☰ உள்ளே....

சிறுதுளி பெருவெள்ளம் ( சென்னை அனுபவம் - 6)..


தலைமை அலுவலகத்தில் இருந்து அழைத்திருந்தனர் சென்னை வந்து மூன்று நாட்களுக்குப் பிறகுதான் முதன்முறையாக அங்கு சென்றேன். பெருந்தலைகள் அனைவரும் ஆஜராகி இருந்தனர் வழக்கத்திற்கு மாறாக அனைவரும் ஜீன்ஸ் டீ-சர்ட்டில் ஹவாய் பீச்சில் பிக்னிக் வந்தது போல் காணப்பட்டனர் (மழை வெள்ளம் காரணமாக). நான் ஒருவன் மட்டும் சற்று நனைந்த ரைமண்ட் மாடல் கோழி போல் சென்றிருந்தேன். அடச்சே! தெரிந்திருந்தால் ரூமில் போட்டிருந்த டவுசருடன் வந்திருப்பேன் என நொந்து கொண்டேன். எல்லா தலைகளும் வாய்நிரைய முதலை பற்கள் தெரியும்படி சிரித்துக் கொண்டிருந்ததை பார்க்கும் போது ஏதாவது பெரிய மீன் மாட்டியிருக்கும் என யூகித்தேன்.
சென்றவருடம் சென்னையின் குடிநீர் தேவைக்காக கடல்நீரை தூய்மையாக்கும் திட்டத்திற்கான வரைவுகளை சமர்ப்பித்திருந்தோம். அதற்கான வேலையில் நான் முழுமையாக ஈடுபட்டிருந்தேன். திட்டத்தின் நகல்களை எடுத்துக்கொண்டு சற்று உதறலுடன் தலைமைச் செயலகத்தில் முதன் முதலில் நுழைந்தது நினைவுக்கு வந்தது. அற்போது ஏற்பட்ட அரசியல் காரணங்களால் அத்திட்டம் கைவிடப்பட்டது வேறுவிசயம். அதுபோல் எதாவது இருக்குமா? என நினைத்துக் கொண்டேன்.

ஆறு வருடங்களுக்கு முன் சென்னை உள்நாட்டு விமான நிலையத்தின் கழிவுநீர் மறுசுழற்சி நிலையமும், குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரமும் அமைத்துக் கொடுத்திருந்தோம். அடிக்கடி இடிந்துவிழும் மேல்கூரை போல் இல்லாமல் ஓரளவிற்கு திறமையாக முடித்திருந்தோம். அந்த காரணத்தினால் என்னவோ விமான நிலையத்தின் ஒரு பகுதியின் கால்வாய்களையும், மழைநீர் சேகரிப்பு முறையையும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதிலிருந்து சீரமைக்க எங்களை சிபாரிசு செய்திருந்தனர் அதற்கான திட்டங்களை வகுக்கத்தான் அனைவரும் கூடியிருந்தனர். இது பெரிய மீன் இல்லை, திமிங்கிலமே கிடைத்திருந்தது. இதற்காகத்தான் அவசரமாக உடனே சென்னை வரவும் என அழைத்தார்களோ! இது தெரியாமல் மூன்று நாட்கள் அறையில் சாப்பிடவும், தூங்குவதும், கனவுகாண்பதுமாய் இருந்திருக்கிறேன்.

