☰ உள்ளே....

ஆழித்தேர்...


அட! நீங்க அந்த ஊரா? உங்கள் ஊரில் தேர் மிகவும் பிரபலமாச்சே "திருவாரூர் தேரழகு "என யாராவது சொல்லும் போது பெருமையாக இருக்கும், அதேசமயம் கழிவிரக்கம் தொற்றிக் கொள்ளும். உலகின் மிகப் பெரிய தேரான "ஆழித்தேர் " இங்குதான் இருக்கிறது. தேர் இழுக்கும் திருவிழாவை எங்கள் ஊரைப்போல் சிறப்பாக கொண்டாடுபவர் எவரும் இல்லை. பங்குனி மாதம் தொடங்கி 55 நாட்கள் நடைபெரும் பங்குனி உத்திர விழாவின் 27 ஆம்நாள் நிகழ்ச்சியான இந்த தேர் பவனி குறிப்பிட்ட நட்சத்திரத்தில், குறிப்பிட்ட  நாளில் நடப்பது ஐதீகம். ஆனால் தற்போதைய நிலைமை வேறு. அரசியலும், மதமும், நவீனமும் தேருக்கான புகழை சிலவருடங்களாக இழுக்காமல் நிறுத்தியே வைத்திருக்கின்றன. சென்ற வருடம் இரண்டு கோடிக்குமேல் செலவு செய்து தேரை புதுப்பித்து வெள்ளோட்டம் விட்டனர், ஆனால் இன்றுவரை திருவிழா பற்றிய அறிவிப்புகள் எதுவும் இல்லை. தற்போது பங்குனியும் நெருங்கிவிட்டது தேர்தலும் வருகிறது இந்த வருடமாவது தேர் வீதிக்கு வருமா? என்றால் அந்த ஆருரானுக்கே வெளிச்சம். பழமைவாய்ந்த  உலகப் புகழ்பெற்ற ஆழித்தேர் திருவிழாவில் இன்று மிஞ்சியிருப்பது பால்யகால கால் சட்டை நினைவுகள் மட்டுமே.


சைவ சமயத்தின் தலைமை பீடமாகவும் சப்தவிடங்கஸ்தலத்தில் மூலாதார ஸ்தலமாகவும் விளங்கிய திருவாரூர் தியாகராஜர் கோவிலுக்குச் சொந்தமானது இந்த ஆழித்தேர். ஆழி என்றால் பரந்து விரிந்த என்று பொருள், ஆழி - உலகு, ஆழி - சக்கரம் என்ற பொருள் உண்டு. உடல் ஊணமுற்றோர், வயதானவர்கள், கோவிலுக்குள் அனுமதி மறுக்கப்பட்டவர்களுக்கு இறைவன் தேரில் அமர்ந்து சுற்றிவந்து காட்சி தருவதற்காக அமைக்கப்பட்டதுதான் தேர் உலா. தேர் என்பது நகரும் கோவில். மேலும் இறைவனின் வெற்றியை கொண்டாட ஒவ்வொரு கோவிலிலும் தேர் திருவிழாவை நடத்துவார்கள்.
எங்கள் ஊர் தேர் திருவிழாவிற்கு ஒரு கதை இருக்கிறது.

தாரகாட்சன், வித்யுன்மாலி, வாணகரன் என்ற மூன்று அரக்கர்கள் சிவபெருமானிடம் நம்ம ஊர் தொழில் அதிபர் கடன் வாங்கியதுபோல் கணக்கில்லாத வரங்களை வாங்கிக் கொண்டு ஆட்டம் போட்டனர். அவர்களது கோட்டைகள் தங்கம், வெள்ளி, மற்றும் வென்கலத்தால் செய்யப்பட்டு மிதக்கும் சக்தி கொண்டது. அதை வைத்து அந்த அரக்கர்கள் அனைவரையும் ஆட்டிப்படைக்க சிவபெருமான் அவர்களை அழித்ததாக கூறப்படுகிறது. அந்த வெற்றியை போற்றவே பங்குனி தேர் திருவிழா இந்த ஸ்தலத்தில் கொண்டாடப்படுகிறது.

உலகின் மிகப்பெரிய இந்த தேரை வடிவமைத்தவர்களைப் பற்றிய குறிப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. 1400 வருடங்கள் தாண்டிய இந்த கோவிலைப் போன்றே ஆழித்தேரும் மிகப் பழமை வாய்ந்தது. இதற்கு இலக்கியங்களில் சில ஆதாரங்கள் கிடைத்திருக்கின்றன.

ஆழித்தேர் வித்கனை நான் கண்டது ஆருரரே - என தேவாரப் பாடலில் திருநாவுக்கரசர் பாடியிருக்கிறார்.

மடல் ஆழித் தாமரை ஆயிரத்தில் ஒன்று மலர்க்கண்
இடந்து இடுதலுமே, மலி வான் கோலச்
சுடர் ஆழி நெருமாலுக்கு அருள்செய்தனை: தும்பி
உரி போர்த்தானை தோழன் விட்ட
அடல் ஆழித்தேர் உடைய இலங்கைக் கோனை அடு
வரைக்கீழ் அடர்தானை : அருள் அர் கருணைக்
கடலானை : கஞ்சனூர் ஆண்ட கோவை : கற்பகத்தை
ஆண் ஆரக் கண்டு உய்ந்தேனே.

