நல்லவேளை நாம தப்பிச்சோம்.




1925- ல் டாக்டர் ஆர்.டி. கார்வ் (R.D.Curve) என்பவர் மும்பையில் ஒரு மருத்துவமனையைத் தொடங்கினார். மருத்துவ வசதிகள் இல்லாத காலகட்டத்தில் அவர் தொடங்கிய மருத்துவமனைக்கு நிறைய நோயாளிகள் வந்திருக்க வேண்டும், அவரும் ஏரியாவில் பாப்புலர் டாக்டர் ஆகியிருக்க வேண்டும். ஆனால் நடந்ததோ வேறு. அவரது மருத்துவமனை பக்கம் யாரும் கால் வைக்கவில்லை. பேய் குடியிருக்கும் அரண்மனை போல அந்த வழியாக நடந்து செல்வதைக் கூட தவிர்த்தனர். அவரும் மருத்துவமனைக்கு ஆட்களை அழைத்துவர அனைத்து உத்திகளையும் கையாண்டார். பிரிட்டிஷார் ஆட்சியில் இருந்த சமயம் அரசிடம் சென்று கையில் ஸ்தெதஸ்கோப்புடன் முறையிட்டார். சுவர் விளம்பரம் செய்யப்பட்டது, வலுக்கட்டாயமாக ஆட்களை பிடித்து வந்தனர், மருத்துவமனைக்கு வருபவர்களுக்கு பிரார்த்தனைக்கு வந்தால் கடவுள் பிளாஸ்டிக் குடமும் தூக்கு வாளியும் கொடுப்பார் என்பதை போல பரிசுப் பொருட்களும் கொடுக்க முடிவு செய்யபட்டது. ஆனாலும் கடையில் வியாபாரம் ஒன்றும் ஆகவில்லை. கல்லாவும் நிறையவில்லை. முதலில் மும்பையில் ஒரு மருத்துவமனை பிறகு சென்னையில் ஒன்று, கொல்கத்தாவில் ஒன்று என திட்டத்தோடு வந்த டாக்டருக்கு தோல்வியே மிஞ்சியது. போதுன்டா சாமி என அவர் பெட்டியை கட்ட வேண்டியிருந்தது.

சரி... அவர் அப்படி என்ன அதிசயமான மருத்துவமனை ஆரம்பித்தார்?. 

அவர் ஆரம்பித்தது குடும்பக் கட்டுப்பாடு மருத்துவமனை (Family Planning Hospital) .

நோய், பஞ்சம், போர் என உலகின் இறப்பு விகிதம் ஒரு பக்கம் அதிகரித்த போது மறுபக்கம் உலகத்தின் சுமையும் அதிகரித்தது. குறிப்பாக ஆசிய நாடுகளில் இந்தியா மற்றும் சீனாவின் மக்கள்தொகைப் பெருக்கம் உலகை கவலையடையச் செய்தது. இதைக் கட்டுப்படுத்த அப்போது தொடங்கப்பட்டதுதான் இந்த கட்டிங் மருத்துவமனை. இதுவே "உலகின் முதல் குடும்பக்கட்டுப்பாடு மருத்துவமனையாகும்". அன்றைய காலகட்டத்தில் இந்தியாவில் குடும்பக் கட்டுப்பாடு செய்வது பாவச்செயலாக கருதப்பட்டது. மதங்களும் இதை எதிர்த்தது. 1940 -ல் பிரிட்டிஷார் இதற்கென தனி சட்டம் ஒன்றை இயற்றினர். அப்போது வந்தேமாதரம், வெள்ளையனே வெளியோறு, பாரதமாதாவுக்கு ஜே என பிஸியாக இருந்ததால் திட்டம் கைவிடப்பட்டது. இந்தியா சுகந்திரமடைந்த பிறகு 1950-ல் மீண்டும் குடும்பக் கட்டுப்பாடு திட்டம் தூசித்தட்டி கையில் எடுக்கப்பட்டது. இந்தியாவின் முதல் குடியரசு தினத்தில் நேரு பேருரை ஆற்றினார். சுகந்திர இந்தியாவை வலிமை மிக்க நாடாக மாற்றிக் காட்ட ஐந்தாண்டு திட்டம், தொழில்புரட்சி, இந்த திட்டம், அந்த திட்டம் என ஒவ்வொரு இந்தியனும் போராடுவோம் என்று அனல் பறக்க பேசினார். அவர் பேசியதை ரேடியோவில் கேட்ட மக்கள் கொதித்தெழுந்து இருட்டியவுடன் கதவை சாத்திக் கொண்டு இந்தியாவை வலிமை மிக்க நாடாக மாற்றும் நேருவின் கனவிற்காக போராட ஆரம்பித்தனர். அதன் விளைவு 1950-ல் 376.000 மில்லியனாக இருந்த இந்திய மக்கள் தொகை 2020-ல் 1308.002 மில்லியனாக வளர்ச்சியடைந்தது. கூடிய விரைவில் 1439.525 மில்லியன் மக்கள்தொகை கொண்ட சீனாவை சைடு வாங்கி முதல் இடத்திற்கு முன்னேறி விடுவோம். அன்று அந்த டாக்டர் கார்வ்க்கு ஒத்துழைத்து, அவர் சொன்னதற்கு தலையாட்டி, அவர் நினைத்தது மட்டும் நடந்திருந்தால்!!! நல்லவேளை நாம தப்பிச்சோம்.