☰ உள்ளே....

The 33 (los 33).


நமக்கெல்லாம் இருட்டை கண்டாலே பயம் அதனால்தான் சூரியன் அந்த பக்கம் சென்றவுடன் கனவை இழுத்துப் போர்த்திக் கொண்டு கதவை இறுக்கி சாத்திக்கொண்டு தூங்கிவிடுகிறோம். ஆனால் சிலருக்கு இருள்தான் வாழ்க்கையே. குறிப்பாக சுரங்கத் தொழிலாளர்களின் வாழ்க்கை எலிகளைப் போல் பகல் எது? இரவு எது? எனத் தெரியாது பூமிக்கடியில் அன்றாடம் வாழ்வா சாவா என அலைந்துக் கொண்டிருக்கும். நாம் ஆசையாக அணியும் தங்கம், வைரம் போன்ற ஆபரணங்கள் முதல், சாதாரண குண்டூசிவரை தயாரிக்க இந்த பூமியைக் குடைந்தே ஆகவேண்டும். இதற்காக உலகமெங்கும் பல இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் தங்கள் வாழ்க்கையை அத்தகைய இருளில் பணயம் வைக்கின்றனர். ஆண்டிற்கு சுமார் 12000 தொழிலாளர்கள் சுரங்க விபத்துகளில் உயிரிழப்பதாக ஆய்வரிக்கை கூறுகிறது. இதனையும் தவிர்த்து  அரசாங்கமும், தனியார் நிறுவனங்களும் சில விபத்துகளை சுரங்கத்தோடு யாருக்கும் தெரியாமல் மூடிவிடும் கணக்குகளும் தனியே இருக்கிறது.  இன்று சுரங்கத் தொழில் என்பது பணம் காய்க்கும் மரம். ஆனால் அங்கு வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பும்  அமைதியான வாழ்க்கை  சூழலும் இருக்கிறதா? எனக் கேட்டால் மௌன விரதம்தான். விபத்துகளும், உயிரிழப்புகளும் நிகழ்ந்த பின்னரே எல்லோருக்கும் தலையில் மணியடிக்கிறது. இந்த சுரங்கத் தொழிலாளர்களின் இருட்டு வாழ்கையை உலகத்திற்கு வெளிச்சம் போட்டுக் காட்டிய நிகழ்வுதான் 2010 ஆம் ஆண்டு சிலியில் நடந்த "Copiapo" சுரங்க விபத்து. அந்த விபத்தைப் பற்றிய உண்மைத் திரைப்படம்தான் The 33 ( Los 33).சிலி நாட்டில் உள்ள "Copiapo " மாகாணத்திலிருந்து 45.கி.மீ தூரத்தில் "Atacama" பாலைவனத்தில் இருக்கிறது 121 வயதான "San jose" காப்பர் - தங்கச் சுரங்கம். San Esteban Mining Company - க்கு சொந்தமான அந்த சுரங்கத்தின் தொழிலாளர் குடியிருப்பில் அன்றைய நாள் கோழி கூவி நல்லபடியாக விடிந்தது. தொழிலாளர்கள் இஷ்ட தெய்வத்திற்கு பத்தி கொழுத்தி, சூடம் ஏற்றி, சாம்பிராணி போட்டு, மனைவிக்கு குழந்தைக்கு கண்ணத்தில் மாமூல் கொடுத்துவிட்டு, டாட்டா காட்டி வேலைக்கு கிளம்பினார்கள். சில மாதங்களுக்கு முன் சிலியில் ஏற்பட்ட பூகம்பமும் அதற்குப்பின் ஏற்பட்ட சுரங்கத்தின் சிறுசிறு விபத்துகளைப் பற்றி தெரிந்திருந்தும் அவர்களுக்கு வயிற்றைக் கழுவ வேறு வழியில்லை. சுரங்கத்தின் பாதுகாப்பும், மருத்துவ உதவிகளும் சரிவர கவணிக்கப்படவில்லை என புகார் அளிக்கப்பட்டது, இருந்தும் கொடுத்த இலக்கை முடிக்க காப்பர் மற்றும் தங்கம் கலந்த கலவையை வெட்டி எடுக்க பூமிக்கடியில் 5 கி.மீ தூரம் வரை சுரங்கத்திற்குள் சென்றனர். கணரக இயந்திரங்களை இயக்குபவர், வாகனம் ஓட்டுபவர், வெட்டும் பாறைகளை தரப் பரிசோதனை செய்பவர், டிரில் மிசின் போடுபவர்கள், ஹெல்பர்கள் என சிறிய குழு சுரங்கத்திற்குள் வேலை செய்துக் கொண்டிருந்தது. மதியவேளை நெருங்கிக் கொண்டிருந்த சமயம் சுரங்கத்தின்  ஒரு பகுதியில் திடீரென நிழச்சரிவு ஏற்பட்டது. ஏதோ! ஆபத்து என உணர்ந்த அந்த குழு, அங்கிருந்து கிளம்பி மேலே வர முடிவு செய்தனர். துரதிஷ்டவசமாக நிலச்சரிவு அதிகமாக வெளியில் செல்லும் ஒரே ஒரு வழியும் அடைத்துக் கொண்டது. சிறிது நேரத்தில் மொத்த சுரங்கமும்  முற்றிலுமாக மண்னோடு மண்னாக புதைந்து போனது. 


