☰ உள்ளே....

உலகின் இறுதி நாள்..


முதன் முதலில் உலகம் அழியும் என வெடிகுண்டு திரியை கொளுத்திப் போட்டவர் கலிலியன் இனத்தை சேர்ந்த "ராபி ஜோஸ்". அவர் அழியக்கூடும் என கூறிய வருடம் கி.பி 130. அதற்கு பின் கி.பி 381, 500, 1000, 1306, 1881, 1914, 1967, 2000 (இன்னும் இருக்கிறது) மற்றும் 2012 இதெல்லாம் உலகம் அழிந்துவிடும் என நம்பப்பட்ட வருடங்கள். ராபி ஜோஸ் கொளுத்திய திரி இன்றும் எரிந்து கொண்டிருக்கிறது. இதையும் தாண்டி நாம் 24 மணிநேரம் தன்னைத்தானே சுற்றிக் கொண்டு 365 1/4 நாட்கள் சூரியனையும் ஜாலியாக சுற்றிக் கொண்டிருக்கிறோம். 

நமக்கு தெரிந்து 2000 வருடம் உலகம் அழிந்துவிடும் என பரவலாக பேசப்பட்டது. நாமும் ஆவலாக இருந்தோம். சரியாக 12.00 மணிக்கு போர்வையை இறுக்கி மூடிக்கொண்டு கடிகாரமும் கையுமாக விழித்துக் கொண்டிருந்த பால்யகால நினைவுகள் நியாபகம் வருகிறது. மறுநாள் எழுந்து பல்லு விளக்கும் போது அய்யய்யோ ! இன்னைக்கு ஹோம்வொர்க் எழுதலையே! என வழக்கம் போல் பதறியடித்துக் கொண்டு பள்ளிக்கூடம் சென்று பதினாறு வருடங்கள் கழிந்து விட்டது. 2012-ல் பூமாதேவி வாயை பிளக்கப் போகிறாள் நாமெல்லாம் உள்ள போகப் போகிறோம் என மீண்டும் ஒரு புரளியை கிளப்பிவிட்டார்கள், இதற்கு சாட்சியாக மாயன் காலண்டரை குறிப்பிட்டிருந்தனர். 2012-ஆம் ஆண்டும் வந்தது, தியோட்டரில் கிராபிக்ஸில் உலகம் அழிவதை மட்டுமே பார்த்தோம் (2012- ருத்ரம் என்ற ஹாலிவுட் திரைப்படம்). இன்றளவும் தாடிவைத்த விஞ்ஞானிகளும் சில மதவாத தலைவர்களும் வானத்தை வெறித்தபடி படுத்துக் கொண்டு உலகம் எப்போது அழியும் என ஆராய்ந்து கொண்டிருக்கின்றனர்.

அது போகட்டும், இந்த உலகம் எப்பதாங்க அழியும்?

எல்லா மதங்களிலும் உலகம் தோன்றியதற்கான கதைகள் இருக்கின்றன. அதுபோல் அழிவதற்கான கதைகளும் நம்பப்படுகின்றன. இந்து மதத்தை பொருத்தவரை நான்கு யுகங்கள்,

1. கிருத யுகம் -1728000 வருடங்கள்.
2. திரேதா யுகம் -1296000 வருடங்கள்.
3. துவாபர யுகம் - 864000 வருடங்கள்.
4. கலியுகம் - 432000 வருடங்கள்.


நாம் இப்பொழுது கலியுகத்தில் இருக்கிறோம் அதில் எந்த வருடம் எனத் தெரியவில்லை. கடைசியுகம் அதற்குப் பின் உலகம் அழிவது உறுதி. கிருத்துவ மதத்தின் பைபிளில் உலகத்தின் கடைசி நாள், Judgement Day தீர்ப்பு நாள் அல்லது Second coming Christh இரண்டாவது முறையாக கிருஸ்த்து அவதரிப்பார் என குறிப்பிட்டப் பட்டுள்ளது. குர்ஆன் மற்றும் ஹதீதுகளில் உலகின் இறுதி நாள் Day of Judgement (Yawn- ad- Din யவ்மத்தீன் ) என்றும் The Day of Resurrection (யவ்மல்- கியாமா Yawn - al- Qiyamah)  என்றும் குறிப்பிடப் பட்டுள்ளது.
அநியாயங்களும், அக்கிரமங்களும் தலையெடுக்கும் போது உலகத்தைக் காக்க இறைவன் அவதரிப்பார், இதுவரை எழுதியதை பெரிய அழிரப்பர் வைத்து அழித்துவிட்டு புதிதாக எழுதுவார் என எல்லா மதங்களும் நம்புகின்றனர்.

