☰ உள்ளே....

ஜாம்பவான்...

திரை உலகின் ஜாம்பவான், கிரிக்கெட்டின் ஜாம்பவான், கால்பந்தாட்ட ஜாம்பவான், இசை உலகின் ஜாம்பவான் என்று அவரவர் துறையில் அசைக்க முடியாது சிறந்து விளங்கும் நபரை "ஜாம்பவான்" என புகழ்வோம். யார் இந்த ஜாம்பவான்?.

புராணத்திலும், இதிகாசங்களிலும் வரும் அட்வெஜ்சர் ஹீரோதான் நம்ம ஜாம்பவான்.

ஒருமுறை சிவபெருமானும் பார்வதியும் கைலாயத்திலிருந்து போர் அடிக்கிறது என்று காட்டிற்கு பிக்னிக் சென்றனர். தங்களுடைய உருவமும் காஸ்டியுமும் அனைவருக்கும் தெரிந்துவிடும் என்பதால் கரடியாக உருமாறினர். இயற்கையோடு கலந்து மகிழ்ந்த போது அவர்களுக்கு மனிதனும் கரடியும் கலந்த குழந்தை பிறந்தது. அந்த குழந்தையே ஜாம்பவான் "The Beer king" என்கின்ற வாய்வழி கதை சொல்லப்படுகிறது.

ஜாம்பவான் என்றால் அசைக்க முடியாத பலம் பொருந்தியவன் என்று பொருள் . இவரே கரடிகளின் அரசன். ஜாம்பவான் அந்த கால WWF -ல் (மல்யுத்தத்தில்) யாரும் வெல்ல முடியாத வீரராக இருந்திருக்கிறார்.
தேவர்களும் அசுரர்களும் பார்க்கடலை கடையும்போது அவர்களுக்கு ஜாம்பவான் உதவியிருக்கிறார் . வாமன அவதாரத்தில் ஜாம்பவான் அவரை ஏழுமுறை சுற்றி வந்ததாகவும் தொன்மக் கதைகள் கூறுகின்றன.


இராமாயணத்தில் சுக்ரீவனின் அமைச்சராக இருந்தவர் இந்த ஜாம்பவான். மங்குனி அமைச்சராக இல்லாமல் சிறந்த அனுபவசாலியாகவும் அறிவு கூர்மையானவராகவும் இருந்திருக்கிறார். இராமபிராணுக்கே சில சமயம் அட்வைஸ் வழங்கியிருக்கிறார். அனுமார் கடலைத்தாண்டி இலங்கைக்குச் சென்று சீதையிடம் ராமன் அனுப்பிய செய்தியையும் கொரியரையும் (மோதிரம்) எப்படி சேர்ப்பது என யோசித்து கவலையில் ஆழ்ந்திருக்க அவருக்கு அட்வைஸ் வழங்கி காம்ப்ளான் கொடுத்தவர் இந்த ஜாம்பவான். பிறகு இராவண யுத்தத்தில் (Climax Fight) மேகநாதன் தொடுத்த நாக பாணத்திற்கு லெட்சுமனன் உட்பட அனைவரும் மட்டையாக ஜாம்பவான் மட்டுமே ஸ்டெடியாக நின்றார். அத்தனை பலம் பொருந்தியவர்அவர். 
இராமாயணம் முடிந்து கிளைமேக்ஸ் நெருங்குகையில் இராமணின் பட்டாபிசேகத்தில் கலந்து கொண்ட நம்ம ஹீரோ இராமணின் பிரிவை எண்ணி கண் கலங்குகிறார். அப்போது இராமண் "ஜாம்பவானே நீ எங்கிருந்தாலும் உன் நெஞ்சில் நான் இருப்பேன் அடுத்துவரும் துவாபர யுகத்தில் உனக்கு நேருக்கு நேராக காட்சித் தருவேன்" என வாக்குறுதி அளித்துவிட்டு சீதையை சந்தேகப்பட கிளம்பிவிட்டார்.


அடுத்து துவாபர யுகம் தொடங்கியது. யாதவ குல அரசன் ஸ்த்ராஜித் என்ற அரசன் பலம் வாய்ந்த தன் வழிபாட்டால் அந்த சூரியனையே குளிர்வித்து ஸ்யமந்தகமணி என்னும் ஒளிபொருந்திய மாலையை பரிசாக பெற்றான். அந்த மாலையை வைத்திருப்பவர் செல்வ செழிப்புடன் பதினாறும் அதற்கு மேலும் பெற்று வாழ்வார்கள். ஸ்த்ராஜித்தும் அப்படியே வாழ்ந்து தன் நாட்டையும் செழிப்பாக ஆட்சி புரிந்தான். இதனை அறிந்த கிருஷ்ணன் அந்த மாலையை நாட்டின் பெரும்பகுதியை ஆண்டுவந்த உக்கிரசேன மகாராஜாவிற்கு கொடுக்குமாறு கேட்டுக்கொண்டான். இதனால் நாட்டின் பெரும்பகுதி செல்வ செழிப்படையும் என்பது கிருஷ்ணனின் எண்ணம். ஆனால் ஸ்த்ராஜித் அந்த அபூர்வ மாலையை தர மறுத்துவிட்டான். ஒருநாள் ஸ்த்ராஜித்தின் அருமைத்தம்பி "பிரசேனன்"அந்த மாலையை அணிந்துகொண்டு வேட்டைக்கு சென்றான்(படுபாவி அந்தபுரத்திற்கு போயிருக்கலாம்) அப்போது காட்டில் இருந்த சிங்கம் ஒன்று அவனை கொன்று ஸ்யமந்தகமணி மாலையை எடுத்துக் கொண்டு குகைக்குள் சென்று மறைந்தது. அந்த குகை நமது ஹீரோ ஜாம்பவானுக்கு சொந்தமானது. குகையில் சிங்கத்தை கண்டு ஜாம்பவான் சண்டையிட்டு அதை கொன்று அபூர்வ மாலையை தன் மகள் ஜாம்பாவதிக்கு அணிவித்து விடுகிறார்.

