☰ உள்ளே....

The Matian. Manjhi. தாரை தப்பட்டை.

சமீபத்தில் ரசித்த மூன்று திரைப்படங்கள்.

The Martian.

கண்ணைக்கட்டி காட்டில் விட்டமாதிரி என்று சொல்லுவோம். இந்த படம் கயிற்றைக் கட்டி செவ்வாய் கிரகத்தில் விடப்பட்ட ஒருவனின் கதை. 2035 ஆம் வருடம்(அப்பதான் நாம நம்புவோம்) NASA அனுப்பிய வின்வெளி வீரர்கள் செவ்வாய் கிரகத்தில் டென்ட் அமைத்து ஆய்வு செய்து கொண்டிருக்கின்றனர். அவர்களது குழுவிற்கு Melissa Lewis தலைமைப் பொறுப்பேற்றுள்ளார். 


திடீரென புயல் செவ்வாய் கிரகத்தை தாக்குகிறது, அனைவரும் அங்கிருந்து கிளம்ப முடிவு செய்கின்றனர். அப்போது நடக்கும் விபத்தில், குழுவில் இருக்கும் Mark Watney சிக்கிக் கொள்கிறான். அவன் இறந்து விட்டதாக தவறுதலாக நினைத்து அனைவரும் இரண்டு சொட்டு கண்ணீர் விட்டு, செவ்வாய்க்கு டாட்டா காட்டி, மற்றவர்கள் பூமிக்கு திரும்புகின்றனர் . இறந்துவிட்டதாக நம்பப்படும் Mark Watney தப்பிப் பிழைக்கிறான். உள்ளூர் என்றால் பரவாயில்லை யாரிடமாவது லிப்ட் கேட்டு வந்துவிடலாம், இல்லை என்றால் எதாவது சேர் ஆட்டோ பிடித்து வீடு வந்து சேரலாம். ஆனால் இது செவ்வாய்கிரகம் . ஏற்கனவே அங்கு NASA அமைத்திருந்த ஸ்டேசனில் சிறிது உணவும் சில சாதணங்களும் இருக்கிறது அதைவைத்துக் கொண்டு Mark Watney எப்படி உயிர் பிழைத்தார்? செவ்வாய் கிரகத்தில் என்ன செய்தார்? பூமிக்கு திரும்பி வந்தாரா? என்பதுதான் இந்த படத்தின் மீதிக்கதையே.

கிராவிட்டி படத்திற்குப்பின் வெளிவந்த சயின்ஸ் பிக்சன் வின்வெளி திரைப்படம். Andy Weir என்பவர் எழுதிய "The Martian" என்ற நாவலை அப்படியே படமாக்கியுள்ளனர். Matt Daman தன்னை வருத்திக் கொண்டு உடல் உருகி நடித்திருக்கிறார். தெவிட்டாத கிராபிக்ஸ், தத்துரூபமான செட் என அசத்தல் 3D மேக்கிங். செவ்வாய் கிரகத்தில் Mark Watney- யுடன் சேர்ந்து சற்று காலார நடந்துவர ஆசைப்பட்டால் இந்த திரைப்படத்தை தரிசிக்கலாம்.
....................

Manjhi - The Mountain Man.

கிராமத்திற்கும் நகரத்திற்கும் நடுவே இருக்கிறது ஒருமலை. அதை ஓரே பாட்டில், ஒரு சில வியர்வைத் துளிகள் மட்டும் சிந்தி உடைத்தெரிகிறார் நம்ம ஹீரோ. அதைவிற்று பணக்காரர் ஆகிறார் கிராமமும் வளர்கிறது. ஹீரோயினுடன் சுவிச்சர்லாந்தில் உருண்டு புரண்டு டூயட் பாடுகிறார். (அந்த பாடல் You Tube- ல் செம ஹிட்) வில்லனை உதைக்கிறார் உதைபட்ட வில்லன் வானத்தில் பறக்க படம் முடிகிறது. அப்படி நினைத்தால் அதுதான் இல்லை.

