☰ உள்ளே....

என்னு நிண்டே மொய்தீன்..எதார்த்தங்களால் நிறைந்தது மலையாள சினிமா உலகம்.
நெஞ்சைத் தொட்ட நிகழ்வுகளையும், சிறந்த எழுத்துக்களையும் மலையாள சினிமா தன் உள்ளங்கையில் தாங்கிக் கொள்ளும். விரசமில்லாத காதலையும், உறவுகளின் நினைவுகளையும் திரையில் காண ஒரு எட்டு நம்ம பார்டரை தாண்டலாம். அப்படி சமீபத்தில் வெளிவந்த திரைப்படம்தான் "என்னு நிண்டே மொய்தீன்".
1960-ல் கேரளாவில் உள்ள கோழிக்கோடு பக்கம் முக்கம் எனும் ஊரில் நிகழ்ந்த உண்மை சம்பவத்தின் எதார்த்த காவியம்தான் இந்த திரைப்படம்.கதையில் வரும் காஞ்சனமாலா வயது முதிர்ந்து உயிரோடு வாழ்ந்து வருகிறார். அவரது நினைவுகளும் அந்த காதலும் இன்றும் இளமையாகவே இருக்கிறது. அந்த இனிமையான, இளமையான, நினைவுகளையும், அமரத்துவம் வாய்ந்த அவரின் காதலையும் நமக்கெல்லாம் காட்டுகிறது இந்த திரைப்படம்.

முக்கம் கிராமத்தை சேர்ந்த மொய்தீன் ஒரு கால்பந்தாட்ட வீரன். அதே ஊரைச் சேர்ந்த தன் நண்பனின் தங்கை காஞ்சனமாலாவை காதலிக்கிறான். இவர்களது காதல் இருவரது வீட்டிற்கும் தெரியவருகிறது. மொய்தீனின் தந்தை அந்த ஊரே போற்றும் பெரியவர். இவரும் காஞ்சனமாலாவின் தந்தையும் மதங்களைத் தாண்டி நல்ல மனிதர்களாக பழகி வருகின்றனர். அதனால் மொய்தீனை கண்டிக்கும் அவனது தந்தை வீட்டைவிட்டும் வெளியேயும் அனுப்புகிறார். மருத்துவம் படித்துக் கொண்டிருந்த காஞ்சனமாலாவும் படிப்பை பாதியிலே நிறுத்திவிடுகிறார். அவளது அண்ணனும், தாய்மாமனும் அவளை வீட்டுச் சிறையில் அடைக்கின்றனர். இவர்களது காதலுக்கு மதம் தடையாக இருக்கிறது.


காஞ்சனமாலாவிற்கு திருமணம் செய்து வைக்க முயற்சிகள் நடக்கிறது. ஒரு கட்டத்தில் இருவரும் வீட்டை விட்டு வெளியேர முடிவு செய்கின்றனர். இதனை தெரிந்து கொண்ட மொய்தீனின் தந்தை தடுக்கிறார். இந்துவும் முஸ்லீமும் சாகோதர்களாக வாழும் ஊரில் இவர்களது காதலால் கலவரம் வந்துவிடும் என நினைக்கிறார். அப்போது மொய்தீனுக்கும் அவரது தந்தைக்கும் நடக்கும் வாக்குவாதத்தில் ஊர் நன்மைக்காக தன் மகன் என்று கூட பாராமல் கத்தியால் குத்திவிடுகிறார். உயிர் பிழைத்துக் கொள்ளும் மொகைதீன் தன் தந்தையை நீதிமன்றத்தில் காட்டிக்  கொடுக்காமலும் தன் காதலையும் விட்டுக் கொடுக்காமலும் உறுதியாக இருக்கிறான். தன் மகனின் உயர்ந்த உள்ளத்தை நினைத்து அவனது தந்தை செய்வதறியாது குற்ற உணர்ச்சியில் வருந்துகிறார்.


காலங்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன. காஞ்சனமாலாவின் தங்கைகள் வளர்ந்து ஒவ்வொருவராய் திருமணம் செய்து கொள்கின்றனர். காஞ்சனமாலா திருமணம் என்றால் மொகைதீனுடன் என விடாப்பிடியாக இருக்கிறாள். அவரது வீட்டில் உள்ளவர்களின் வீம்பும் சற்றுக்கூட குறையாமலும் இருக்கிறது. ரகசியமாக சென்றுசேரும் கடிதங்கள் மட்டுமே இவர்களின் காதலை வளர்க்கிறது.


தலைநரை இலேசாக எட்டிப் பார்க்கிறது. கிட்டத்தட்ட பத்து வருடங்கள் கடந்து விடுகிறது. மீண்டும் இவர்கள் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்துகொள்ள நினைக்கின்றனர். அச்சமயம் காஞ்சனமாலாவின் அண்ணன் இறந்துவிட இந்த முறையும் தோல்வியில் முடிகிறது.
மீண்டும் காலம் எட்டி உதைக்கிறது. நாட்கள் நகர்கிறது. இருவரும் வெளிநாடு சென்றுவிடலாம் என முடிவு செய்கின்றனர். இந்தமுறை இவர்களது காதலுக்கு இயற்கை வில்லனாக அமைந்து விடுகிறது.
காதலர்கள் ஒன்று சேர்ந்தார்களா, மொகைதீன் என்ன ஆனான்? காஞ்சனமாலா என்ன ஆனாள்? இவர்களின் இருபது வருட உண்மைக் காதல் என்ன ஆனது?
உறுக்கமான, கண்ணீரை வரவழைக்கும் அந்த முடிவை திரையில் காண்க..


பிரித்விராஜ் மொகைதீனாகவும், பார்வதி காஞ்சனமாலாவாகவும் நடித்திருந்தனர், மன்னிக்கவும் வாழ்ந்திருந்தனர். முதலில் டாக்குமென்டரியாக எடுக்க நினைத்த அறிமுக இயக்குனர் R.S விமல், சில சினிமாவின் ரசிகர்களால் எழுதி , இயக்கி திரைப்படமாக அழகாக தந்திருக்கிறார். உயிரோட்டமான கதைக்கு ஒலியும் ஒளியும் இரண்டு கண்கள். மைதீட்டி அழகாக இருக்கிறது அந்த இரண்டு கண்கள். பாடல்கள் அனைத்துமே நம்மை தாலாட்டுகின்றன. படத்தின் ஆரம்பத்தில் இருந்து மழை தூரிக்கொண்டே இருக்கிறது, நாமும் அதில் நனைவோம். கடைசியில் அந்த மழையே கனத்த முடிவாகும் போது மழையை சபிக்கத் தோன்றுகிறது.
படத்தில் வரும் அத்தனை கதாபாத்திரங்களும் உயிரோட்டமாக இருக்கின்றனர். குறிப்பாக மொனைதீனின் தந்தையாக நடித்த சாய்குமார் ரசிக்க வைக்கிறார். சென்ற வருடத்தில் வெளிவந்த மிகச்சிறந்த திரைப்படம். மலையாள சினிமா இந்த படத்தை கொண்டாடுகிறது.  நல்ல சினிமாவின் ரசிகனான நானும் அப்படியே. நினைவோடு வாழ்ந்து கொண்டிருக்கும் காஞ்சனமாலாவிற்கும், உண்மையான காதலுக்கும் இந்த படம் சமர்ப்பணம்.

Documentary Trailer