தகவலறிந்து தொழிலாளர்களின் குடுப்பம் சுரங்கம் இருக்குமிடத்திற்கு வந்து கூடினர். அவர்கள் வந்து சேர்வதற்குள் நிர்வாகம் சுரங்கத்தைச் சுற்றி பாதுகாப்பு வளையம் அமைத்து நடந்த விபத்தை எப்படியாவது மூடி மறைக்க முயன்று கொண்டிருந்தது. உள்ளே இருந்தவர்கள் உயிருடன் இருக்கிறார்களா? அல்லது இறந்துவிட்டார்களா? என யாருக்கும் தெரியவில்லை. சுரங்கத்தின் உள்ளே இருந்த ரேடியோ டிரான்சிஸ்டர், மற்றும் கேமராக்கள் அனைத்தும் பழுதடைந்து பலவருடங்கள் ஆகியிருந்தது. ஆபத்து காலத்தில் வெளியேரும் வழியும் நம்ம ஊர் நகரப் பேருந்து மாதிரி திடகாத்திரமாக இருந்தது. சுரங்கத்தின் நிர்வாகம் என்ன செய்வதென்று கையை பிசைந்துக் கொண்டிருந்தது. நேரம் கடந்து கொண்டிருக்க 
தொழிலாளர்களின் குடும்பத்தினர் போராட்டத்தில் இறங்கத் தொடங்கினர். இந்த செய்தி பாலைவனத்தை தாண்டி நகருக்குள் எட்டியது. அதற்குப்பின் அரசாங்கம் இராணுவத்துடன் அந்த இடத்திற்கு வந்து சேர்ந்தனர். நாட்களும் கடந்து கொண்டிருந்தது. 


