☰ உள்ளே....

சிறுதுளி பெருவெள்ளம் (சென்னை அனுபவம்-9).


வராண்டாவில் வேடிக்கை பார்த்தபடி அமர்ந்திருந்தேன். மஞ்சள் வெளிச்சத்தில் மழைநீர் தேங்கியிருக்கும் மைதானத்தில் சில சிறுவர்கள் கால்பந்தை உதைத்துக் கொண்டிருந்தனர், அதனுடன் என் பால்யகால நினைவுகள் உருண்டோடிக் கொண்டிருந்தது. பள்ளியின் முதல்வர் தோளைத் தட்டி, Sorry உங்களை காத்திருக்க வைத்துவிட்டேன் என்றார். மீண்டும் அதே வராண்டாவில் கிழக்கு நோக்கி பேசிக்கொண்டே நடந்தோம். இந்த வெள்ளத்தால் உங்கள் பள்ளிக்கூடம் பாதிக்கப்பட்டதா எனக் கேட்டேன். ஆமாம் என தலையாட்டிவிட்டு நீங்கள் முன்பு சொன்னது உண்மைதான் தேவ் "நீரின்றி அமையாது இந்த உலகு" என்றார். அய்யோ! இதை நான் சொல்லவில்லை தாத்தன் வள்ளுவன் சொன்னது என்று கூறினேன், சிரித்துக் கொண்டார். இந்த வெள்ளம் எங்களுக்கு நிறைய பாடங்களை கற்பித்துச் சென்றது என்றார். நீங்கள் எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டும், மீண்டும் ஒருமுறை எங்களுக்காக நீர்மேலாண்மையைப் பற்றி தெளிவாக விளக்க வேண்டும். இந்தமுறை அனைத்து வகுப்புகளில் உள்ள மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் முன்பு பெரிய கருத்தரங்கமாக நடத்தவேண்டும் என நினைக்கிறேன், அது அனைவருக்கும் விழிப்புணர்வாக இருக்கும் என நம்புகிறேன். அதற்கு உங்கள் சம்மதம் வேண்டும் அதற்காகத்தான் உங்களை தற்போது அழைத்தேன் என்றார்.

எனக்கு அதில் சற்று தயக்கம் இருந்தது. மழைநீர் சேகரிப்பு, கழிவுநீர் சுத்திகரிப்பு, வடிகால் அமைப்புமுறை, மரம்வளர்ப்பு போன்றவற்றை துளிகூட கடைபிடிக்காத இந்த பள்ளிக்கு சொற்பொழிவும் போதனைகளும் எதற்கும் உதவாது என நினைத்தேன். முறையாக அனைத்தையும் செயல்படுத்துதலே தீர்வு என கருதினேன். சற்று தயக்கத்துடன் பள்ளி முதல்வரிடம் அமைதியாக விளக்கினேன். முதலில் பள்ளிக்கூடத்தின் மழைநீர் சேகரிப்பு முறையயை சரிசெய்யுங்கள், கழிவுநீரை மறுசுழற்சி செய்யுங்கள், மரங்களை நடுங்கள், இவற்றையெல்லாம் இங்கு படிக்கும் மாணவர்களிடம் பொருப்புகளாக ஒப்படையுங்கள். ஒவ்வொரு மாணவனும் உள்ளத்தால் உணரட்டும் அது மிகப்பெரிய மாற்றத்தை கொண்டுவரும் என்றேன். பாட புத்தகத்தை தவிர்த்து இதுபோன்ற சின்னச்சின்ன விசயங்களை மாணவர்களிடம் திணித்தால் மாற்றங்கள் சாத்தியமே என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. அமைதியாக கேட்டுவிட்டு பள்ளியின் முதல்வர் சற்று யோசித்தபடி தலையாட்டினார். உண்மைதான் முதலில் நான் என்னை சரிசெய்து கொள்கிறேன் பிறகு உலகத்தை கவணிக்கிறேன் என்றார். மேலும் இவற்றை சரிபடுத்தும் வேலையை உங்களிடமே ஒப்படைக்கிறேன். இதற்கான திட்டங்களை பிறகு தொழில்ரீதியாக பேசலாம் என்றார்.

