மொபைல் கேம்கள்.



கையடக்க சாதனத்தில் ஆரம்பித்தது எலெக்ட்ரானிக் கேம் (வீடியோ கேம்) விளையாடும் பழக்கம். பிளேஸ்டேசன் வந்ததிற்குப் பிறகு டீவிக்கு அப்படியே தாவியது. ஜாய் ஸ்டிக்கை வைத்துக் கொண்டு நானும் தம்பியும் தட்டிக் கொண்டிருந்த பால்ய காலங்கள் நினைவில் இருக்கிறது. அதற்குப் பின் WWF, Assassain, Cricket, Car Race, Wise city என, கம்பியூட்டரில் ஹோம் தியோட்டரை இணைத்து விடிய விடிய வீடியோ கேம் விளையாடி வீட்டில் திட்டு வாங்கியிருக்கிறேன். தற்போது அனைத்தும் மொபைல்போன் மயம். மீண்டும் கேம்கள் கையடக்க வடிவிற்கு வந்துவிட்டது. Candy crush மற்றும் Temple Run கேம்தான் இன்றைய மொபைல் உலகின் டாப் மோஸ்ட் கேம். Candy crush குழந்தைகள் விளையாட்டு போலிருக்கும், நிஜ வாழ்க்கையில் தினமும் ஓடிக் கொண்டிருப்பதால் Temple Run- னும் விளையாடுவதில்லை. ஆனாலும் இந்த கேம் விளையாடும் மோகம் இன்னும் குறையவில்லை. சில காத்திருப்புகள், கொஞ்சம் சலனம், கோபம், தூக்கம் பிடிக்காத தருணங்களில் தற்போதும் சிறுபிள்ளையாக விளையாடுவதுண்டு. இதற்காக சில கேம்களை மொபைலில் சேமித்து வைத்துள்ளேன் அவ்வபோது விளையாடுவேன். அப்படி விளையாடும் சில மொபைல் கேம்கள்.

D- Day : Front line Commando.
(War Game)

Front line Commando என்பது வீடியோ கேம்களில் யுத்தம் (War) தொடர்பான விளையாட்டு. D-Day என்பது வரலாற்றில் மறக்க முடியாத யுத்த நிகழ்வு. இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனி பிரான்ஸின் பெரும் பகுதியை ஆக்கிரமித்திருந்தது. ஜெர்மனிக்கு எதிரான நேசநாடுகள் படை பிரான்ஸை கைப்பற்ற முடிவு செய்தன அதற்காக பிரான்ஸில் உள்ள "நார்மாண்டி" எனும் கடற்கரைப் பகுதியில் தங்களுடைய படைகளை இறக்கி பிரான்ஸில் நுழைய திட்டமிட்டனர். யூட்டா, ஒமாகா,  கோல்ட், ஜீனே, மற்றும் சுவார்ட் எனும் ஐந்து கடற்கரைகளில் 160000 தரைப்படை வீரர்கள், 5000 போர்க்கப்பல்கள், 175000 மாலுமிகளைக் கொண்டு நேசநாடுகள் ஜீன் 6 1944-ல் மாபெரும் படையை இறக்கினர். இந்த நிகழ்வு "நார்மாண்டி படையிறக்கம்" Operation Neptune என அழைக்கப்படுகிறது. இன்றுவரை இதுவே மிகப்பெரிய இராணுவ படையிறக்கமாக கருதப்படுகிறது. ஜீன் 6-ல் தொடங்கி ஆகஸ்ட் 26-ல் முடிந்த இந்த முற்றுகையில் நேசநாடுகள் வெற்றி பெற்று ஜெர்மனி பின்வாங்கியது. இராண்டாம் உலகயுத்தத்தில் ஹிட்லர் தோற்க இந்த நிகழ்வும் ஒரு காரணமாக இருந்தது. அந்த நார்மாண்டி படையிறக்கத்தின் நாட்களை D- Day என்கின்றனர். இந்த வரலாற்று நிகழ்வை திரைப்படமாகவும், PC கேம்களாகவும் தயாரித்திருந்தனர். அதன் மொபைல் வடிவமே இந்த கேம்.

