☰ உள்ளே....

சிறுதுளி பெருவெள்ளம்(சென்னை அனுபவம் - 5)...


சரிவர தூங்கி இரண்டு நாட்கள் ஆகியிருந்தது. சென்னைக்கு வந்த முதல் வேலையே கொஞ்சம் கடினம்தான். அசந்து தூங்கியிருந்தேன். அம்மாவிடம் இருந்து அழைப்பு வந்ததும் விழித்துக்கொண்டேன். பசி வயிற்றில் பரதநாட்டியம் ஆடிக் கொண்டிருந்தது. சரிவர சாப்பிட்டும் இரண்டு நாட்கள் ஆகியிருந்தது. இங்கு ஹோட்டலில் எல்லாம் கிடைக்கிறது, இருந்தும் பாழாய்போன நாக்கு வீட்டு சாப்பாட்டை நோக்கியே! துறுத்திக் கொண்டிருக்கிறது. தனி அறையில் டிவியை ஆன்செய்து எதாவது ஒரு நடிகையின் இடுப்பைத் தொட்டுக்கொண்டே சாப்பிடுவதை நினைத்தால் கொடுமையாக இருந்தது. முன்பு சென்னையில் அக்காவும், மாமாவும் இருந்தார்கள். நாக்கு மறத்துப்போகும் தருணங்களில் அவர்களது வீட்டிற்குச் சென்றுவிடுவேன். ருசியான சாப்பாடும், விளையாடி மகிழ குழந்தைகளும் என  ஞாயிற்றுக்கிழமைகள் அமைதியாக கழிந்துபோகும். இப்போது மாமா மாற்றலாகி சொந்த ஊருக்கு சென்றுவிட்டார். சில நண்பர்களைத் தவிர சென்னையில் நெருங்கிய உறவுகள் என யாரும் இல்லை.
அந்த நாட்களின் ருசியை அசைபோட்டுக் கொண்டிருந்த போது அக்கா வசித்துவந்த கீழ்க்கட்டளை சாய்பாபா காலனி நினைவுக்கு வந்தது.
கீழ்கட்டளை ஏரியின் கிழக்கு கரையில் அமைந்திருக்கிறது சாய்பாபா காலனி. நகரத்தின் தினிப்பு இல்லாமல் சற்று விளகி ஒதுங்கி இருக்கும். மழைக்காலங்களில் கீழ்கட்டளை ஏரி நிரம்பும் கொக்குககளையும், முக்குளிப்பான்களையும் ஒருசில அபூர்வ நாரைகளையும் அங்கு பார்க்கலாம். அக்கா வீட்டின் மொட்டைமாடி சொர்கமாக திகழ்ந்திருக்கிறது. மாலையில் ஏரிக்கரையில் அமர்ந்திருக்கும் பனைமரங்களின் நடுவே சூரியன் மறைவதை பார்த்து ரசிப்பது அழகு. இரண்டு மூண்று மொட்டை மாடிகளைத் தாண்டி சில சுடிதார் நிலவுகளையும் கள்ளத்தனமாக ரசித்திருக்கிறேன்.
இரவுநேரத்தில் நானும் மாமாவும் நட்சத்திரங்களை கடித்துக்கொண்டு சோமபானம் அருந்தியிருக்கிறோம். இதையும் தாண்டி தெருவில் இருக்கும் கிரிக்கெட் குழந்தைகளும் டவுசர் தாத்தாக்களும், சுடிதார் பாட்டிகளும், நினைவுக்குள் வந்து போனார்கள்.  அந்த ஏரியும் அதைச்சுற்றிய மரங்களும். சாய்பாபா காலணியை சொந்த ஊரைப்போல வைத்திருந்தது. இரண்டு வருடங்கள் ஏரியை அருகிலிருந்து ரசித்திருக்கிறேன்.

சில மாதங்களுக்கு முன் அங்கு சென்றபோது ஏரி சற்று பொழிவிழந்து காணப்பட்டது. கரையிலிருக்கும் ஒருசில மரங்கள் வெட்டப்பட்டிருந்தன. வடக்கே சில கட்டிடங்கள் புதிதாக முளைத்திருந்தன. குப்பைகள்  கொட்டப்பட்டு மேற்குபக்கம் முழுவதும் மூடி இருந்தது. கிழக்குப் பக்க கரைகள் பலமற்று திறந்தே காணப்பட்டது. கட்டிடக் கழிவுகள், இறைச்சி கழிவுகள் கொட்டப்படும் இடமாகவே மாறியிருந்தது. கூடிய விரைவில் அங்கு அமுதம்நகர், வானவில் நகர், கிரீன் கார்டன் என புதிதாக பிளாட்டுகள் முளைக்கலாம், யாராவது மார்க்கெட் தொங்கிய நடிகை டிவியில் விளம்பரத்திற்கு வரலாம் என்ற நிலையில் இருந்தது.

