தோட்டியின் மகன்.



மலையாள இலக்கியத்தில் நவீன புனையெழுத்தை புகுத்தி அனல் பறக்கச் செய்தவர்களில் "தகழி சிவசங்கரப் பிள்ளை " குறிப்பிடத்தக்கவர். தகழி என்றவுடன் செம்மீன் என அடுத்த தலைமுறை கூட அவரை நினைவுகொள்ளும். எளிய மக்களின் வாழ்க்கைக்குள் புகுந்து அவர்களின் மன உணர்வுகளை வார்த்தைகளால் எப்படி வெளிக்கொணர்கிறார் என்ற ஆச்சர்யம் அவரது படைப்புகளை வாசிக்கும் போது நாம் உணரலாம். மலையாள இலக்கியத்திலும், சமூக பார்வையிலும் அவரது படைப்புகள் புதிய தாக்கத்தையும், சில அதிர்வுகளையும் ஏற்படுத்தியது என்றால் அது மிகையாகாது. அவரது படைப்பில் 1947 ஆம் ஆண்டு வெளிவந்த குறுநாவல்தான் " தோட்டியின் மகன்".

கதைக்களம் சேரி, யாருக்கும் அஞ்சிடாத தலைப்பு, இதுவரை கேட்டிராத பாமரனனின் கொச்சை மொழி, யாரும் வாழ்ந்திடாத வாழ்க்கை, மூக்கை மூடவைக்கும் மலத்தின் வாடை, சமூகத்தால் பின்தள்ளப்பட்ட ஒரு இனம் இதுதான் இந்த நாவலின் சிறப்பம்சம். கதை தோட்டிகள் என்று சொல்லக்கூடிய ஒதுக்கப்பட்ட சமூகத்தைப் பற்றியதா? என கேட்டால், ஆம் என சொல்லலாம். கதையின் நாயகன் முதல் அனைவரும் தோட்டிகள், அவனது காதலியும் தோட்டிச்சிதான். கதையின் வாழ்வும், இடமும் காதலும், தோட்டிகளின் மலக்கிடங்கோடு சுற்றித்திரிகிறது. "தோட்டி பிழைப்பு" என்று பின்தள்ளப்பட்ட ஒரு சமூகத்தை பொது கவணத்திற்கு வைக்கிறது இந்த நாவல்.

செம்மீன் நாவல் படித்தபிறகு தகழி சிவசங்கரப் பிள்ளை அவர்கள் என் வாசிப்பு வட்டத்திற்குள் நுழைந்தார். பிறகு தேடித்தேடி அவரது படைப்புகளை வாசித்திருக்கிறேன், வாசித்துக் கொண்டிருக்கிறேன். சமீபத்தில் அப்படி வாசித்த ஜீரணிக்க முடியாத படைப்புதான் இந்த தோட்டியின் மகன். சில புத்தகங்களை படித்து ரசித்தபின் அதன் சுவையில் மூழ்கிப்போவதுண்டு, கதையின் நாயகர்களோ, நாயகிகளோ, கதைக்களமோ படித்து முடித்தபின் எண்ணத்தை சுற்றி வட்டமடித்துக் கொண்டேயிருக்கும். அப்படிபட்ட தாக்கத்தை ஏற்படுத்தியது இந்த நாவல். 1947 ல் எழுதிய கதை இந்த காலகட்டத்திற்கு பொருந்துமா? மாற்றத்தை ஏற்படுத்துமா? என கேட்டால் நிச்சயம் பொருந்திப் போகிறது. தற்போது நவீன யுகத்தில் வாழ்ந்தாலும் மனிதக் கழிவுகளை மனிதனே அள்ளும் அவலநிலை இன்றுவரை நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. தோட்டிகளின் சமூகம் என ஒரு பிரிவினரை சற்று புறம் தள்ளியே வைத்திருக்கிறோம். சாதிய கொடுமைகளும், ஒதுக்கப்பட்ட இனமும் இன்னும் ஒரு நூற்றாண்டு கடந்து போனாலும் மாறப்போவதில்லை. அதேபோல் இன்னும் ஒரு நூற்றாண்டு கடந்தாலும் தகழியின் தோட்டியின் மகன் என்ற இந்த நாவலின் தாக்கமும் குறையப் போவதில்லை.

மலையாளத்தில் வெளிவந்த இந்த நாவலை அழகாக மொழி பெயர்த்துள்ளார் மூத்த எழுத்தாளர் சுந்தர ராமசாமி. ஏற்கனவே இவர் தகழி சிவசங்கரப் பிள்ளையின் "செம்மீன், என்ற பிரபலமான நாவலை மொழி பெயர்த்துள்ளார். காலச்சுவடுகள் பதிப்பகம் கிளாசிக் இந்திய நாவல் வரிசையில் இதை வெளியிட்டுள்ளனர். உங்களின் இலக்கியத் தேடலுக்கான வரிசையில் இந்த நாவலையும் தவறாமல் சேர்த்துக் கொள்ளுங்கள்.