யூட்டா, ஒமாகா,  கோல்ட்,  ஜீனே, மற்றும் சுவார்ட் என அந்த கடற்கரையின் பெயரில் மொத்தம் ஐந்து ஸ்டேஜ்கள் இருக்கின்றன. ஒவ்வொன்றிர்க்கும் குறைந்தது 25 முதல் 50 லெவல்கள் என பிரித்து வைத்துள்ளனர். இரண்டாம் உலகப்போரில் பயண்படுத்திய ஆயுதம், வாகனம் மற்றும் உடைகள் என அச்சு அசலாக வடிவமைத்துள்ளனர். போர்சூழல் மற்றும் துப்பாக்கியின் சப்தம் போன்றவை துள்ளியமாக ஒலிக்கிறது. காடு, பதுங்குக்குழி, கடற்கரை, அதிகாலை, புகைப்படலம் என ஒளி அமைப்பும் சிறப்பாக இருக்கிறது. இன்று ஆரம்பித்தால் ஒருவருடத்திற்குப் பிறகு கேமின் லெவல்களை முடித்துவிடலாம். கேமின் அளவு சற்று அதிகம் பெரும் இடத்தை அடைத்துக் கொள்கிறது. 1GB RAM -க்கு மேல் உள்ள ஆண்ராய்டு போன்கள் மற்றும் ஆப்பிள் IOS - களில் மட்டுமே விளையாட முடியும். Play store - ல் இதனை இலவசமாக டவுன்லோடு செய்து கொள்ளலாம். 



Mission Berlin : The Man from U.N.C.L.E.
(Spy Game)

இரண்டாம் உலகப்போர் முடிந்து உலகம் பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்தது. யார் இந்த உலகத்தின் நாட்டாமை நார்காலியில் உட்காருவது என்ற போட்டிக்காக ரஷ்யாவிற்கும் அமேரிக்காவிற்கும் அப்போதுதான் பனிப்போர் தொடங்கியது. இரண்டு நாடுகளும் தங்கள் உளவுத்துறையை பலப்படுத்தி எக்கச்சக்க விஜயகாந்த் மற்றும் அர்ஜுன்களை உருவாக்கி ஒருத்தரை ஒருத்தர் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என நோட்டமிட ஆரம்பித்தது. அந்த காலகட்டத்தில் அமேரிக்காவின் அனுஆராய்ச்சி நிலையம் முதல் ஐஸ் தயாரிக்கும் சின்ன தொழிற்சாலைகள் வரை ரஷ்யாவின் உளவுத்துறையான RGB -ன் ஆட்கள் சைலன்டாக குடியிருந்தனர். அதேபோல் ரஷ்யாவின் பார்லிமென்ட் மெம்பர் முதல் பாப்கார்ன் விற்கும் ஆள் வரை அமேரிக்காவின் உளவுத்துரையான CIA -வின் ஆட்களாக இருந்தனர். இதற்கும் ஒருபடி மேலே சென்று இருவரின் உளவுத்துரையும் உலக நாடுகளில் நேற்று அந்த நாட்டில் என்ன சாப்பிட்டார்கள் என கழிவரையைக் கூட நோட்டமிட ஆரம்பித்தன. இதைவைத்து உளவுத்துறையின் வீர தீர சாகசங்களை திரைப்படமாகவும் டீவி சீரியலாகவும் எடுத்தனர் (நம்ம ஜேம்ஸ்பாண்டு அவரும் உளவாளிதான், பிரிட்டீஷ் உளவாளி). அப்படி 1964-ல் MGM டீவி சீரியலாக வெளிவந்த ஸ்பை அட்வெஞ்சர் சீரியல்தான் The man from U.N.C.L.E (Mission Berlin). அமேரிக்க உளவாளி Napoleon Solo -வும் ரஷ்ய உளவாளி Illya Kuryakin -வும் இணைந்து Berlin -ல் அனுசக்தி விஞ்ஞானியைத் தேடும் உட்டாலக்கடி கதைதான் இந்த சீரியல். 2015-ல் இதே பெயரில் திரைப்படமாகவும் வெளிவந்து சக்கைபோடு போட்டது. PC(Personal Computer) கேம்களிலும் ஏகப்பிரபலம் இதை மொபைல் வெர்சனாக Warner Bros வெளியிடிருந்தனர். 

