☰ உள்ளே....

விருதுகள்..


சமீபத்தில் மூன்று விருதுகள் சர்ச்சைக்குள்ளாயின. பேஸ்புக், டிவிட்டர், போன்ற சோஷியல் மீடியாக்களுக்கு நொறுக்குத் தீனியாகின.

முதலில் பத்மவிபூசன் விருது, அந்த பெரிய நடிகருக்கு ஏன்? கொடுக்க வேண்டும் நாட்டில் சாதனை புரிந்தவர்களுக்கு பஞ்சம் வந்துவிட்டதா? எழுபதைத் தாண்டி டூயட் பாடுபவருக்கு எதற்கு பத்மவிபூசன்? - என சர்ச்சை கிளம்பியது.

இரண்டாவதாக பிரபல டிவி நிகழ்ச்சியில் சிறந்த பாடகராக தேர்வு செய்யப்பட்டவரைப் பற்றிய பூதம் வெளிவந்தது. சினிமாவில் நன்றாக பாடுபவரை வைத்து ரியாலிட்டி ஷோவை நடத்தி அவருக்கு முதல்பரிசு வழங்கி, பல வாரங்களாக வாயைப்பிளந்து பார்த்த நமக்கு பெரிய....பலாப்பழம் கொடுத்தார்கள்.

மூன்றாவது தற்போது அறிவிக்கப்பட்ட தேசிய திரைப்பட விருது. சென்ற வருடம் எக்கச்சக்க திரைப்படங்கள் வெளிவர திறமையான நாயகர்கள் உருவாக, அந்த வளர்ந்த நடிகரை சிறந்த நடிகராக அறிவித்திருக்கின்றனர். பிர-பலம் பொருந்திய பிரபலம் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என கிழித்துவிட்டனர்.

விருதுகள் என்பது அங்கீகாரமா? அடையாளமா? இல்லை வெறும் விளம்பரமா? இந்த சமயத்தில் சுவையான தகவல் ஒன்று கிடைத்தது.

உலகின் மிக உயரிய, கௌரவமான விருது "நோபல்பரிசு" ஆகும். இலக்கியம், இயற்பியல், வேதியியல், மருத்துவம், பெருளாதாரம், அமைதி இவற்றிற்காக கொடுக்கப்படும் விருதில் மிக முக்கியமானது அமைதிக்கான நோபல்பரிசு. அன்னை தெரசா, தலாய்லாமா, நெல்சன் மண்டேலா, ஆங் சாங் சூயி, யாசர் அராஃபத் போன்ற முக்கிய தலைவர்களுக்கெல்லாம் இந்த பரிசு கிடைத்திருக்கிறது. 2009 -ல் ஒன்னுமே செய்யாத ஒபாமா கூட ஒன்னு வாங்கினார். ஆனால் முப்பது கோடி மக்களை ஒன்றுதிரட்டி அகிம்சையை போதித்து, இந்தியாவிற்கு சுகந்திரம் பெற்றுத்தந்த மகாத்மா காந்திக்கு இந்த விருதை கொடுத்ததில்லை. 1937, 1938, 1939 மற்றும் 1947, 1948 என ஐந்து முறை அவரது பெயர் நோபல் பரிசிற்காக பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் கடைசிவரை அவருக்கு கிடைக்கவில்லை. சுகந்திரத்திற்கு முன்பு வரை பிரிட்டீஷார் அவருக்கு விருது கிடைக்காமால் பார்த்துக் கொண்டனர். ஒருவழியாக கடைசியாக 1948 -ஆம் வருடம் அவருக்கு விருது கொடுக்க முடிவு செய்யப்பட்டது அதற்கு முன் நாம் மகாத்மாவிற்கு மாபெரும் பரிசு கொடுத்து மகா ஆத்மாவாக அனுப்பிவிட்டோம். காந்திக்கு நோபல் கொடுக்காதது இன்றளவும் ஒரு கலங்கமாகவே இருக்கிறது. 2006 -ல் நார்வே நோபல் கமிட்டி தலைவராக இருந்த "Geir Lundenstad"ஒருமுறை இதைப்பற்றி பேசினார். 106 வருட நோபல்பரிசு வழங்குதலின் மாபெரும் குறை காந்திக்கு விருது கொடுக்காததுதான் "காந்தியால் நோபல்பரிசு இல்லாமல் சிறப்பாக செயல்பட முடிந்தது ஆனால் நோபல் பரிசு காந்தி இல்லாமல் திருப்தியடையுமா? என்பது கேள்விக்குறிதான்" என்றார்.

அவரவர் துறைகளிலும் சிறந்து விளங்கும் திறமைசாலியின் மனது பாராட்டிற்கும், விருதிற்கும் ஏங்கித் தவிக்கும் என்பதே நிதர்சனம். ஆனால் விருதுகளும் பாரட்டுகளும் ஒருதலைபச்சமாக செயல்படும் போது, கடின உழைப்பிற்கும், திறமைக்கும் கொடுக்கும் உழைப்பைவிட பல மடங்கு திறன் மனதை பக்குவப்படுத்த தேவைப்படுகிறது. அனைத்தையும் கடந்து உனது வேலையில் மும்மரமாக இரு "Keep yourself Busy " என்ற தாரக மந்திரமே திறமைசாலிகளை மக்களின் இதயத்தை நோக்கி அழைத்துச் செல்கிறது, அங்கு நிறந்தரமாகவும் தங்கிவிடுகிறது.

இதயங்களை விட மாபெரும் விருது வேறு எதுவும் வேண்டுமா என்ன?.