சென்னை புறநகரைச் சுற்றி இருந்த ஏரிகளின் மொத்த எண்ணிக்கை 36. தற்போது சுமார் 15 ஏரிகள் மட்டுமே சற்று உயிர்புடன் இருக்கின்றன. மீதம் எங்கே? எனக்கேட்டால் கடலில் கரைத்த பெருங்காயத்தை தேடுவதுபோல் ஆகிவிடும். எஞ்சியிருக்கும் ஏரிகளுக்கும் கீழ்கட்டளை ஏரியைப்போல ஆக்கிரமிப்புகளாலும். குப்பைகளாலும் அழிந்து கொண்டே வருகிறது. சென்னையை பொருத்தவரை ஏரிகள்தான் நீர்ஆதாரம், ஆறுகளும் கால்வாய்களும் சங்கிலித் தொடர்போல் ஏரிகளோடு பின்னிப் பிணைந்திருக்கும். மழைநீரை வெளியேற்றவும் சேமிக்கவும் இந்த சங்கிலித்தொடரே முக்கிய பங்குவசிக்கின்றன. குடிநீர் ஆதாரமான பூண்டி, செம்பரபாக்கம், சோழாவரம் ஏரிகளின் கொள்ளளவு அதிகமாகி நீரை வெளியேற்றியதுதான் சென்னை வெள்ளத்திற்கு காரணம் என்கின்றனர். வெளியேற்றப்பட்ட நீர் இந்த சங்கிலித்தொடர் அற்றுப்போனதால் நகருக்குள் புகுந்து கபலிகரம் செய்திருந்தது. 

சென்னையில் தற்போது இருக்கும் முக்கிய இடங்கள் ஏரிகளை காவுகொடுத்து நிர்மாணிக்கப்பட்டவையே. குறிப்பாக போரூர் ஏரியை எடுத்துக் கொள்ளுங்கள், என்பது சதவீதம் அழிந்துவிட்டது. ஏரியின் பாதிஅளவு தனியார் மருத்துவ கல்லூரிக்கு தானமாக வழங்கப்பட்டுவிட்டது. மீதியை அரசு அலுவலங்களும், மத்தியஅரசின் ஆராய்ச்சி கழகமும் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர் என்பதுதான் கொடுமையே. சென்னையில் மொத்தம் இருக்கும் 15 ஏரிகளின் பரப்பளவு 2416.52 ஹெக்டேர், இதில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட அளவு 589.2 ஹெக்டேர். இந்த தகவலை தெரிந்து கொண்டபோது அதிர்ச்சியாக இருந்தது. சென்னை மட்டுமல்ல அனைத்து மாவட்டத்திலும் இதே கதிதான். தமிழகத்தின் மொத்த ஏரிகளின் எண்ணிக்கை 39202. இவை ஆயக்கட்டுப்பாடு, பொதுப்பணித்துறை, உள்ளாட்சி, பஞ்சாயத்து என ஒவ்வொரு மாவட்டத்திலும் அதன் அதன் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இதில் 5000 முதல் 6000 ஏரிகளை தற்போது காணவில்லை. "ஏரியாவை பெரிதாக்க ஏரியா முக்கியம்" என நினைத்ததின் விளைவை இன்றைக்கு நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.
ஏரிகளை நம் முன்னோர்கள் "பூமியின் கண் " என்றனர். நீர்மேலாண்மையை நன்கு அறிந்து, எந்த வசதியும் இல்லாத காலகட்டத்தில் ஏரிகளை வடிவமைத்து, நமக்கு கொடையாக அளித்துவிட்டு சென்றனர். நாமும் நம் கண்களை மூடிக்கொண்டு, பூமியின் கண்ணையும் குருடாக்கிக் கொண்டிருக்கிறோம். மனிதர்களை மனிதனே அடித்து வாழும் நாட்டில்கூட இயற்கையை அழித்து வாழ்வதில்லை அவற்றை பாதுகாத்து வருகின்றனர். நம் தலையில் நாமே! மண்ணைப் போட்டுக் கொண்டிருப்பதாகவே தோன்றுகிறது.

சென்னை முழுவதும் தண்ணீரில் மிதக்கும் நேரத்தில் கண்டிப்பாக சாய்பாபா காலணியும் இதில் தத்தளித்துக் கொண்டிருக்கும். சின்னதாக மழைப்பொழிந்தாலே ரோட்டில் தண்ணீர் செல்வதை பார்த்திருக்கிறேன். பக்கத்தில் ஏரிவேறு, சற்று நினைத்தால் கவலையாக இருந்தது. மாமாவும் அக்காவும் அங்கு இல்லை என்றபோதும் பழகிய சுற்றங்களை நினைத்துப் பார்த்தேன். குறிப்பாக குழந்தைகள் அனு, பூர்ணா. தன்வந். சசி, தற்போது எங்கு இருப்பார்கள் என நினைத்துக்கொண்டேன். சில மாதங்களுக்கு முன்பு முதுகுவலிக்காக ஆபரேசன் செய்து கொண்டபோது என் அறையில் கூடவே இருந்தவர்கள். சென்னைக்கு வந்தால் அவர்களை பார்க்க வேண்டும் என நினைத்திருந்தேன். ஆனால் இன்று நிலைமை வேறு. அவர்களை நினைத்தும் கவலையாக இருந்தது. அக்காவிடம் பேசி அவர்கள்வீட்டில் உள்ளவர்களை தொடர்பு கொண்டேன். மாலையில் ஒவ்வொருவரிடம் பேசி நலம் விசாரித்தபோதுதான் சற்று ஆறுதல் அடைந்தேன்.

- தொடரும்.