☰ உள்ளே....

சிறுதுளி பெருவெள்ளம் (சென்னை அனுபவம் - 7).


நான்கு செங்கல் கொஞ்சம் சிமென்ட் கலவை இருந்தால் போதும் பூசி மொழுகிவிடலாம் புதிதாக ஏதாவது செய்யவேண்டும் என நினைத்து நேரம்தான் கடந்து கொண்டிருந்தது. பழந் தமிழர்களின் நீர் மேலாண்மையைப் பற்றி தெரிந்துகொள்ள சில நாட்கள் பிடித்தது. இருக்கும் இடத்திலிருந்து கூகுளில் தட்டினால் எல்லாம் கிடைத்துவிடும் என நினைத்த எனக்கு ஏமாற்றமே மிஞ்சியது. தேடலில் அதிக தகவல்கள் கிடைக்கவில்லை புத்தகங்களை புரட்டினால் மட்டுமே தகவல்களை பெற முடியும் அதற்கு நூலகம் செல்ல முடிவு செய்தேன். ஆசியாவின் மிகப்பெரிய நூலகம் இங்குதான் இருக்கிறது அது அங்குதான் இருக்கிறதா? என சந்தேகம் வந்தது. சென்னையில் இருக்கும் நூலகத்தை வைத்து அரசியல் செய்தது அனைவரும் அறிவோம் நம் ஊரில்தான் அரண்மனை முதல் அடுப்படி வரை அரசியல் புகுந்துகொள்கிறது.
கொட்டும் மழையிலும் நூலகத்திற்குள் சென்றேன் சில குறிப்புகளை எடுத்துக்கொண்டேன். கோவில்களை விட மனதிற்கு இதமான அமைதியைத் தரும் இடம் நூலகம் எனத் தோன்றுகிறது. அங்கேயும் சிலர் கடலை வறுத்துக் கொண்டிருக்கிறார்கள், சிலர் செல்பி எடுத்துக் கொள்கிறார்கள். தஞ்சைத் தமிழ் பல்கலைக் கழகத்தில் பணிபுரியும் ஜீவானந்தம் சார் போனில் சில தகவல்களைத் தந்தார். நள்ளிரவு எத்தனை மணியானாலும் எனது சந்தேகங்களுக்கு விளக்கம் சொல்லும் புரபசர் தாஸ் அவர். சென்னைப் பல்கலைக் கழகத்திலிருக்கும் ராதாமோகன் சாரை எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தார் அவருடன் கழித்த நாட்கள் பயனுள்ளதாக இருந்தது. அங்கும் இங்கும் கிடைத்த தகவல்களை புரட்டிப் பார்த்தபோது ஆச்சரியமே மிஞ்சியது நம் முன்னோர்கள் பெரிய அணைக்கட்டு முதல் சிறிய கால்வாய்கள் வரை வடிவமைத்த முறைகளை வெறும் குப்பையைக் கொண்டு மூடிவிட்டோமே என நினைத்தபோது வெட்கப்பட வைத்தது. கிடைத்த தகவல்கள் மற்றும் புத்தகங்களோடு சிறிது நாட்கள் கடந்தது சென்னையின் இயல்பு வாழ்க்கையும் திரும்பியிருந்தது.