சுரங்கங்களில் சில மீட்டர் தூரத்திற்கு இடைவெளியில் Shelter (Refuge) என்ற அமைப்பு இருக்கும். தகவல் பரிமாற்றம், உணவு, நீர், மருந்துகள் என அந்த இடத்தில் வைக்கப்பட்டிருக்கும். ஆபத்துக் காலத்தில் சுரங்கத்தின் உள்ளே இருப்பவர்கள் இந்த பகுதியை பயண்படுத்திக் கொள்ளலாம். சுரங்கத்தின் வரைபடைத்தை வைத்துக் கொண்டு இராணுவ மீட்புக்குழு ஒவ்வொரு Shelter -ல் சிறிய அளவில் துளை போட்டு கேமராக்களைப் பொருத்தி உள்ளே உள்ள நிலமையை ஆராயத் தொடங்கினர். இருகிய வயதான பாறைகளில் துளையிட நீண்ட நாட்கள் தேவைப்பட்டது. மொத்தம் 17 நாட்களுக்குப் பின் எட்டாவது முறையாக துளை போடும்போது, கருவியின் முனையில் சிறிய காகிதம் சுற்றப்பட்ட செய்தித்தாள் கிடைத்தது. அதில் Estamos bien en el refugio, los 33 (we are well in the shelter, the 33 us) என எழுதப் பட்டிருந்தது. மொத்தம் 33 தொழிலாளர்கள் 700 மீட்டர் (2300 அடி) ஆழத்தில் பத்திரமாக புதைந்து போன அந்த சுரங்கத்தில் உயிருடன் இருந்தனர். சுரங்கத்தின் வாயிலில் காத்திருந்த தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு அப்போதுதான் உயிர் திரும்பி வந்தது. அந்த துளை வழியே உணவு மற்றும் மருந்துகள் அனுப்பட்டது. சிறிய கேமரா பொருத்தப்பட்டு அவர்களின் உறவினர்களோடு பேச வசதியும் செய்து தரப்பட்டது, இந்த நிகழ்வு உலகின் அனைத்து மீடியாவின் காதுகளுக்கு எட்டியது. உலகமே இந்த 33 தொழிலாளர்களை நேரடியாகப் பார்த்துக் கொண்டிருந்தது. பூமிக்கடியில் இருக்கும் அவர்களை மீட்க உலக நாடுகளில் உள்ள மிகப்பெரிய துளையிடும் இயந்திரங்களைக் கொண்டு துளையிடப்பட்டது. துளையின் வழியே சிறிய கூண்டு போன்ற அமைப்பினை அனுப்பி ஒவ்வொருவராக மீட்க திட்டம் தீட்டினர். அதற்கு ஆபரேசன் பீனிக்ஸ் என பெயரிடப்பட்டது. அவர்கள் ஒவ்வொருவராக மீட்கப்பட்ட நிகழ்வை மக்கள் நேரடியாக பார்த்து மெய் சிலிர்த்தனர். பூமிக்கடியில் மொத்தம் 69 நாட்கள் தங்கிய இவர்கள் புதிய உலக சாதனையும் படைத்தனர். 


இந்த 33 தொழிலாளர்களின் தன்னம்பிக்கையையும், 69 நாட்கள் பூமிக்கடியில் திக்திக் நிமிடங்களையும், மீட்பு நடவடிக்கைகளையும் புகழ்பெற்ற பத்திரிக்கையாளர் Hector Tobar என்பவர் Deep Down Dark என்ற பெயரில் புத்தகமாக ஆவணப் படுத்தியிருந்தார். அதை அழகாக படமாக்கியுள்ளார் இயக்குனர் Patricia Riggen. இருள் நிறைந்த சுரங்கத்தில் ஊடுறுவி படம் பிடித்துள்ளது Checco Varese -ன் கேமரா. சிலியின் புகழ்பெற்ற நடிகர் Antonio Banderas சுரங்கத் தொழிலாளி Mario வாக நடித்துள்ளர். வாழ்வா? சாவா? என்ற மனநிலையில், குறைந்த உணவையும், நீரையும் வைத்துக் கொண்டு பூமிக்கடியில் சிக்கியிருக்கும் அனைவரையும் ஒன்று சேர்த்து தன்னம்பிக்கைக் கொடுக்கும் நடிப்பில் அவர் ஜொலிக்கிறார். படத்தில் மனதை கொடுக்கச் செய்வது James Horner -ன் இசை. இவர் டைட்டானிக், அவதார் படங்களுக்கு இசையமைத்தவர். பின்னணி இசையிலும், கடைசியாக வரும் அந்த புல்லாங்குழல் இசையிலும் மனது கரைந்து போகிறது. Maria மற்றும் இருவருக்குமிடையே நிகழும் அக்கா தம்பியின் பாசம் கண்கலங்கச் செய்கிறது. சுரங்கத் தொழிலாளர்களின் இருள் நிறைந்த பக்கங்களையும் உயிரை உறைய வைக்கும் Copiopo விபத்தின் திக்திக் நிமிடங்களையும் 33 தொழிலாளர்களின் 69 நாட்கள் தன்னம்பிக்கை போராட்டத்தையும் மெய்சிலிர்த்து உணர திரைப்படத்தை பாருங்கள். 

Directed by.   -     Patricia Riggen
Produced by. -      Robert Katz
                           Edward McGurn
                           Mike Medavoy
Screenplay by. -    Mikko Alanne
                           Craig Borten
                           Michael Thomas
Story by.              José Rivera
Based on.             Deep Down Dark.
Music by.             James Horner
Cinematography.   Checco Varese
Edited by.             Michael Tronick


மீட்பு நடவடிக்கையின் கடைசி நிமிடங்களின் உண்மை பதிவு.


Trailer