக்களிடம் ஆசானாக போதிக்கும்போதும், நிராயுதபாணியாக சரணடையும் போதும் நடிப்பில் வெளுந்து வாங்குகிறார். அவருக்கு போட்டியாக கவர்னர் ஜெனரலாக Oliver Reed நடித்துள்ளார். 1981 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த திரைப்படத்தை Moustapha Akkad இயக்கினார். வரலாற்று கதைக்கான துள்ளியம், காட்சியமைப்பு, மற்றும் புகழ்பெற்ற வசனங்களை திரைப்படத்தில் தரிசிக்கலாம். ஆஸ்கர்வரை பரிந்துரைக்கப்பட்டு சிறந்த நடிப்பு, ஒளிப்பதிவு என பல விருதுகளை வாங்கிய வரலாற்றுத் திரைப்படம் தமிழில் கூட கிடைக்கிறது தவறாமல் பாருங்கள். 

Directed by - Moustapha Akkad.
Written by - H.A.L Craig.
Music - Maurice Jarre. 
Language - English.