குட்டி தேவதையின் ஓவியம்..



(மகள் விழிக்கும் முன்பு வேலைக்கு சென்றுவிடுவதும், அவள் உறங்கிய பின்பு வீடு திரும்புவதும், வார விடுமுறை மட்டுமே வரம் எனவும்  வாய்க்கப்பெற்ற கார்ப்பரேட் கலாச்சார தந்தை அவன். ஆனாலும் வீடு திரும்பியவுடன் ...இன்னக்கி குட்டி தேவதை என்ன சேட்டை செஞ்சா... என தன் மனைவியிடம் அவன் ஆவலாக கேட்க தவறுவதேயில்லை. 

அப்படி அவன் கேட்க...

அவளா?... இன்னக்கி என்ன செஞ்சா தெரியுமா? .. உங்கள மாதிரியே ஓவியங்கிற பேர்ல சுவரெல்லாம் கிறுக்கி வச்சிருக்கா. இதோ!... உங்க புது டைரிய பாருங்க...அத கூட அவ விட்டு வைக்கல. 

அவன் ஒருமுறை சுவற்றை சுற்றிப் பார்த்துவிட்டு அந்த புது டைரியை புரட்டுகிறான். அதில் முக்கோணம் வட்டம் சதுரம் கோடுகள் புள்ளிகள் என ஒழுங்கற்று வரையப்பட்டிருக்கிறது. மற்ற கண்களுக்கு அது கிறுக்கல்கள் போல தோன்றினாலும் அவனுக்கு அது (அவனுக்கு மட்டுமே அது) ஓவியமாக காட்சியளிக்கிறது. தனது குட்டி தேவதை வரைந்த அந்த ஓவியத்திற்கு அவன் அர்த்தம் கண்டுபிடிக்க முயல்கிறான்.)


முக்கோணவடிவில்
இருக்கும் அது
எங்கள் கூரைவீடுதான்.

அதற்கு மேல்
வட்டமாக
காய்ந்து கொண்டிருப்பது
சூரியன்.

வீட்டிற்கு வலப்புறத்தில்
இரண்டு நீள்கோடுகள்
இரண்டு தென்னை மரங்கள்.

அதற்குக் கீழ்
புள்ளியாக மேய்வது
காக்கையோ
குருவியோ
கோழியோ.

கிடைமட்டமாக வளைந்த
கோடுகளில்
குளமாக
நீர் நிரம்பியிருக்கிறது.

குளக்கரையில்
பூத்திருக்கும்
பெரிய சதுரம் நான்
சிறிய சதுரம் என்னவள்.

எங்களுக்கு சற்றுத்தள்ளி
குளத்தின் பக்கவாட்டில்
வீட்டிற்கு அருகில்
சூரியனையும்
தென்னை மரங்களையும்
மேய்ந்து கொண்டிருக்கும்
புள்ளிகளையும்
ரசித்தவாரு இருக்கிறது
ஒரு அரைவட்ட வடிவம்.

அது என்னவாக
இருக்கக்கூடும்?

ஓவியத்தை மறுமுறை
உற்றுப் பார்த்தபடி
திரும்பினேன்.

வரைந்த களைப்பில்
உறங்கிக் கொண்டிருந்தாள்
குட்டி தேவதை.