எப்படியாவது இந்த திமிங்கிலத்தை பிடித்துவிட வேண்டும் என ஆரிப்போன டீ, நமத்துப்போன பிஸ்க்கட்டுடன் விவாதம் தொடங்கியது. பெரிய தலைகள் இருக்க நமக்கென்ன கவலை என ஜன்னலின் வழியே மழை பொழிவதை பார்த்துக் கொண்டிருந்தேன். அனைவரும் என்னை நோக்கி திரும்பினர். தேவ் உன்னிடம் இருந்து புதுமாதிரியான திட்டத்தை எதிர்பார்க்கிறேன் என MD சொல்லி முடித்திருந்தார். சென்றமுறை நீ தயாரித்த குடிநீருக்கான திட்டம் அனைவரையும் கவர்ந்தது அதற்காக உன்னிடம் இருந்து அதுபோல் புதிதாக எதிர்பார்கிறேன் என்றார். பொதுவாக எல்லா அலுவலகத்திலும் ஊருகாய் என ஒருவர் இருப்பார், எங்கள் நிறுவனத்திற்கு நான் ஊருகாய் பாட்டில். என்னிடம் இருந்து ஒன் லைன் கதையை மட்டும் வாங்கிக் கொள்வார்கள், கதை, திரைக்கதை, வசனம், ஒளிப்பதிவு, இசை என சேர்த்து படம் எடுத்து வேறுயாராவது கல்லா கட்டிக் கொள்வார்கள். இருந்தும் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என நினைத்துக் கொண்டேன்.

உள்நாட்டு விமான நிலையத்தில் வேலை பெரிய சவாலாக இருக்கும் புதிதாக எதாவது செய்ய வேண்டும் அப்போதுதான் கவணிக்கப்படுவோம். நீர்மேலாண்மை பற்றி மேலும் அறிந்து கொள்ள வேண்டும். இஸ்ரேல் மற்றும் தென் அமேரிக்காவில் நடைமுறையில் உள்ள சில கால்வாய், வடிகால் அமைப்புகளை மாதிரியாக எடுத்துக்கொள் என பெருந்தலைகள் அறிவுரைகள் கூறியிருந்தனர். மேலோட்டமாக பார்த்தால் இஸ்ரேல் போன்ற வளரும் நாடுகள் நீர்மேலாண்மைக்கு முன்னோடியாகாத் திகழ்வாது உண்மைதான். விவசாயத்திலிருந்து வீட்டு உபயோகம், கழிவுநீர், கால்வாய்கள், வரை அவர்கள் 20 வருடம் நம்மைவிட முன்னோக்கி நடைபோட்டுக் கொண்டிருக்கின்றனர். ஆராய்ந்து பார்த்தால் அவர்களின் நீர்மேலாண்மை நமது பாரம்பரியத்தை தழுவியிருக்கும். நமது சிந்து சமவெளி நாகரீகமும், நாட்டில் உள்ள சில அணைகட்டுகளும், கால்வாய்களும் உலகத்திற்கே நீர்மேலாண்மையை போதிப்பவை. தமிழ்நாட்டில் உள்ள வடிகால்களும், கால்வாய்களும், ஏரிகளும், குளங்களும் எந்த நோக்கத்திற்காக அமைக்கப்பட்டன . மழை குறைவான இடங்களில் கூட நீர் மேலாண்மையை நம் முன்னோர்கள் எவ்வாறு ஏற்டுத்தி இருந்தனர். கல்லணையும், காலிங்கராயன் கால்வாயும் யுனஸ்கோவின் புராதானச் சின்னமாக மட்டுமே போற்றப்படுகின்றன. இவற்றின் அமைப்புகள் எப்படி இருக்கும் இவைகளைப் பற்றி அறிந்து கொண்டால் எங்கள் திட்டத்திற்கு பயனுள்ளதாக இருக்கும், அவற்றைக் கொண்டு பழமையான நீர்மேலாண்மை புதிதாக மாற்றியமைக்க வேண்டும் என நினைத்துக் கொண்டேன்.  

தேடல் இல்லையெனில் வாழ்வில் ருசி இருக்காது என்பதை அடியேன் உறுதியாக நம்புகிறவன். வாழ்க்கை, உறவுகள், வேலை, பணம், பக்தி, பொழுதுபோக்கு என எல்லாவற்றிலும் நிறைந்திருக்கும் தேடல் வாழும் நாட்களை புதிதாக்கிறது. இன்று எனக்கு புதிய தேடல் கிடைத்திருந்தது. நமது முன்னோர்களின் நீர்மேலாண்மையைப் பற்றிய தேடலை ஆட்டோவில் எனது அறைக்கு திரும்பிக் கொண்டிருந்தபோதே தொடங்கியிருந்தேன். 

- தொடரும்.