வேட்டைக்கு சென்ற தன்தம்பி பிரசேனன் திரும்பாததை உணர்ந்த ஸ்த்ராஜித், அந்த அபூர்வ மாலைக்காக கிருஷ்ணன் தன் தம்பியை நயவஞ்சகமாக கொன்றுவிட்டதாக வதந்தியை பரப்புகிறான். கிருஷ்ணன் தன் மீது விழுந்த பழியை நீக்க காட்டிற்குள் செல்கிறான். அங்கு பிரசேனன் இறந்து கிடக்கும் உடலின் அருகே காணப்படும் சிங்கத்தின் காலடிச் சுவட்டை பின் தொடர்ந்து ஜாம்பவானின் குகைக்குள் நுழைகிறான். ஸ்யமந்தகமணி மாலையை கழுத்தில் அணிந்திருக்கும் ஜாம்பவதி கிருஷ்ணனைக் கண்டு அஞ்சி கூச்சலிட ஜாம்பவான் விரைந்து வந்து சண்டையை தொடங்குகிறார் இருவரும் பலமாக மோதிக்கொள்ள சண்டை 27 நாட்கள் நீடிக்கிறது. அதற்குப்பின் ஜாம்பவான் சற்று டையர்டாக தன்னுடன் சரிசமமாக மல்யுத்தம் செய்து வீழ்துபவன் சாதாரண பிரவியாக இருக்க முடியாது என நினைக்கிறார். அப்போது கிருஷ்ணன் "ஜாம்பவா நன்றாக என்னை உற்றுப்பார்" என இராமபிராணாக உருமாறி கிராபிக்ஸ் கலக்கலுடன் காட்சியளிக்கிறார். ஜாம்பவான் மனம்மகிழ்ந்து தான் பிறந்த பிறவியின் பயணை அடைந்ததாக காலில் விழுந்து வணங்குகிறார். தன் இறைவனின் திருவிளையாடலுக்கு பரிசாக ஸ்யமந்தகமணி மாலையையும் கொடுத்து, தன் மகளான ஜாம்பவதியை மணமுடித்தும் வைக்கிறார். இந்த ஜாம்பவதிதான் கிருஷ்ணனின் ஏழு மனைவிகளில் (கொடுத்து வைத்தவர்) இரண்டாவதானவர். இவருக்கு சாம்பன் என்ற மகன் பிறந்ததாகவும், சாம்பன் வளர்ந்து மகாபாரத வில்லன் துரியோதனின் மகளான லட்சனாவை லவ் பண்ணி அவளை வீடுபுகுந்து மன்னிக்கவும் அரண்மனை புகுந்து தூக்கிவந்து திருமணம் செய்ததாகவும் கதை உள்ளது.


கிருஷ்ணன் கடவுளாக வழிபடும் சில வடஇந்திய கோவில்களில் ஜாம்பவதியையும் மக்கள் வணங்குகின்றனர். சில மாநிலங்களில் தெருகூத்து கலைகளில் ஜாம்பவான் கதை இன்றும் நிகழ்த்தப்படுகிறது. குஜராத்தில் உள்ள போர்பந்தலுக்கு அருகே ரானவ் என்னும் கிராமத்தில் ஜாம்பவான் குகை இருப்பதாக நம்பப்படுகிறது. இந்த குகையில்தான் அவர் கிருஷ்ணனுடன் சண்டையிட்டதாக நம்புகின்றனர். ஆந்திர மாநிலத்தில் "ஜாம்பவா" என்ற தனி இனமே உள்ளது. நமது மாபெரும் இதிகாசங்கள் இரண்டிலும், இரண்டு யுகங்களிலும் ஜாம்பவான் இருந்திருக்கிறார். யாரும் வெல்ல முடியாத மகாபலம் பொருந்திய மல்யுத்த வீரர். கிருஷ்ணனுக்கே இவரை வீழ்த்த 27 நாட்கள் தேவைப்பட்டது. இதையும் தாண்டி கடவுளின் இரண்டு அவதாரங்களிலும் அவருக்கு பக்கபலமாகவும் பயபக்தியுடனும் இருந்திருக்கிறார். அதனால் தான் நாம் அவரவர் துறைகளில் சிறந்துவிளங்கும் நபரை நாம் ஜாம்பவான் என்கின்றோம்.