நான் வந்த வேலை முடிந்தது தனிப்பட்ட முறையில் சந்திக்கவேண்டும் என கேட்டவரிடம் எங்கள் நிறுவனத்திற்காக புதிதாக ஒரு ஆட்டரை பெற்றுக்கொண்டேன். அதில் கிடைக்கும் 5% கமிஷன் எனது கல்லாவில் நிறையும். நான் ஒரு வியாபாரிதான் சற்று நியாயமாக நடந்துகொள்ள முயற்சி செய்வேன். 13 வருடங்களாக தண்ணீரைச் சுற்றியே எனது வேலை கழிந்திருக்கிறது. Save every drop of water ஒவ்வொரு துளி நீரையும் சேமியுங்கள் என்பதோடு வாழ்க்கையின் பெரும்பகுதியை வாழ்ந்து வந்திருக்கிறேன்.
சிறிது நாட்களுக்குப்பின் பள்ளியில் மழைநீரை சேமிக்கும் திட்டத்தை முதலாவதாக தொடங்கினோம். குறிப்பிட்ட நாட்களில் முடித்திருந்தோம்.

இந்தியாவிலே தமிழ்நாட்டில்தான் மழைநீர் சேகரிப்பு முழுதாக செயல்படுத்தப்பட்டது. சின்ன கிராமங்களில் கூட மழைநீர் சேகரிக்கப்பட்டது. ஆளும், எதிர் கட்சிகள் கூட இந்த திட்டத்திற்கு சமரச சன்மார்க நிலையை கடைபிடித்தனர். தற்போதைய பிரதமர் மோடி அவர்கள் குஜராத் முதல்வராக இருந்தபோது மக்களவையில் பேசும்போது மழைநீரை சேமிப்பதில் நாம் தமிழ்நாட்டை பின்பற்ற வேண்டும் என பெருமையாக பேசியிருந்தார். ஆனால் 2006 ஆம் ஆண்டிற்கு பிறகு மழைநீர் சேகரிப்பு திட்டம் முற்றிலும் இங்கு தொலைந்துபோனது. எதாவது ஒரு வாகனத்தின் பின்னாலும், சில அரசாங்க சுவற்றிலும் பச்சை வண்ணத்தில் மழைநீரை சேமிப்போம் என்ற வாசகம் மட்டுமே இன்று மிஞ்சியிருக்கிறது.

இந்த உலகம் தோன்றியதற்கும் இன்று உயிர்ப்புடன் இருப்பதற்கும் நீரியல் சுழற்சியே காரணம். மழையைத் தவிர நீருக்கான ஆதாரம் எதுவுமே கிடையாது. பொழியும் மழை நீரை சேமித்து வைப்பதாலும், சேமித்த நீரை சிக்கணமாக பயன்படுத்துவதாலும் மட்டுமே நீரியல் சுழற்சியை சமண்படுத்த இயலும். அதனால்தான் பெரும் பிரளயம் வந்தாலும், வெள்ளம் வந்தாலும், சின்ன தூரல் மழை விழுந்தாலும் நீரை சேமியுங்கள் என்கிறார்கள் இயற்கை அறிவியல் அறிஞர்கள். தமிழ்நாட்டில் உள்ள ஏரிகள், கண்மாய்கள், குளங்கள், என ஒருவருடத்தின் மழைநீரை எதாவது ஒருவழியில் சேமித்தால் 390 டி.எம்.சி நீரை நாம் பெறலாம். இது நமது பாசனத்திற்கு தேவைப்படும் 256 டி.எம்.சி யைவிட அதிகம். மீதமிருப்பவை குடிநீர் தேவையை பூர்த்திசெய்துவிடும். பிறகு தண்ணீருக்காக காவிரி, கிருஷ்ணா நடுவர் நீதிமன்றம் என யார் காலிலும் விழ தேவையே இருக்காது. சின்ன மழைநீர் சேகரிப்பாக இருந்தாலும் பெரிய பெரிய ஆறுகள், குளங்களாக இருக்கட்டும் மழைநீர் இந்த பூமிக்கு தேவை. ஏனென்றால் பூமிக்கும் உயிர் உண்டு அது உயிர்வாழ நீர் அவசியம் "நீரின்றி அமையாது உலகு".