☰ உள்ளே....

ரஹ்மேனியா (டேப்ரிக்கார்டர் நினைவுகள்) .


சிக்குபுக்கு ரயில்,  ஹம்மா ஹம்மா என A.R. ரஹ்மானின் புயல் வீசத் தொடங்கிய காலம், டிவி ரேடியோ டேப்ரிக்கார்டரில் எப்போதாவது அவரின் பாடல்களைக் கேட்டால் ஓடிப்போய் காதை திருகி நாங்கள் வசித்த காலனியே கதறும்படி சப்தமாக ஒலிக்கவிடுவேன். சிடிக்களும், செல்போன்களும் வெளித் தெரியாத அந்த தென்னூறுகளில் கேசட் போடும் டேப்ரிக்கார்டர் மட்டுமே தனி இசைக்கான தேர்வாக இருந்தது. ரஹ்மானின் பாடல்களை தனியே பதிந்து நாள் முழுவதும் கேட்டுக் கொண்டிருந்த தருணம், ரஹ்மான் தமிழில் இருந்து நேரடியாக ஹிந்தி திரையுலகிற்கு சென்றார். ரங்கீலா அவருக்கு புகழைத் தேடித்தர இந்தியா முழுவதும் அப்போது ரஹ்மேனியா பிடித்திருந்தது. நாங்கள் வசித்துவந்த காலனியில் இருந்த அருள் அண்ணாதான் ரஹ்மானின் ஹிந்தி பட பாடல்களை அறிமுகப்படுத்தி வைத்தார். Daud, Kabi Na Kabi, Doli Sajake Rakhna (காதலுக்கு மரியாதை), Taal, Thakshak, Pukar என அவர் இசையமைத்த படங்களின் கேசட்டுகளை அருள் அண்ணாவிடம் கடன் வாங்கி கேட்டதுண்டு. அதுபோல் ராகம் மியூசிக்கல்ஸ் எனக்காக சில பாடல்களை தேடி பதிந்து கொடுத்த கேசட்டுகளை நீண்ட வருடங்கள் பத்திரப்படுத்தி வைத்திருந்தேன். ஹிந்தி பாடல்களை தேடும் அடியேனின் இன்றைய ஆர்வத்திற்கு அடித்தளமாக அமைந்தது ரஹ்மானின் பாடல்கள் எனச் சொல்லலாம். ரஹ்மானை உலக அளவிலும், ஆஸ்கர் வரையிலும் கொண்டு சென்றதற்கும் இந்த பாடல்களே அடித்தளமாக அமைந்தது. அப்படி அந்த காலகட்டத்தில் ரஹ்மான் இசையமைத்த சில ஹிந்தி பாடல்கள் இவை, அடியேன் ரசித்து கரைந்தது அந்த டேப்ரிக்கார்டர் நினைவுகளோடு உங்கள் பார்வைக்கும்.