சொத்து மதிப்பு.



தேர்தல் சூடுபிடிக்க ஆரம்பித்துவிட்டது அனைத்துக் கட்சிகளும் தங்கள் வேட்பாளர்களை தேர்ந்தெடுக்கத் தொடங்கிவிட்டார்கள். இந்த தேர்தலில் எக்கச்சக்க கட்சிகள் அதற்கு ஏகப்பட்ட முதல்வர் மற்றும் வேட்பாளர்கள் என அரசியல் செய்திகளைப் படித்தால் கண்ணைக்கட்டுகிறது. புதிதாக போட்டியிடுபவர்கள், அரசியலில் பழம் திண்று கொட்டை போட்டு மரம் வளர்த்தவர்கள் என எல்லா வேட்பாளர்களும் தங்கள் சொத்து மதிப்பை தாக்கல் செய்வது என்பது தேர்தலின் வரையறை. மற்ற தகுதிகள் ஒருபக்கம் ஓரமாக இருக்க இந்த சொத்து மதிப்பு மட்டுமே சர்ச்சைக்கு உள்ளாகும். எங்கிட்ட எதுவுமே இல்லை என சூடம் ஏற்றி, துண்டைபோட்டுத் தாண்டி மனு தாக்கல் செய்வார்கள். பிறகு ஊழல், கருப்பு பணம், சுவிஸ்பேங்க் என சிக்கிக்கொள்வார்கள். சமீபத்தில் கருப்பு பண விவகாரம் போல பனாமா என்னும் புதிய பூதம் கிளம்பியிருக்கிறது, அதைப்பற்றி விளக்கினால் வயிற்றெரிச்சலோடு சேர்ந்து மயக்கம் வரும். அரசியல் பற்றி கொஞ்சநாட்கள் வாயைத் திறக்காதே என அம்மா கண்டித்து அனுப்பினாள், மறந்தே போய்விட்டேன். விடயத்திற்கு வருவோம்.

"சொத்து மதிப்பு"

நம்ம மனித இனத்தில் மட்டும்தான் ஒருவரின் மதிப்பு அவரது சொத்துக்களை வைத்து எடை போடப்படுகிறது. காட்டில் வாழும் ஒரு சிங்கத்தின் சொத்து என்னவாக இருக்கும்? நான்கு கேர்ள்பிரன்ட் சிங்கங்கள் மற்றும் அதன் குட்டிகளைத் தவிர வேறொன்றும் இருக்காது. வயிற்றுப்பசிக்கு சாப்பாடு, வயசுப் பசிக்கு ----- அவ்வளவுதான். சிங்கம் மட்டுமில்லை நாய், நரி, குருவி, கொக்கு எல்லாவற்றிர்க்கும் சொத்துமதிப்பு என்பது எதுவும் இல்லை. அதைவைத்து அவைகள் மதிப்பிடப்படுவதும் இல்லை "Bubbles"என்ற சிம்பன்சி குரங்கைத் தவிர.

புளோரிடா மிருகக்காட்சி சாலையில் இருக்கும் இந்த Bubbles என்ற சிம்பன்சியின் தற்போதைய சொத்துமதிப்பு 2.5 மில்லியன் டாலர். இந்த சிம்பன்சிதான் உலகிலேயே மிகப் பணக்கார விலங்கு. சிம்பன்ஸி தேர்தலில் வெற்றிபெற்று, வாழைப்பழ ஊழல், டைபர் வாங்கியதில் ஊழல் 2G 3G ஊழல் என அந்த சிம்பன்சி சுயமாக இவற்றையெல்லாம் சம்பாரிக்கவில்லை. மிக மிகப்பிரபலமான ஒருவரின் செல்லப்பிராணியான இதற்கு அதன் எஜமானர் 2 மில்லியன் டாலர் சொத்துக்களை எழுதி வைத்திருக்கிறார். 1983 ஆம் ஆண்டு பிறந்த இந்த சிம்பன்சி அந்த பிரபலத்தைப் போலவே செம பேமஸ். ஓணான், பல்லி, பாம்பு, ஒட்டகம் என வளர்த்த அந்த பிரபலம் இதன் மீது அளவுகடந்த பாசம் வைத்திருந்தார். தான் எங்கு சென்றாலும் ஒரு அரை டிக்கட் எடுத்துக்கொண்டு இந்த சிம்பன்சியையும் கூடவே கூட்டிச் சென்றார். அவரைப்போல அந்த சிம்பன்ஸியும் லூட்டியடித்து ஆட்டம் போட்டது. டிவி, பத்திரிக்கை என 80- 90-களில் அதுவும் சூப்பர் ஸ்டாராக வலம்வந்தது. ஒரு நேரத்தில் வளர்ந்து பெரிதான அந்த சிம்பன்சியை மேய்க்க முடியாமல் மிருக காட்சி சாலையில் கொண்டுவிட்டார் அந்த பிரபலம். அதனை பராமரிக்க தன் சொத்திலிருந்து கொஞ்சம் எழுதிவைத்தார். மேலும் அதை கவணிக்க தனி ஆட்களையும் அந்த சொத்துக்களை ஷேர்மார்க்கெட்டில் முதலீடு செய்யவும் ஏற்பாடு செய்தார். 30 வயதை கடந்த அந்த சிம்பன்சி தனக்கு இவ்வளவு சொத்து இருக்கிறது எனத் தெரியாமலும், தன்னை உயிராக வளர்த்த எஜமானர் இறந்துவிட்டார் எனத்தெரியாமலும், யாராவது வாங்கிக் கொடுக்கும் வாழைப்பழத்தை திண்றுவிட்டு வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கிறது. புளோரிடா மிருக காட்சி சாலையில் இருக்கும் இந்த சிம்பன்சியை பார்பவர்களுக்குக் கூட அதற்கு இவ்வளவு சொத்துகள் இருப்பதைப்பற்றி தெரியாது. ஆனால் ஒன்று மட்டும் அனைவரும் அறிவார், அந்த சிம்பன்சியை வளர்த்தவர் தி கிரேட் பாப் கிங் "மைக்கல் ஜாக்சன்" என்று.