தன் கிராம மக்களுக்காகத் தனியொரு மனிதனாகப் போராடிய மாமனிதர் தாஷ்ராத் மாஞ்சி. இவரைப்பற்றி ஏற்கனவே எனது Blogs -ல் எழுதி உள்ளேன் (படிக்க -நாயகன்) . அவரது வாழ்க்கைத் திரைப்படம்தான் இந்த மாஞ்சி. "காதலியின் கடைக்கண் பார்வை பட்டால் மண்ணில் மாந்தர்க்கு மாமலையும் ஓர்கடுகாம் " என்பதற்கேற்ப தன் மனைவியின் இறப்பிற்கு காரணமான ஊருக்கு குறுக்கே இருந்த மலையை தனி ஒருவனாக தகத்தவர். தனக்கு நேர்ந்தது தன் கிராமத்தில் யாருக்கும் நிகழக் கூடாதென முடிவு செய்தவர். அவருக்கு அப்படி என்ன நிகழ்ந்தது? அதை எப்படி செய்தார்? என காதலும் போராட்டாமும் கலந்து சொல்லியிருக்கிறார்கள். பிஹாரில் உள்ள கயா மாவட்டத்தில் கெஹ்லவுர் கிராமத்தில் இன்றும் இருக்கிறது அவர் தகர்த்தெரிந்த மலைப்பாதை. 

நடிகர் நவ்சுதீன் சித்திக் நம்ம ஊர் சியான் விக்ரம்போல வித்தியாசமான கேரக்டர் என்றாள் வெளுத்து வாங்கிவிடுவார். இந்த படத்தில் மாஞ்சியாகவே மாறியுள்ளார். அவரது மனைவி பல்குனி தேவியாக ராதிகா ஆப்தே அழகு பதுமை. இருவருக்குமான காதல் காட்சிகள் மசாலா ரகம். சிறந்த இசை, ஒளிப்பதிவு என சென்ற வருடத்தின் தேசியவிருது பட்டியலில் இடம்பெறக் கூடிய படம்.
தற்போது நிஜ மாஞ்சி உயிருடன் இல்லை அவருக்கு இந்த திரைப்படம் சமர்ப்பணமாக இருக்கும். அந்த மாமனிதனை மன்னிக்கவும் மலைமனிதனை, நிஜ நாயகனை கொளரவிக்க திரைப்படத்தை பாருங்கள்.
...........................

தாரை தப்பட்டை.

இரத்தமும் சதையும் கலந்திருக்கும் பாலாவின் திரைப்படங்கள் அற்ப மனிதர்களின் சந்தோச துக்கங்களை அப்படியே வெளிச்சம் போட்டு காட்டிவிடும் அவரது படைப்புகள். தியோட்டரைவிட்டு வெளிவரும் போது இதயம் சற்று கனத்திருக்கும். இந்த படமும் அதே வகையராதான். இளையராஜாவிற்கு ஆயிரமாவது படம் மாமேதையைப் பற்றி விமர்சிக்க தகுதியில்லை 999 என்ற எண்ணிக்கையோடு சேர்ந்த 1000 முத்துமணி மாலை. சசிக்குமார் சாதாரண ரசிகர்களையும் கவர எப்போதும் அடக்கி வாசிப்பார் இந்த தாரை தப்பட்டையையும் அப்படி அடக்கியே வாசித்திருக்கிறார். இதையும் தாண்டி, கரகாட்ட உடையில், லிப்ஸ்டிக் பூசிக் கொண்டு, தொப்பையும், தொப்புளும் தெரிய அப்படியே நிஜ கரகாட்ட நாயகியை கண்முன் கொண்டு வருகிறார் வரலட்சுமி. வெற்றிலை பாக்கு மெல்லும் வாயில், மாமா மாமா என கொஞ்சுவதும், சரக்கடித்து விட்டு சலம்புவதும், கடைசியில் மொத்த அனுதாபங்களையும் அள்ளிக்கொள்ளுவதும் என அக்மார்க் பாலாவின் நாயகியாக வாழ்ந்திருக்கிறார். தொப்புள்ல ஸ்டார் போடு மாமா என அலப்பரை பண்ணுவதும், மாமாவுக்கு கஷ்டம்னா அம்மனமாகக் கூட ஆடுவேன் என கொதிக்கும்போதும் தியோட்டரில் அப்ளாஸ் அள்ளுகிறார். அட ! இந்த பொண்ணுக்கு இப்படி நடிக்க வருமா?  யாருக்காக இல்லை என்றாலும் வரலட்சுமிக்காக இந்த படத்தை பார்க்கலாம்.