☰ உள்ளே....

மர்மயோகி - நாஸ்டிரடாமஸ்...


நாஸ்டிரடாமஸ் எது நடந்ததோ, அதைத்தான் சொன்னார். எது நடக்கிறதோ, அதை சொல்லியிருக்கிறார். எது நடக்கப் போகிறதோ, அதைக்கூட சொல்லியிருப்பார்.

யார்? இந்த நாஸ்டிரடாமஸ்.

கி.பி 1503 - 1566 ஆண்டில் பிரான்சில் வாழ்ந்த தீர்க்கதரிசி Michael De Nostredame. அதாவது ஜோசியர். பளபளக்கும் சட்டை போட்டுக்கொண்டு, கழுத்தில் கொட்டையும், நெற்றியில் பட்டையுமாக கும்பராசி நேயர்களே! என, டீவியில் தினசரி ராசிபலன் சொல்லும் சாதாரண ஜோசியர் இல்லை இவர். இந்த உலகில் நடந்ததை நடப்பதை நடக்கப் போவதை கணித்த உலகமகா ஜோசியர். இவர், அப்படி என்ன சொன்னார் ? சொன்னதெல்லாம் நடந்ததா?

ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு "Every thing has a reason behind it " அதுபோல் இந்த உலகில் நிகழும் சம்பவங்களுக்கும் பின்னணியில் ஒரு காரணம் புதைந்துள்ளது. சில சம்பவங்கள் நிகழும்போது அதற்கான காரணங்கள் புரிந்துவிடும். சில, அந்த சம்பவத்தோடு ஏதோ ஒரு வழியில் தொடர்புடையதாக இருக்கும். இந்த விளைவு "பட்டர்பிளை விளைவு" (Butterfly Effects) எனப்படும்.அதன் தொகுப்பே "கயோஸ் தியரி" (Chaos theory) என்கிறார்கள்.


சம்பவங்கள் நடப்பதற்கு முன்பே அதை உணர்ந்து, இப்படித்தான் நடக்கும் என அடித்துக் கூறுபவர்கள் சிலரே. அவ்வாறு முன்னமே அறிந்து, எதிர்காலத்தைக் கூறுவதை ஜோதிடம், ஆருடம், தீர்க்கதரிசனம் என்றெல்லாம் வகைப்படுத்தலாம். அறிவியல் படி இது ESP - Extra Sensory Perception. நம்ம சித்தர்கள், ஞானிகள் போன்றோர் இந்த வகையறாதான். சினிமாவில் பார்த்திருப்போம், ஹீரோயின் ஊருக்கு போகும் டிரையின் கவிழப் போவது ஹீரோவின் தலைக்குள் முன்கூட்டியே பல்பு எறியும், உடனே பின்னணி இசையோடு ஓடிச்சென்று டிரையினை நிறுத்தி, அனைவரையும் காப்பாற்றி, ஹீரோயினைக் கட்டிபிடித்து டூயட்பாட சென்றுவிடுவார். நடப்பதை முன்கூட்டியே உணர்ந்து கொள்ளும் சக்தி நம்ம ஹீரோவுக்கு இருக்கும் . அதுபோல நிஜத்தில் வாழ்ந்த  சக்தி வாய்ந்த ஹீரோதான் இந்த நாஸ்டிரடாமஸ். இவர் கொஞ்சம் ஒருபடி மேலே சென்று, இன்றுவரை உலகத்தில் நடந்ததையும், நடக்கப் போவதையும், இந்த உலகம் எப்போது அழியப் போகிறது என்பதையும் மனுசன் புரியாத சூத்திரங்கள் நிரம்பிய பாடல்களாய் எழுதி வைத்துவிட்டு சிவனே என்று போய்விட்டார். அதற்குப்பின் இன்றுவரை, உலகில் நடந்த முக்கிய சம்பவங்கள் அவரது குறிப்புகளோடு தொடர்புடையதாக இருக்கிறது. குறிப்பாக பிரெஞ்சுப் புரட்சி, ஹென்றி மன்னர் மரணம், இரண்டாம் உலகப்போர், ஹிட்லர், நெப்போலியனின் ஆட்சி, டயானா மரணம், கென்னடி மரணம், லண்டன் தீவிபத்து, பிளாக் செப்டம்பர் மற்றும் இந்தியாவில் இந்திரா காந்தி கொலை, ராஜிவ்காந்தி கொலை என அவர் முன்கூட்டியே கணித்தது ஏராளம். 2012-ல் உலகம் அழியப்போகிறது என்ற புரளி பரவியபோது, விஞ்ஞானிகள் பலர் வானத்தை வெறித்தபடி ஆராய்ந்து கொண்டிருக்க, அதைவிட இரண்டு மடங்கு ஆராய்ட்சியாளர்கள் குப்புற படுத்துக்கொண்டு நாஸ்டிரடாம்ஸின் புத்தகத்தை புரட்டிக் கொண்டிருந்தனர்.


