☰ உள்ளே....

காபி ராகம்...

காஃபி ராகம் என வேடிக்கையாக எழுதியிருந்தேன். ராகங்களின் வகைகளில் காபி ராகம் என்று ஒன்று இருக்கிறது. அந்த நிஜ காபி ராகத்தை சுவைத்துவிட நினைத்தேன்.


"கரஹரப்பிரியா " ராகத்தின் ஜன்ய ராகம்தான் இந்த காபி ராகம்.  தாய் ராகங்கள் என சொல்லப்படுகின்ற ராகங்களின் ஸ்வரங்களின் எண்ணிக்கையை மாற்றியமைப்பதின் மூலம் பிறப்பவை "ஜன்ய ராகங்கள்".  22 வது மேளகர்த்தாவான கரஹரப்பிரியா ராகத்தினை மாற்றியமைத்து பிறந்த ஜன்யராகம்தான் இந்த காபி. ஸ்ருங்கார ரசத்திற்கு பொருத்தமான ராகம். ஸ்ருங்காரம் என்றால் கோவம், அழுகை, சிரிப்பு, மகிழ்ச்சி, போன்ற நவரசங்கள். இதை பாடலாக வெளிப்படுத்த இந்த ராகம் உகந்தது. இதில் அன்னிய ஸ்வரங்கள் அதிகம் வரும். இதில் வரும் ஸ்வரங்கள் ஷட்ஜமம், சதுஸ்ருதி ரிஷபம், சாதாரண காந்தாரம், அர்தர காந்தாரம், சுத்த மத்யமம், பஞ்சமம், சுத்த தைவதம், சதுஸ்ருதி, தைவதம், கைஷிகி நிஷாதம், மற்றும் காகலி நிஷாதம் என்பனவாகும்.


காபி ராகம் பெயரைக் கேட்டாலே சுவைக்கிறது அல்லவா. இந்த ராகத்தில் அமைந்த பாடல்களும் சுவையானதே. காபி ராகம் (Kafi Raga) என பெயர்வர காரணம் என்ன? சரிவர தெரியவில்லை. பொதுவாக மாலை வேளைகளில் பாடக்கூடிய ராகம் இது. இசை கச்சேரி நடக்கும் மாலைவேளையில் கச்சேரி பிடிக்காமல் அலுத்து, போர் அடிக்கிறது வெளியில் சென்று ஒருவாய் காஃபி குடிச்சிட்டுவரலாம் என்று எழுந்துபோக நினைக்கையில் இந்த ராகத்தை பாடுவார்கள். ராகத்தின் சுவையில் மெய்மறந்து அப்படியே நாம் அமர்ந்துவிடுவோம், வெளியில் செல்லாமலே காஃபி குடித்த ஆசுவாசம் கிடைக்கும். அதனால்தான் இந்த பெயரை வைத்திருக்கக்கூடும் என விளையாட்டாக சொல்வார்கள். இது ஆண்பால் ராகம் ஆண்கள் பாடினால்தான் சிறப்பு (ஏற்கனவே பல வீடுகளில் காஃபி போடுவது ஆண்களே. அடியேனையும் சேர்த்து).

பாபநாசம் சிவன் இயற்றிய "என்னதவம் செய்தனை யாசோதா " என்ற பாடலும் "ரகுபதி ராஜவ ராஜா ராம் பாடலும்" இந்த காபி ராகத்தை சார்ந்தது. அடிக்கடி டிவியிலும், கச்சேரிகளிலும் இந்த பாடல்களை கேட்டிருக்கலாம்.தமிழ் திரைப்படத்தில் சில இசையமைப்பாளர்கள் மட்டுமே டேஸ்டாக காபி போட்டிருக்கின்றனர் (மீதிப்பேர் காப்பி போட்டிருக்கிறார்கள்). அதாவது இந்த ராகத்தை லாவகரமாக கையாண்டிருக்கின்றனர். .அப்படி காபி ராகத்தில் அமைந்த பாடல்கள் இனிமையான தாலாட்டாக அமைந்திருக்கிறது. இருக்காதா பின்னே ஆண்களின் ராகமாச்சே.
அப்பாடா!  காபி ராகத்தைப் பற்றி தெரிந்துகொண்டேன். நல்ல காஃபி குடித்த அனுபவம் கிடைத்தது.
காபி ராகத்தில் என்னை கவர்ந்த சில தமிழ் திரைப்பட பாடல்கள் உங்கள் பார்வைக்கு.