- திருத்தாண்டகம்.

1118 முதல் 1136 வரை விக்கிரம சோழன் பங்குனித் திருவிழாவை நடத்தியதாக கல்வெட்டுகள் கூறுகின்றன. 1748 ஆம் ஆண்டு மராட்டிய மன்னன் துளஜா இந்த தேர்த் திருவிழாவில் கலந்துகொண்ட குறிப்புகள் தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகத்தில் உள்ளது.


மற்ற கோவில்களின் தேர்கள் கால் தேர், அரைத் தேர், எனப்படும் இந்த ஆழித்தேர் மட்டுமே முழுத்தேர் ஆகும். மேலும் இதற்கு புகழ்வர காரணம் பிரமிக்க வைக்கும் அதன் எடையும், உயரமும் கண்ணைக் கவரும் வேலைப்பாடுகளும்தான். அழகிய மர வேலைப்பாடுகளுடன் கூடிய அலங்கரிக்கப்படாத தேர் 260 டன் எடை கொண்டது. தேர் நான்கு நிலையையும், பூதப்பர், சிறுஉறுதலம், பெரிய உருதலம், நடகாசனம், விமாசனம், தேவாசனம், சிம்மாசனம், என ஏழு அடுக்குகளையும் கொண்டது. இதில் பிரம்மா தேரோட்டியாகவும், நான்கு வேதங்கள் குதிரையாகவும் நிறுத்தப்பட்டுள்ளன. 20 மீட்டர் உயரம் கொண்ட கம்புகள், 300 மீட்டர் தேர்சீலைகள், ஒரு மீட்டர் கவசம் மற்றும் கொடியுடன் 30 மீட்டர் அளவிற்கு தேரின் மேற்பகுதி அலங்கரிக்கப் படுகிறது. இதற்காக 5 டன் பனஞ்சப்பைகள், 50 டன் மூங்கில், 10 டன் சவுக்கு மரங்களை பயன்படுத்துகின்றனர். பிறகு மாலைகள், பூக்கள் கொண்டு இறுதியில் அலங்கரித்த தேர் 360 டன் எடை கொண்டதாக மாறுகிறது.

இந்த தேரின் அமைப்பைக் கொண்டுதான் சென்னையில் உள்ள வள்ளுவர் கோட்டத்தை வடிவமைத்தனர். பழங்காலத்தில் பத்து சக்கரங்களை கொண்ட இந்த தேர் தற்போது ஆறு சக்கரங்களில் இயங்குகிறது. மரத்தாலான இந்த சக்கரங்களின் விட்டம் 2.59 மீட்டர். இந்த தேரை இழுக்க 24 மீட்டர் நீண்ட நான்கு வடங்கள் உள்ளது. பழங்காலத்தில் யானைகளும், குதிரைகளையும் கொண்டு இந்த தேரை நகர்த்த 12000 பேர் தேவைப்பட்டனர். தற்போது சக்கரங்களுக்கிடையே ஹைட்ராலிக் பொருத்தப்பட்டு 3000 பேர்களைக் கொண்டு சற்று எளிதாக நகர்த்துகின்றனர்.

தேரைப்போலவே அது கடந்து வந்த பாதைகளும் கடினமானது.1926 ஆம் ஆண்டு வடபாதிமங்களம் சோமசுந்தர முதலியார் குடும்பம் தேரை பராமரித்து வந்தனர். 1927 ஆம் ஆண்டு தேரின் சில பகுதிகள் தீப்பிடித்தன. நாத்திகம் ஆத்திகத்திற்கிடையே மாட்டிக் கொண்டு சில ஆண்டுகள் சிக்கியிருக்கிறது. 1947 சுதந்திரம் அடையும் வரை தேர் திருவிழா நடைபெறவில்லை, மீண்டும் 1950 களில் தொடங்கி சில வருடங்களுக்குப் பிறகு நிறுத்தப்பட்டது. 1970 ஆம் ஆண்டு தேர் மீண்டும் வீதிக்கு வந்தது அன்றுமுதல் அரசியலுக்கு ஆகாது என ஒவ்வொரு வருடமும் தேர் திருவிழா நடக்குமா நடக்காதா என்ற கேள்வியோடு தன் பயணத்தை கடந்து வந்திருக்கிறது.கடைசியாக 2010 ஆம் ஆண்டில் சுற்றிவந்த களைப்பில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறது.

ஆண்மீகம், பாரம்பரியம், கேளிக்கை, கௌரவம் இவற்றைத் தாண்டி திருவிழாக்கள் என்பது நினைவுகளின் பொக்கிஷம். மாமாவின் தோளில் ஏறிக்கொண்டு தேர் பவனி பார்த்த அந்த பொக்கிஷ நினைவோடு இந்த பதிவை எழுதுகிறேன்.