ஏன்? அவர் இவற்றையெல்லாம் மறைமுகமாக குறிப்பிட வேண்டும். தெளிவாக எழுதியிருந்தால் முன்கூட்டியே தடுத்திருக்கலாம் இல்லையா? ( நம்ம சினிமா ஹீரோ மாதிரி) எனத் தோன்றும். அங்குதான் பிரச்சனையே. அரசர்களும், மதகுருமார்களும் கடவுளின் பிரதிநிதியாக வணங்கப்பட்ட அவர் வாழ்ந்த காலகட்டத்தில் இது சாத்தியமில்லை. வாயைத் திறந்தால், வாயிலே வெட்டுவார்கள். அதனால்தான் அவர் குறியீடுகளால் யாருக்கும் விளங்காத தமிழ் சினிமா பாடல் போல் தான் கணித்ததை எழுதிவைத்தார். இவ்வளவு கணித்தவர் தன் மரணத்தையும் கணித்திருப்பார் அல்லவா. அதுவும் உண்மைதான். "சார் காலையில் பார்க்கலாம்" என அவரது உதவியாளர்  Jean- Aymes -de chavigh இரவு வேலைகளை முடித்துவிட்டு கூறும்போது, சாரி "காலையில் நான் இருக்கமாட்டேன்" என ஜாலியாக கூறி, பல மண்டைகளை இன்றுவரைக்கும் குழம்ப வைத்துவிட்டு மண்டையைப் போட்டு விட்டார்.

இந்த புத்தகம் உலகில் நடந்த சில முக்கிய சம்பவங்களையும், அதற்கு நாஸ்டிரடாமஸ் எழுதிவைத்த குறிப்புகளையும் தெளிவாக காட்டுகிறது. இடையே அவரைப்பற்றிய வாழ்க்கைக் குறிப்புகளையும், அறிய புகைப்படங்களையும் தொகுத்திருப்பது அழகு. அவரது நான்குவரி பாடல்கள் ஆங்கிலம் மற்றும் தமிழில் கொடுக்கப் பட்டுள்ளது. ஆசிரியர் கார்த்திக் ஸ்ரீநிவாஸின் படைப்பை பாராட்ட தகும். இவர் எடுத்துக் கொண்ட சிரத்தையையும் அளித்த உழைப்பையும் புத்தகத்தை படிப்பவர்கள் உணரலாம். இன்றளவும் நாஸ்டிரடாமஸின் புத்தகமான "தீர்க்கதரிசனங்கள் (The Prophecies)"  பற்றி ரூம்போட்டு ஆராய்ந்து கொண்டிருப்பவர்கள் ஏராளம். ஆராய்ந்து கொட்டிய முடிகள் தாராளம். 
இதெல்லாம் கட்டுக்கதை அவர் எழுதியது வெறும் பா..பா பிளாக்ஷீப் ரைம்ஸ், என வாதிடுபவர்களும் உண்டு. எது எப்படியோ, நாஸ்டிரடாம்ஸ் ஒரு மர்மயோகி, அவரது குறிப்புகள் புரியாத புதிர். அவற்றில் சிலவற்றை இந்த புத்தகத்தில் நமக்கு காட்டுகிறார் ஆசிரியர் . நாஸ்டிரடாமஸ் பற்றியும் அவரது குறிப்புகளைப் பற்றியும் அறிந்து கொள்ள இந்த புத்தகம் ஒரு சிறு துளிதான் ஆனால் கடல் அளவு  அடுத்த புதிர்களுக்கு வழிவகுக்கிறது. தவறாமல் வாசியுங்கள்.

மர்மயோகி
நாஸ்டிரடாமஸ்
வானவில் புத்தகாலயம்.
விலை - ரூ. 190.00.