மாபெரும் விஞ்ஞானி ஐன்ஸ்டீன் அறிவியல் பூர்வமாக கணக்கிட்டு 2060 ஆம் ஆண்டை உலகின் இறுதிநாள் என்று கணித்துள்ளார். நம்ம உலக ஜோசியர் நாஸ்டிரடாமஸ் சிக்கலாக, உலகம் இரண்டு பெரும் பிரளயங்களை சந்திக்கும் என கணித்திருக்கிறார். அவர் கணித்த ஆண்டு கி.பி 2029 மற்றும் 3797. இதெல்லாம் கப்சா, கட்டுக்கதை, உலகம் இன்னும் 60 மில்லியன் ஆண்டுகள் நித்திய கும்ப பூர்ண ஆயுளோடு பேசா உயிர்வாழும். அதற்குப்பிறகு பூமிமட்டுமல்ல மொத்த சூரிய குடும்பமும் அழிந்துவிடும். அதற்குள் விஞ்ஞானம் வளர்ந்து நாம் (மனித இனம்) வேறு கிரகத்திற்கு அல்லது வேறு சூரிய குடும்பத்திற்கு சென்று விடுவோம். அப்போது, புளூட்டோவிற்கு மிக அருகில், நெப்டியூனுக்கு நெருக்கத்தில் அழகிய வீட்டுமனைகள் வாங்க என விளம்பரம் செய்வார்கள். சம்மருக்கு எங்க அம்மா கிரகத்திற்கு போய்ட்டு வருகிறேன் ராக்கெட் டிக்கெட் புக் பண்ணுங்க என மனைவி நச்சரிக்கக் கூடும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

சரி, உலகம் எப்படி அழியும்?


சுனாமி, வெள்ளம், பூகம்பம், சுனாமி போன்ற மாபெரும் பிரளயங்களினால் இந்த உலகம் அழியும் என பொதுவாக நம்பப்படுகிறது. வடதுருவம் சுருங்குவதாலும், கடல் மட்டம் உயர்வதாலும், காற்றில் கார்பன் டை ஆக்சைடு் அளவு அதிகரிப்பினாலும் உலகம் அழிந்துவிடும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பலர் கருதுகின்றனர். இந்த பூமி உயிர்வாழ தகுதியற்று கொஞ்சம் கொஞ்சமாக ஒவ்வொரு உயிரினமாக அழியும் என்கிறார்கள். அதாவது நாமே நம் பூமியை அழித்துவிடுவோம் என்பது இதன் பொருள்.
உலக விஞ்ஞானிகள் எல்லோரும் ஒன்றுகூடி டீ-பிஸ்கட்டோட உக்காந்து பேசி, அறிவியல் படி உலகம் அழிவதற்கு ஐந்து காரணங்களை அடுக்கி வைத்துள்ளனர்.(நம்ம ஸ்டீபன் ஹாங்கிங்ஸ் இதில் உண்டு).

1. Big bang theory- பெரும் வெடிப்புக் கோட்பாடு.
2. The Quantum of zero Effect- பூஞ்சிய விளைவு.
3. Strange Matter- வேற்றுகிரக வாசிகள், எரிகற்கள்.
4. Time travel - கால பயணம்.
5. Nano Technology- நானோ தொழில் நுட்பம்.

இதில் எதையாவது ஒன்றை உலகம் TNPSC கேள்விக்கு பதிலைப் போல் சரியாக தோர்ந்தெடுத்துக் கொள்ளும் என்கிறார்கள்.

நிகழும் ஆண்டு, தைமாதம் எட்டாம் நாள் சுபயோக தினத்தில் காலை 7.00 - லிருந்து 9.30 - க்குள் உலகம் அழிந்து விடும் என மதங்களும், விஞ்ஞானமும், அறிவியலும், ஜோசியமும், அழியப்போவதை சரியாக கணித்ததில்லை. ஒரு வேளை நாம் வாழும் காலத்தில் இந்த உலகம் அழிந்தால், I am the first man to see the world end " என்பவனூம். கொய்யால என்னா ஆட்டம் போட்டிங்க? இப்ப என்னாச்சி என அனைத்தும் அழிவதை பார்த்துவிட்டு கடைசியாக போய்சேருபவனும் கொடுத்து வைத்தவர்களே. இதோ இந்த நிமிடம் வரை உலகம் உயிரோடு இருக்கிறது. உலகின் இறுதி நாள் யாருக்கும் தெரியாது. அதுவரைக்கும்

அஜித்திற்கு அடுத்த படம் என்ன? அந்த நடிகை இப்போது யாரை காதலிக்கிறார்? பீப் பாடல்போல் ஏதாவது புதுசா வந்திருக்கா?  நாளைக்கு என்ன ஸ்டேடஸ் போடலாம்?

- வாழ்வோம்.