☰ உள்ளே....

1001 அரேபிய இரவுகள்.


சித்தப்பா கதை சொல்லுங்கள் என சுபிக்ஷாவும் மானஷாவும் கழுத்தைக் கட்டிக்கொள்வார்கள். சிலசமயம் வளர்ந்த அவளுக்கும் கதை சொல்வேன். சிக்கலான புத்தகங்களை வாசித்து களித்தபின் எனக்கும் ஆறுதலாக சில கதைகள் தேவைப்படும். இதற்காகவே சில சிறுவர்கள் மற்றும் நீதிக் கதை புத்தகங்களை வாசிப்பேன். அப்படி சமீபத்தில் வாசித்த புத்தகம்தான் 1001 இரவுகள் (1001 அரேபிய இரவுகள்).

உலகின் சிறந்த பொக்கிஷங்கள் சிலவற்றில் இதுவும் ஒன்று. பாரசீகம், அரேபியா, இந்தியா மற்றும் ஆசிய நாடுகள் சொல்லப்பட்ட கதைகளின் தொகுப்பே இந்த 1001 அரேபிய இரவுகள். உலகின் பல மொழிகளில் வெளிவந்த இந்த கதைகள் தலைமுறை தலைமுறையாக சொல்லப்பட்டு வருகின்றன. கட்டுக்கதை, காதல், நகைச்சுவை, நீதி, என உள்ளடக்கிய இந்த கதைகளின் அடிப்படை புத்திமதி என்பதாகும். மனித வாழ்க்கையில் எது உயர்வானது, எது இன்பமானது என்பதை அழகாக விளக்குகிறது. இந்த கதைகளை கேட்போரும், படிப்போரும், கலை, தந்திரம், மாயாஜாலம் என ஒருசேர தனி உலகத்தில் தாங்களும் இருப்பதாக உணர்வார்கள்.

பெண்களின் மீது தவறான எண்ணம் கொண்ட மன்னன் "ஷாரியர்" தினம் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்வான். மறுநாள் விடிந்ததும் அவளைக் கொன்று கழுகிற்கு இறையாக்கிவிடுவான். இதை வாடிக்கையாகவே வைத்திருந்தான். அவனது தவறான போக்கை மாற்ற நினைத்த அமைச்சரின் மகள் "ஷாராஜாத்" மன்னனை மணந்தாள். அவனை மாற்றுவதற்கு மணமுடிந்த அந்த நாளின் இரவில் ஒரு கதை கூறினாள். அந்த கதை முடிந்ததும் அடுத்த கதை கேட்கும் ஆவல் மன்னனுக்கு ஏற்பட்டது. அவள் நாளைக்கு சொல்கிறேன் என தூங்க போய்விட்டாள். இப்படி தினம்தினம் ஒரு கதை என 1001 இரவுகள் கழிந்தது. கதையின் அழகும் அதில் இருந்த கருத்துக்களும் அந்த மன்னனின் மனதை மாற்றியது. அவனும் திருந்தினான் ஷாராஜாத்தின் தலையும் தப்பியது. அவள் சொன்ன கதைகள்தான் 1001 அரேபிய இரவுகள் என அழைக்கப்படுகிறது.


அலிபாபாவும் நாற்பது திருடர்களும், சிந்துபாத், அலாவுதின் அற்புத விளக்கு, பாக்தாக் திருடன் போன்ற கதைகளை நாம் கேட்டிருப்போம், திரைப்படமாக பார்த்திருப்போம் இந்த கதைகளை உள்ளடக்கியதுதான் இந்த அரேபிய இரவுகள். இதில் வரும் சில கதைகள் தமிழில் பிரபலமான பஞ்ச தந்திர கதைகள் சிலவற்றோடு ஒத்துப் போகின்றன. கி.பி எட்டாம் நூற்றாண்டில் முதன் முதலில் "ஆலிஃப் லைலா" என அரபு மொழியில் தொகுப்பட்டு இன்றும் பல மொழிகளில் வெளிவந்து கொண்டிருக்கிறது. தமிழில் இந்த கதைகள் சிலவற்றைத் தொகுத்து கண்ணப்பன் பதிப்பகம் வெளியிட்டுள்ளர். ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டிய பொக்கிஷம். குழந்தைகளின் உலகம் கதைகளால் நிரம்பியது. நாமும் அதில் நுழைய குழந்தைகளாகிப் போவோம்.