PC -யில் விளையாடும் அதே அனுபவத்தை தருகிறது இந்த கேம். 60 -களில் பெர்லீனின் தெருக்கள், அந்த கால கார்கள், இருள் நிறைந்த ரகசிய இடங்கள் என கேமின் காட்சிகளில் நாம் ஒன்றிப்பேய்விடுவோம். Wice city வகையறா கேம்தான் இது சற்று உறுத்தல் இல்லாமல் தெளிவாக இருக்கிறது. கதையின் நாயகன் இருவரில் ஒருவரை தேர்ந்தெடுத்து உங்கள் தலைமையின் டார்கெட்டை முடிப்பதாக வடிவமைக்கப்பட்டது. திரைப்படமாக வெளிவந்த போது படத்தின் பின்னணி இசை பெரிதாக பேசப்பட்டது. குறிப்பாக படத்தின் தீம் மியூசிக் (ஏதாவது ஒரு தமிழ்படத்தில் கூடிய விரைவில் வரக்கூடும்) அதை அப்படியே கேமிலும் பயண்படுத்தி இருக்கிறார்கள். திரைப்படத்தில் வரும் அந்த அழகு பெண் கேமில் மிஸ்ஸிங். ஒளி, ஒலி என புதிய அனுபவத்தை கொடுக்கிறது. இந்த கேமும் உங்கள் மொபைலில் அதிக இடங்களை பிடித்துக்கொள்ளும். RAM அதிகமாக, காலியாக வைத்திருந்தால் விளையாடவும்.   



Paper Toss 2.0.
(Fun Game)

இந்த கேம் பற்றி சொல்வதற்கு வரலாறு, புவியியல், அறிவியல் எல்லாம் தேவைப்படாது (பயப்பட வேண்டாம்). இது ஜென்டில்மேன் படத்தில் நம்ம செந்தில் விளையாடுவாரே! அதே கப்ளிங், டிக்கிலோனா, ஸ்பூன்லிங் வகை கேம்தான். உங்கள் அலுவகத்தில் உங்கள் இருக்கை, உங்கள் MD யின் மேசை, ஸ்டோர் ரூம், வாஸ் ரூம் என இவற்றில் எதாவது ஒரு இடத்தில் குப்பைத் தொட்டி ஒன்று இருக்கும். ஒருபக்கம் மேசையில் ஃபேன் சுற்றிக் கொண்டிருக்கும். காற்றடிக்கும் திசை கீழே வந்துபோகும், அதற்குத் தக்கவாறு உங்களிடம் இருக்கும் கசங்கிய பேப்பரை சரியாக எதிரே இருக்கும் குப்பைத் தொட்டியில் போடவேண்டும் இதுதான் இந்த கேமின் மிக சிக்கலான பார்முலா. சரியாக குப்பைத் தொட்டியில் விழும்போது உங்களுக்கு பாயிண்ட்ஸ் கிடைக்கும் அதை வைத்து பேப்பருக்கு பதிலாகா அழுகிய தக்காளி, காலியான கோக் டின், வாழைப்பழத்தோல் என வாங்கிக் கொள்ளலாம். தொடர்சியாக எத்தனைமுறை குப்பைத் தொட்டியில் போடுகிறீர்கள் என்பதுதான் கேமின் ஹைலைட் (அடியேன் 28 முறை). ஜாலியாக டைம்பாஸ் செய்ய விளையாடலாம். 


Chennai Auto Traffic Racer.
(Race Game)

நீங்கள் ரேஸ் பிரியரா? கார், பைக், டிரக், டீரைன், ஏரோபிளைன் வரைக்கும் ஓட்டி அலுத்துவிட்டதா? வாங்களேன் ஆட்டோவில் ஒருரவுண்டு போகலாம்.ஆட்டோ சவாரி அலாதியானது. அதிலும் சென்னை டிராபிக்கில் சந்து, பொந்து, இன்டு இடுக்கெல்லாம் பூந்து விளையாடும் நம்ம ஆட்டோடிரைவர்கள் டிஸ்கவரிச்சேனல் Bear Grylls- ஐ விட அட்வெஞ்சர் காட்டுவார்கள். அவர்களைப்போல டிராபிக்கில் சும்மா ஹாரனை ஒலிக்கவிட்டு, சாவுகிராக்கி வூட்ல சொல்ட்டு வந்திட்டியா, கஸ்மாலம் என உதார் விட்டுக்கொண்டு, ஒவ்வொரு வாகனத்தையும் சைடுபோட்டு பிஸ்தாடா என காலரைத் தூக்கிவிட்டு ஜாலியாக சவாரி போக நினைத்தால் இந்த கேம் விளையாடலாம்.