☰ உள்ளே....

காஃபி ராகம்..


காலைப் பொழுது அழகானது (அதற்கு சீக்கிரமாக எழுந்திரிக்க வேண்டும்). அதிலும் மார்கழி, தை மாதங்களில் கூடுதல் அழகு. இவையே கிராமத்தில் அமைந்தால் அடடா! பேரழகு.
சன்னலின் வழியே நுழையும் வெளிச்சம், பனித்துளி, தும்பைப்பூ, வாசல் தெளித்த சாணம், அது கலந்த மண்வாசனை,  பக்கத்து வீட்டு சேவலின் அலாரம் டோன். அதன் பெட்டை ஜோடியின் ரிங்கிங் டோன் காதல் சிட்டுகளின் கி.கீ.கு.கூ. அடுப்படி காஃபி வாசம். கலர் கோலம், அப்பாவின் சட்டையையையோ, அண்ணனின் டீசர்ட்டையோ போட்டுக்கொண்டு கோலமிடும் ஆண்டாள்கள், சுப்ரபாரதம், நாதஸ்வரம், ஐய்கிரி நந்தினி, என ஒவ்வொருநாள் பொழுதும் இப்படியே விடிய வேண்டும். 


காலையில் எழுந்தவுடன் சுப்ரபாரதமோ, நாதஸ்வர இசையையோ சத்தமாக ஒலிக்கவிடுவார் அப்பா. ஹாலில் இருந்து வீடுமுழுவதும் நிறைந்து அடுத்த வீட்டீல் உள்ளவர்களுக்கும் குட்மார்னிங் சொல்லி எழுப்பிடும் அளவிற்கு சப்தம் இருக்கும். அதையும் தாண்டி இரண்டு மூண்று வீடு சென்று "ஆரம்பிச்சிட்டாய்யா இந்த ஆளு, டெய்லி இதே! வேளையா போச்சி " என்ற சில திட்டுகளையும் வாங்கிவரும். அதைக் கோட்டுதான் எங்கள் பொழுது விடியும்.
வாக்கிங் சென்றுவிட்டு, பேப்பர் படித்து, காலைக்கடன் முடித்து சாப்பிட்டுவிட்டு அவர் ஆபிஸ் கிளம்பும் வரை அவை ஒலித்துக் கொண்டே இருக்கும், தப்பித்தவறி வேறுபாடல்களை மாற்றினாலோ, அனைத்துவிட்டாலோ தொலைந்தது. "ஏன்டா காலங் காத்தாலா அய்யோ! அம்மான்னு கத்துற பாட்டுதான் வேணுமா? -ஸ்வாகா. நல்ல வார்த்தைகள் உங்களுக்கு கேட்கவே பிடிக்காதா? -ஸ்வாகா.  இதெல்லாம் ஒரு பாட்டா -ஸ்வாகா, --  --- ------- ஸ்வாகா என 1008 அர்ச்சானைகளை ஆரம்பித்துவிடுவார். 

தொடர்ந்து நாதஸ்வர இசை அல்லது சுப்ரபாரதத்தை கேட்பது பிளாக் ஃகாபி சாப்பிடுவதுபோல் ஆகிவிடும், அப்பாவின் 1008 அர்ச்சனைகளையும் கேட்டு கேட்டு கசந்திருந்தது. இதற்காகவே வழக்கமாக கேட்கும் சினிமாபாடல்களை தவிர்த்து கர்நாடக சங்கீதம் கலந்த பாடல்களை தேர்ந்தெடுத்து வைத்திருக்கிறேன். அப்பா அந்த பக்கம் கிளம்பியவுடன் சப்தமில்லாமல் மாற்றிவிடுவேன். கசக்கி பிழிந்த இதயத்தின் காதல் பாடல்களுக்கு இடையே , ராகம்,  தாளம், பல்லவி,  என இசையின் வடிவம் மாறாமல் கர்நாடக சங்கீத வடிவில் வெளிவரும் தமிழ் திரைப்பட பாடல்கள் வெகு குறைவுதான். அதிகாலை மட்டுமில்லாமல் கேட்கும் எல்லா தருணங்களில் மனதிற்குள் அமைதி நிலவும். ராகம், தாளம், என இசையின் நுணுக்கங்கள் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால் அதிகாலை காஃபியோடு சோர்ந்து இந்த பாடல்களை சுவைப்பதுண்டு. அப்படி எங்கள் வீட்டில் அதிகாலையில் ஒலிக்கும் சில காஃபி ராகங்கள்..