கொட்டும் மழைநீரைப் பொருத்தவரை 30% ஆவியாகும், 10% நிலத்தடியில் செல்லும், மீதமிருக்கும் 60% மழைநீர் சாலையில் ஓடும் இது நகரத்திற்கான வரைமுறை. இதைக் கொண்டுதான் மழைநீர் கால்வாய்களை அமைக்க வேண்டும். ஹாங்காங்கில் நூறாண்டு மழைக்குத் தக்கவாறு கால்வாய்களை அமைத்துள்ளனர் அதாவது கடந்த நூறாண்டுகளில் பெய்த மழையின் அதிகபட்ச அளவை கணக்கில் கொண்டு வடிவமைத்திருக்கின்றனர். நகரங்களைப் பொருத்தவரை கால்வாய்களையும் கழிவுநீர் பாதைகளையும் திட்டமிட்டு ஆராய்ந்து முடிக்கவேண்டும். சென்னையில் ஒருநாளைக்கு 65 கோடி லிட்டர் கழிவுநீர் உற்பத்தியாகிறது இதில் 30 % மட்டுமே மறுசுழற்சி செய்யப்படுகிறது மீதம் இருப்பவைகள் கால்வாய்களிலும் ஆற்றிலும் விடப்படுகிறது. சென்னையின் சில முக்கிய இடங்களில் கால்வாய்கள் மற்றும் வடிகால்கள் என்பதே கிடையாது. சென்னையில் 2847 கி.மீ அளவிற்கு சாலைகள் இருக்கின்றன. மழைநீர் வடிகால்கள் 855 கி.மீ மட்டுமே உள்ளன. இதனால்தான் இங்கு சிறிய அளவு மழைப் பொழிந்தால்கூட நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மனிதர்களால் வடிவமைக்கும் கால்வாய் மற்றும் வடிகால் அமைப்புமுறைகள் இயற்கையாக அமைந்ததற்கு ஒருபோதும் ஈடாகாது. நம் முன்னோர்கள் அதற்குத் தக்கவாறு வடிவமைத்து விட்டுச் சென்றுள்ளனர். அவற்றை ஆராய்வதும், பாதுகாப்பதுவும்தான் இதற்கான தீர்வு என கருதுகிறேன். 1998 - ன் கணக்குப்படி இந்தியா முழுவதும் 164.4 லட்சம் விவசாய நிலங்கள் கால்வாய் நீர் வெளியேராமல் தேங்கி உப்பு நிலங்களாக மாறி பயன்படாமல் இருக்கிறது என்ற தகவல் அதிர்ச்சியையும் அளித்தது. இந்த வெள்ளம் முடிந்த பிறகு பல திட்டங்கள் போடப்படும் பல கோடிகள் ஒதுக்கப்படும் எல்லாவற்றிற்குள்ளும் அரசியல் விளையாடும். நன்கு திட்டமிடல், நமது பாரம்பரியத்தை பின்பற்றுதல் என்பது காணாமல் போய்விடும். வளர்ந்து வரும் சென்னை போன்ற இந்திய நகரங்களின் இன்றைய தேவை ஆடம்பரங்கள் மட்டும் இல்லை, தேவை அடிப்படை கட்டமைப்பு மற்றும் மக்களின் விழிப்புணர்வு. இவற்றையெல்லாம் போதிக்கத்தான் இயற்கை இந்த திருவிளையாடலை நிகழ்த்தியிருக்கிறது என நினைக்கிறேன்.

படித்து உணர்ந்து கொண்டவற்றை வைத்துக் கொண்டு விமான நிலையத்தின் வடிகால் அமைப்பிற்கான திட்டத்தை வரையத் தொடங்கினோம். ஜகன் எங்களுடன் வேலை செய்யும் சிவில் இஞ்சினியர் எனக்கு உதவியாகவும் அவ்வபோது ஊக்கப்படுத்திக் கொண்டிருந்தான். அமைதியான இரவுப் பொழுதுகளில் வேலை செய்து கொண்டு பகலில் தூங்கி கனவு கண்டுக் கொண்டிருந்தேன். ஒருவழியாக கொடுத்த வேலையை முடித்திருந்தேன். திட்டத்தின் அனைத்து காகிதங்களும் மடிக்கப்பட்டு உறைக்குள் சென்றது. பல தலைகள் மற்றும் அரசியலைத் தாண்டி அது பிரிக்கப்படுமா இல்லை அப்படியே உறைக்குள்ளே தூங்குமா?  எனத் தெரியவில்லை.

- தொடரும்..