பெரிய முத்து.




சிலரது தட்டில் வெங்காயம் விழுந்தால் அய்யோ! வெங்காயமா? எனக்கு அறவே பிடிக்காது என அளருவார்கள். சிலர் வெங்காயம் நறுக்கவே கதறுவார்கள், கண்கலங்குவார்கள். இதற்கெல்லாம் புரோப்பின் சல்பியுனிக் அமிலம் என்ற வேதிப்பொருள்தான் காரணம். வெங்காயத்தின் உள்ளே ஒளிந்திருக்கும் ஆலினோஸ் (Allinases) என்ற நொதி, நறுக்கும் போது வெளித்தோலில் இருக்கும் புரோப்பினி சிஸ்டைன் (s/n- propanethial-s-oxide என்ற பொருள் மீது வினைபுரிந்து, புரோப்பின் சல்பினிக் அமிலமாக மாறுகிறது. எரிச்சல் கொடுக்கும் தன்மை கொண்ட இந்த அமிலம் காற்றில் ஆவியாக மாறி கண்களில் படுவதினால் கண்ணீர் வருகிறது. மேலும் சிலருக்கு வெங்காயம் பிடிக்காமல் போக இந்த அமிலத்தின் குமட்டும் சுவையே காரணமாகிறது. ஆனால் நாம் வேண்டாம் என வெறுத்து ஒதுக்குபவைகளில்தான் உன்னதம் ஒளிந்திருக்கிறது.

இந்த வெங்காயத்தில் எக்கச்சக்க மருத்துவ குணங்கள் அடங்கியிருக்கிறது. இதிலிருக்கும் குரோமியம் இரத்தத்தின் சர்க்கரை அளவை சமன்படுத்தும், மேலும் LDL என்ற குறைவான கொழுப்புச்சத்து கொண்டது. விட்டமின் C இருப்பதால் நோய் எதிர்புசக்தியை அதிகரிக்கும். நல்ல செரிமானத்திற்கும், உடல் சூட்டை தணிக்கவும், இன்சுலின் சுறக்கவும் உதவுகிறது. ஜலதோசம், இருமல், வயிற்றுப்புண், பல்வலி, வெள்ளைப்படுதல், கண்நோய்க்கு வெங்காயம் அறிய மருந்தாகும். பெண்களின் மாதவிடாய் காலத்திற்குப் பிறகு வரும் தொல்லைகளுக்கு வெங்காயத்தை சேர்த்துக்கொள்வது மிகவும் உகந்தது. ரகசியமான ஒரு பலன் அதாவது, வெங்காயம் இளமையாக இருக்க உதவுமாம், மேலும் ஆணின் வித்தனுக்கள் உற்பத்தியை அதிகரிக்கும் என்கிறார்கள் சித்த மருத்துவர்கள். ஆழ்ந்த உறக்கத்திற்கும் கனவில் நயன்தாரா மற்றும்..... வரவும் இந்த வெங்காயம் சம்பூர்ண காய்கறியாக பயன்படுகிறது.

வெங்காயத்தின் வரலாற்றை உறிக்க உறிக்க வந்து கொண்டே இருக்கிறது. 3000 வருடங்களுக்கு முன்பே இதனை பயன்படுத்தி இருக்கிறார்கள். எகிப்தின் "மம்மி"கள் வெங்காயம் நறுக்கி அழுது கண்ணீர் வடித்த ஆதாரம் கிடைதிருக்கிறது. இந்தியாவை பொருத்தவரை சின்ன வெங்காயம்தான் பழமையானது. வெங்காயத்தால் ஆட்சி கூட கவிழ்ந்திருக்கிறது. முதல் மற்றும் இரண்டாம் உலகப்போரில் காயம்பட்ட வீரர்களுக்கு வெங்காயத்தை வலி நிவாரணியாக பயன்படுத்தினர். 1800 -ல் லூயி பாஸ்டர் வெங்காயம் சிறந்த பாக்டீரியா கொல்லி என எழுதிவைத்தார். கிராமங்களில் பழைய சாதத்திற்கு பச்சை வெங்காயம்தான் சுப்பர் ஜோடி சைடிஸ். இன்று வெங்காயம் இல்லாத சமையலே கிடையாது எனலாம். Onian என்பது கிரேக்க வார்த்தை அதற்கு பெரிய முத்து (Big Pearl) என்று பொருள். இத்தனை சிறப்புமிக்க பெரிய முத்து அடுத்தமுறை உங்கள் தட்டில் விழுந்தால் வேண்டாம் என ஒதுக்கிவிடாமல், புரோப்பின் சல்பியுனிக் அமிலத்தை மறந்துவிட்டு, சமத்து பிள்ளையாக அடம்பிடிக்காமல் சாப்பிடுங்கள்..