☰ உள்ளே....

அந்த குண்டு பையன்..


அந்த குண்டு பையனுக்கு பிறந்ததிலிருந்து இசை மீது அவ்வளவு ஆர்வம். பாகிஸ்தானி இந்தியரான அவனுடைய அப்பாவிற்கு வசதிவாய்ப்புகள் ஒன்றும் குறைவில்லை லண்டனில் வசதியாக வாழ்ந்து வந்தனர். பத்துவதில் R.D பர்மனின் இசைநிகழ்ச்சியில் அந்த பையன் தன் இசைத் திறமையை காட்ட அதில் கலந்து கொண்ட பாடகி ஆஷா போன்ஸ்லேவிற்கு இவன் ஒருநாள் பெரிய ஆளாக வருவான் என பொறிதட்டியது. அதற்குப் பிறகு பையனுக்கு சுக்கிரன் உச்சத்தில். பியானோ, கீ போர்டு, கிட்டார், அக்கார்டின், சாக்ஸபோன், வயலின், டிரம்ஸ், தபேலா, ஹார்மோணியம், சித்தார், சந்தூர் போன்ற 35 க்கும் மேற்பட்ட இசைக் கருவிகளை வாசிக்க பழகினான். பாடல்களைப் பாட சங்கீதமும் முறையாக கற்றுக் கொண்டான். ஜலதோசம் பிடித்த மூண்றாம் நாள் குரல்போல அவனது குரல் தனித்திருந்தது, அழகாய் இருந்தது, அதுவே அடையாளமாக மாறியது. 


சின்ன சின்ன மேடைகள், டிவி நிகழ்ச்சிகள், விளம்பரம், விளிப்புணர்வு பிரச்சாரங்களுக்கு இசையமைத்து பலரது பாராட்டுகளைப் பெற்றான். சில ஜிங்கில்ஸ் பாடி ஆங்கில ஆல்பம் ஒன்றை வெளியிட்டான். பிறகு புகழ்பெற்ற தபேலா இசைக் கலைஞர் ஜாகிர்உசேனுடன் இணைந்து The One & Only (1989) என்ற ஆல்பத்தை வெளியிட்டான். தனியாக வெளியிட்ட Raag Time ஆல்பம் இவனை கவணிக்க வைத்தது. Sargam என்ற பாகிஸ்தான் திரைப்படத்திற்கு இசையமைத்தான் அதில் தன்னை ஏற்றிவிட்ட ஆஷாபோன்ஸ்லேவை பாடவைத்தான். இந்தியில் வெளியான Lift kara de பாடல்தான் அவனை மிகவும் பிரபலப்படுத்தியது. அப்போதுதான் அந்த 160 கிலோ குண்டு பையனை Adhan Sami Khan என அனைவருக்கும் தெரிந்தது. 

இன்று நாற்பதை தாண்டிய Adhan Sami இந்திய இசையின் குறிப்பிடத்தக்க நபர். அவரது ஆல்பங்களும், இசைக் கோர்வைகளும் மெய் மறக்கச் செய்பவை. குறிப்பாக பியானோவுடன் சந்தூர் என சொல்லக்கூடிய பழங்கால இசைக்கருவியை சேர்த்து இசையமைப்பதில் வல்லவர். அந்த பாடல்களைக் கேட்டால் காற்றில் பறப்பதுபோல் தோன்றும்.  பழங்கால இசைக் கருவிகளையும் சுஃபி, ஜென் இசைகளையும் முறையாக பயண்படுத்துவார். அனைத்து இந்திய மொழி திரைப்பட பாடல்களில் இவரது குரலை கேட்டிருக்கலாம். தமிழில் பாய்ஸ், ஆய்த எழுத்து, SMS, சத்தம் போடாதே, சமீபத்திய வீரம் படத்திலும் இவர் பாடியிருக்கிறார். 
தன் உடல் எடையால் அவதியுற்ற இவர் தற்போது நீண்ட சிகிச்சைக்குப்பின் திரும்பியிருக்கிறார். இசைக் கச்சேரி, டிவி ஷோ, மற்றும் சில படங்களுக்கு இசையமைக்கிறார். வழக்கமான மதம் இவர் வாழ்க்கையிலும் விளையாடுகிறது. பாகிஸ்தான், இந்தியா, லண்டன் என குடியுரிமை இவரை அலக்கழிக்கிறது. இருந்தும் மும்பையில் தற்போது வசித்து வருகிறார். 

சிறுவயதில் கேட்ட Lift kara de பாடல்தான் என்னை இவரிடம் ஈர்த்தது. பிறகு பாடல்களுக்கான தேடல் அவரிடம் நெருக்கமாக கொண்டு சென்றது. அவரது கஸல்களை மனதை இலகுவாக்கக் கூடியது. அவரது ஆல்பங்களின் தொகுப்புகள் முழுவதும் சேமித்து வைத்திருக்கிறேன். அவற்றுள் நான் ரசிக்கும் பாடல்களில் சில உங்களுக்காக.