நாக் அவுட்.




பெண் இயக்குனர் என்றால் பெண்களின் சோக வாழ்க்கையை படமாக எடுப்பார்கள். இவர் சற்று வித்தியாசமாக விளையாட்டை கையில் எடுத்திருக்கிறார். வழக்கமான சக்தே இன்டியா பார்முலா கதைதான், ஆனாலும் மீனவ குப்பத்திலிருந்து பாக்ஸிங் மேடைவரை கொண்டு சென்ற திரைக்கதை படத்தின் அழகு.

படத்தின் பலம், நீட்டி முழக்காத அருண் மாதேஷ்வரனுடைய சுழீர் வசனம். விளையாட்டில் உள்ள அரசியல் மற்றும் மதமாற்றம் குறித்த விமர்சனம் என நச்சுன்னு ஊசி குத்தியிருக்கிறார். குப்பத்து வாழ்க்கையை அழகாக படம் பிடித்திருக்கிறது சிவக்குமார் விஜயனின் கேமரா, அந்த மஞ்சள்கலர் டோன் செம அழகு. சண்டைகாரா பாடல் ஜாலியாக ஒலிக்கும் போதும், சோகமாக ஒலிக்கும் போதும் கவணிக்க வைக்கிறார் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன். லிவருக்கு விளக்கம் கொடுக்கும் நாசர் செம கலக்கல், காளி வெங்கட் மற்றும் அந்த கோச் ஜாகிர் ஹிசைன், நாயகியின் அக்காவாக வரும் மும்தாஜ் கவூர் (இவர் நிஜ குத்துசண்டை விராங்கனை), ராதாரவி என அனைவரும் இயல்பாக நடித்திருக்கின்றனர். வசனம், ஒளிப்பதிவு, இசை, நடிகர்களின் தேர்வு, என இந்த அழகிய தேருக்கு சாரதி பெண் இயக்குனர் "சுதா கொங்காரா". மணிரத்தினம் பட்டறையில் இருந்து வந்த இவருக்கு இது இரண்டாவது படம். மூண்று வருட உழைப்பு, படத்திற்காக இந்தியா முழுவதும் அலைந்திருக்கிறார். இவரை பெண் இயக்குனர் என்று தனித்து சொல்லுவது தவறு, அவரிடம் இருந்து விழுந்தது முதல் பஞ்ச்..


ரீ என்ட்ரி என்றால் சும்மா தெறிக்க விடனும் (கவணிக்க: இதுதான் உண்மையான தெறி) சரியாக செய்திருக்கிறார் மேடி. நீளமுடியுடன் முறுக்கேறிய உடலுடன், அட! சாக்லெட் பாய் மேடியா இது? ஆரம்ப காட்சியில் கிளுகிளுத்த அவர் ரித்திகாவின் பார்வைக்கு பம்முவதும், கோச்சிங்கில் விரைப்பதும், படு கேசுவலாக பதில் கொடுக்கும் போதும் பிண்ணிட்டிங்க மேடி. ஒலிம்பிக் கனவுடன் இருக்கும் ஒருவனை அலக்கழித்த விளையாட்டு அரசியலின் மேல் இருக்கும் கோபத்தை படம் முழுக்க வெளிப்படுத்தி இருக்கிறார். வாயைத் தொறந்தால் அலச்சியம் அதுகூட வெளிவரும் கெட்ட வார்த்தை என மேடி மோடிவித்தை காட்டுகிறார். கிழவா என ரித்திகா கலாய்க்கும்போது சற்று முறுக்கிய வெட்கத்துடன் ஒரு லுக்குவிடுவார் பாருங்க (மேடி உங்கள் ரசிகைகள் பலர் திருமணமாகி செட்டில் ஆகியிருப்பார்கள்- பார்த்து). இத்தனை நாளா எங்க போனிங்க மேடி?. மாதவனிடம் இருந்து விழுந்தது இரண்டாவது பஞ்ச்.

கதையின் நாயகியை தேடிக் கண்டுபிடிப்பது என்பது ஒரு கலை. அப்படி வலைபோட்டு பிடித்த நிஜ சண்டை கோழிதான் ரித்திகா சிங். என்னா பொண்ணு?  என்னா கண்ணு? இந்த பொண்ணு பாக்ஸிங்கில் ஜெயிக்க போவுதா? என நினைத்து உட்கார்ந்தால் இறுதி காட்சியில் BP எகிற வைக்கிறார். மான்குட்டி போல துள்ளிக் குதிப்பதும், மாதவன் தன்னை மடக்க நினைக்கிறார் என நினைத்து அவரிடம் உதிக்கும் ----வார்த்தைகளும், பிறகு மாதவனிடம் அன்போடு சரணடைந்து அவரை கலாய்ப்பதுவும், கடைசியில் தாவிவந்து குரங்கு குட்டிபோல் மாதவன் இடுப்பில் உட்கார்ந்து கொள்ளுவதும், அட நிஜ பாக்ஸிங் பொண்ணா இது?  லூசுத்தனமான சிரிப்பு, அமைதி, திடிரென வரும் கோபம் என ஒவ்வொரு காட்சிக்கும் சட்டென முகத்தை சிலைடுஷோ மாதிரி மாற்றிக் கொள்கிறார். ஐ வ்யூ மாஸ்ட்டர் என படு கேசுவலாக காதலை சொல்லும் போதும். முதல்முறையா காதலை சொல்லுற எனக்கே டர் ஆகல உங்களுக்கு ஏன் டர் ஆகுது என கலாய்க்கும் போதும், கிளைவுசை கையில் மாட்டிய உடன் மேடையில் சீறும்போதும், மனதில் ஒட்டிக் கொள்கிறார். பெரிய பூசணிக்காய் எடுத்து திருஷ்டி சுத்திப் போடுங்க இந்த பொண்ணுக்கு (கண்ணுக்கு). ரித்திகாவிடம் இருந்து விழுந்தது மூண்றாவது பஞ்ச்.

மொத்தம் மூன்று பஞ்ச். இறுதிச்சுற்றில் அடியேன் நாக்அவுட்.

நாலு பாட்டு, பாட்டுக்கு பாரின் லொக்கேசன், இரண்டு பைட்டு, பழிவாங்கும் பழைய கதை, கொஞ்சம் காதல், கலாய்க்கிறேன் என்ற பெயரில் காது கிழிக்கும் காமெடி, ஹீரோவின் குளோசப் மூஞ்சி, ஹீரோயின் குளோசப் இடுப்பு, உலக வரலாற்றில் சொல்லப்படாத கதை, என உள்ளூர் ரசிகர்களின் ஆராவாரத்தோடு ஒரு "மசாலா படம்" பார்த்து, வயிற்று வலி, அஜீரணம், நெஞ்சு எரிச்சல், வாயுத் தொல்லை இருந்தால் தாராளமாக இந்த படத்தை சுவைக்கலாம்...