☰ உள்ளே....

சிறுதுளி பெருவெள்ளம் (சென்னை அனுபவம்-8)..


மடிப்பாக்கத்தில் உள்ள பள்ளியில் இருந்து அதன் முதல்வர் போனில் அழைத்தார் உங்களை சந்திக்க விரும்புவதாக கூறினார். தனிப்பட்ட முறையிலா அல்லது அலுவலக வேலைக்காகவா என்றேன் அலுவலக வேலை என்றால் மீட்டர், வெயிட்டிங் சார்ஜ் எல்லாம் போடுவேன் என்றபோது சிரித்துக் கொண்டார். தனிப்பட்ட முறையில் ஒரு மாலையில் அவரை சந்திக்க பள்ளிக்குச் சென்றேன் இரண்டு வருடங்களுக்கு முன்பு ஒரு கருத்தரங்கிற்காக இந்த பள்ளிக்கு வந்தது நினைவுக்குள் சுழன்றது. 
நண்பர் ஒருவர் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மழைநீர் சேமிப்புமுறை பற்றி வகுப்பெடுக்க அப்போது என்னை அழைத்திருந்தார். ஒரு ஞாயிற்றுக் கிழமையை எனக்காக ஒதுக்கியிருந்தனர். Save Drops" Welcome Dev என வகுப்பறையின் போர்டில் அழகாக எழுதியிருந்தனர் Dev என்ற எனது பெயரின் முதல் எழுத்தின் D -யை அழகாக நீர்த்துளியைப் போல் வரைந்திருந்தனர் நீண்ட நேரம் பார்த்து ரசித்தேன். பள்ளி மாணவர்களோடு உரையாட சில தகவல்களையும், கதைகளையும் அப்போது தயாரித்துச் சென்றிருந்தேன் அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் மாணவர்களின் பெற்றோரும் கூடவே வந்திருந்தனர். அவர்களுக்கு முன் நான் பேசப்போவதை நினைத்தபோது சற்று உதறல் எடுத்தது குழந்தைகள், மாணவர்கள் என்றால் எப்படியோ சமாளித்து விடுவேன் கொஞ்சம் அனுபவம் இருந்தது. வளர்ந்தவர்கள் முன்னணியில் பெரிய கூட்டங்களில் இதுவரை நான் அவ்வளவாக பேசியதில்லை. தயாரித்து வைத்திருந்த கதைகளும் குறிப்புகளும் இதற்கு உதவாது எனத் தெரியும் இருந்தும் ஒருவழியாக சமாளித்தேன், மழைநீர் சேகரிப்பு மட்டுமில்லாமல் ஆறு, ஏரி, கால்வாய்களை பாதுகாத்தல், மரம் வளர்தல், கழிவுகளை முறையாக சேகரித்தல் பற்றியும் மேலோட்டமாக பேசி முடித்திருந்தேன்.

கருத்தரங்கம் முடிந்ததும் நானும் பள்ளியின் முதல்வரும் பேசிக்கொண்டே வராண்டாவில் நடந்தோம். எதாவது குறையிருந்ததா என அவரிடம் கேட்டேன். நீங்கள் பொதுவாக எல்லாவற்றைப் பற்றியும் பேசினீர்கள். பரவாயில்லை ஆனால் அது இங்கு யாருக்கும் பயன்படாது என்றார். சென்னையில் எப்போதாவது மழை பொழியும் அங்காங்கே தண்ணீர் தேங்கி நிற்கும் பிறகு எங்காவது வடிந்துவிடும் இதுதான் இங்குள்ள மழைநீர் சேகரிப்பு முறை. நீங்கள் சொன்னதுபோல் ஆறுகள் குளங்கள், ஏரிகள், கால்வாய்கள் எல்லாம் சென்னையில் இல்லை அப்படி இருந்ததெல்லாம் குப்பைகளை சேகரிக்கும் இடமாக மாற்றப்பட்டுவிட்டது உங்கள் பேச்சு நன்றாக இருந்தது ஆனால் அவை நடைமுறைக்கு ஒத்துவராது மழைநீர் சேகரிப்பு முறைகளை அரசே கடைபிடிப்பதில்லை, அதை மக்களும் மறந்து வெகுநாள் அகிவிட்டது என்றார். இங்கு குடிக்க கொஞ்சம் நல்ல தண்ணீரும் ____ கழுவ கொஞ்சம் தண்ணீரும் இருந்தால் போதும் வேறு எதைப்பற்றியும் கவலையில்லை என்றார். சற்றுநேரம் அமைதியாக நடந்தோம். இதோ! இந்த பள்ளியில் அமைக்கப்பட்ட மழைநீர் சேகரிப்பு இடம் என ஒரு பகுதியை காண்பித்தார் சிறு பள்ளங்களுடன் புதர் மண்டி, தூர்ந்துபோன கிணற்றைப் போல் காணப்பட்டது. நாட்டின் எதிர்காலத்தை உருவாக்கும் இடத்திலே இந்த கதி என்றால் மற்ற இடங்களில் சொல்லவே தேவையில்லை என நினைத்துக் கொண்டேன். இவ்வளவு நேரம் தவளையாக கத்தியதெல்லாம் வீண் என நொந்துகொண்டேன்.சில பெரிய நிறுவனங்கள் மற்றும் பள்ளிக் கல்லூரிகளில் என்னைப்போன்ற சில தவளைகளை வைத்து சுற்றுசூழல், முதலுதவி, மரம் வளர்போம், மழைநீரை சேகரிப்போம் என கருத்தரங்கு நடத்துவார் அதை படம்பிடித்து அவர்களது வெப்சைட் அல்லது நாட்குறிப்பேட்டில் விளம்பரமாக போட்டுக்கொள்வார்.வாழ்கைக்கும் அறிவிற்கும் பயன்படாமலே போய்விடும்.
அன்றும் அதுதான் நிகழ்ந்தது.

இரண்டு வருடங்களுக்கு முன் நிகழ்ந்ததை அசைபோட்டுக்கொண்டே அதே வரண்டாவில் அமர்ந்தேன்.

- தொடரும்.