☰ உள்ளே....

Hip... Hop....


99, 66, 107 என நம்பர் வரையப்பட்ட அன்சைஸ் பனியன் போட்டுக் கொண்டு. நகைக்கடை விளம்பர மாடல் மாதிரி கையில, காதுல, கழுத்துல நகைகள் மாட்டி, பரட்டை தலையோடு, பாதியில் எழுந்து வந்த சேவிங் பன்னாத மூஞ்சியை, ஸ்கிரீனுக்கு முன்னாடி குளோசா காட்டி, வெரும் கர்ச்சிப்பை மட்டும் இழுத்து போர்த்திக்கொண்ட பெண்களை பக்கத்தில் ஆடவிட்டு, புரியாத வார்த்தையை கிடுகிடுன்னு ஸ்பீடா இசையோடு சேர்த்து பாடுவார்கள் அல்லது படிப்பார்கள். என்ன கருமம் இது என்றால் அதுதான் Hip Hop பாடல்.1970 -களில் அமேரிக்காவில் ஸ்டைலான ரிதமிக் மியுசிக்காக முதன்முதலில் வெளிவந்தது. அதற்குப் பிறகு  எல்லா வாயிலும் புகுந்து இன்று பல ஆல்பங்களில் கலக்கிக் கொண்டிருக்கிறது. MCing, DJing, B-Boying, Graffiti writing, Sampling, Beet Boxing என்பதன் கலவையே இந்த Hip Hop. 

MCing/ Rapping.

ஆப்பிரிக்காவில் மிகவும் பிரபலமான இசை வகை. அகராதியைப் புரட்டினால் Rapping என்பதற்கு Strike, quick, smart, light blow என ஏகப்பட்ட அர்த்தங்கள். இங்கு Rapping என்பதற்கு பாடல்களை படிப்பது என்று பொருள். இதற்கு ஸ்ருதி சுத்தமாக ஏழு, எட்டு கட்டையில் பாடக்கூடிய குரல்வளம் எல்லாம் தேவையில்லை. VTV கனேஷ் மாதிரி குரல் இருந்தால் போதும். கம்பராமாயணத்தையோ பெரியபுராணத்தையே இசைக்குத் தக்கவாறு வேகமாக யாரும் புரிந்து கொள்ளாதபடி படித்தால் போதும் அதுதான் MCing/Rapping. 

D Jing/ Scratching.

ஊரில் சில சுபகாரியங்களுக்கு மைக்செட் கட்டி நாலுதெருவிற்கு எவனும் தூங்கக்கூடாது என பாடல்களை சப்தமாக ஒலிக்க விடுவார்கள். ஒரு பெருசு வந்து எம்.ஜி. ஆர் பாட்டு போடு என ரவுசு பன்னும். டேய் லவ் சாங்கா போடுடா என ஒருசிலர் மிரட்டுவார்கள், தம்பி சோகப்பாட்டு இருக்கா என தாடிவைத்த அண்ணன் கேட்பார். இதையெல்லாம் பொருத்துக்கொண்டு தலைவிதியே என நொந்து ஒவ்வொருத்தருக்கும் பிடித்தமாதிரி பாடல்களை மாற்றி மாற்றி போடுவார் அந்த மைக்செட்டுக்காரர். அவர்தான் DJ அவ்வாறு, கேட்கும் பாடலை மாற்றி மாற்றி போடுவதற்கு பெயர்தான் D Jing. 

B.Boying/ Breaking.

ஆப்பிரிக்க அமேரிக்கா நாடுகளின் புகழ்பெற்ற தெரு நடனம்தான் B.Boying. இசைக்கு தக்கவாறு ஆடுவார் திடிரென ஆட்டத்தை மாற்றி குதிப்பார்கள், தாவுவார்கள், தலைகீழாக நிற்பார்கள், ஒற்றைக் கையை தரையில் ஊண்றி நடப்பார்கள். தலையை கீழே வைத்து உடலை சுழற்றுவார்கள் மீண்டும் இசையோடு ஆடுவார்கள். சுருக்கமாக சொன்னால் நம்மஊரு வித்தைகாட்டுபவர்கள். அவ்வாறு செய்யும் நடனம்தான் B-Boying.

Graffiti writing.

தெரு ஓவியம் போல இது சுவர் வர்ணஜாலம். பாடல் வரிகள், சில கருத்துக்கள், செய்திகள், ஓவியம் போன்றவற்றை அனைவரின் பார்வைக்கு படும்படி சுவற்றில் வரைவது Graffiti Writing. 

Sampling

சில இசைக்கோர்வை,  பழைய பாடல்கள், சில நோட்சுகளில் இருந்து குறிப்பிட்ட இசைப் பகுதியை மட்டும் தேர்ந்தெடுப்பது Sampling எனப்படும். சுருக்கமாக சொன்னால் அனுமதியோடு வேறொருவர் இசையமைத்ததை டீசன்டாக  சுடுவது. 

Beat Boxing.

வாயிலே வடைசுடுகிறான் என விளையாட்டாக கூறுவார்கள் அதுபோல் இசைக்கருவிகள் இல்லாமல் உடல் உறுப்புகள் சிலவற்றைக் கொண்டு சப்தம் எழுப்பி இசையாக மாற்றுவது Beat Boxing ஆகும்.

இந்த ஆறு செயல்களையும் ஒன்றாக கலந்து. ஒரு பாடல் தயாரித்தால் அது சூப்பர்ஹிட் Hip Hop. இன்று ஆயிரக் கணக்கான Hip Hop ஆல்பங்கள் இருக்கின்றன. பாடல்கள் உயிர்நாடியான இந்திய திரைப்படங்களில் இந்த வகை அமைப்பில் பல பாடல்கள் வெளிவந்துக் கொண்டிருக்கின்றன. முன்பே சொன்னதுபோல் என்ன கருமம்டா இது எனத் தோன்றினாலும் சில பாடல்கள் ரசிக்க வைக்கின்றன. அவ்வாறு அடியேன் ரசிக்கும் சில Hip Hop பாடல்கள்..