☰ உள்ளே....

சிறுதுளி பெருவெள்ளம் (சென்னை அனுபவம் -4)...

சென்னைக்கு வந்து இறங்கி முழுதாக ஒருநாள் முடிந்திருந்தது பகல் தூக்கத்திலும், மழையிலும், இரவு விழித்துக்கொண்டும் பொழுதுகள் கழிந்தது. மறுநாள் சங்கர் அண்ணாவின் நண்பர் தங்கியிருக்கும் ஹோட்டல் வரை கொண்டுவந்து விட்டார் குளித்து முடித்துவிட்டு எனக்கான வேலைக்கு தயாரானேன்.


சென்னைக்கு அருகில் உள்ள புகழ்பெற்ற கண்ணாடி தயாரிக்கும் தொழில்சாலையிலிருந்து எங்களை அழைத்திருந்தனர். அவர்களது தொழில்சாலையில் உள்ள கந்தக அமில(Sulphuric Acid )சேகரிப்புத் தொட்டியில் சிறிய துளை இருப்பதாகவும் அதை சரிசெய்யும் பொருட்டு,சேமித்து வைத்திருக்கும் அமிலத்தை கழிவுநீரோடு சேர்த்து மறுசுழற்சி செய்யவும் எங்களின் உதவியை நாடியிருந்தனர். எப்படியும் தாம்பரம் வரை வந்துவிடுங்கள் அங்கிருந்து நாங்கள் அழைத்துக் கொள்கிறோம் என கூறியிருந்தனர் எப்படியும் என்ற வார்த்தை சற்று யோசிக்க வைத்தது.

வெள்ளம், பூகம்பம், சுனாமி போன்ற பேரிடர் சமயங்களில் அபாயகரமான வேதிப்பொருட்களை கையாளும் தொழில்சாலைகளுக்கு பாதுகாப்பு என்பது மிகவும் அவசியம். இல்லை என்றால் அதில் ஏற்படும் பாதிப்புகள் பெரும் அழிவிற்கு இட்டுச் செல்லும். ரஷ்யாவின் செர்பியா அனுஉலை விபத்தும், நம்நாட்டின் போபால் விசவாயு விபத்தும் நமக்கு நிறைய பாடங்களை கற்றுக் கொடுத்திருக்கிறது. பெரிய தொழில்சாலைகள் மட்டுமின்றி சிறிய தொழில்சாலைகளுக்கும் இது பொருந்தும் விபத்துகள் என்பது ஒன்றே, அங்கு பணிபுரிபவர்களின் உயிர் இழப்பையாவது தடுக்கலாம். அபாயகரமான வேதிபொருட்களை கையாளும் தொழில்சாலைகளில் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளும், பாதுகாப்பு அம்சங்களும் சரிவர இயங்குகிறதா? என ஆராய்ந்தால் வருத்தம் மட்டுமே மிஞ்சும். தமிழ்நாட்டில் ஆண்டிற்கு சராசரியாக 23 மனிதர்கள் பதிவு செய்யப்பட்ட தொழில்சாலையில் விபத்துகளினால் உயிரிழக்கின்றனர். இதுபோன்ற தொழிற்சாலைகளுக்கு வேதிப்பொருட்களை கையாளும் முறைகளும், அதற்குறிய சாதனங்களும், பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வும் எங்களைப் போன்ற நிறுவனங்களின் மூலம் தகுந்த முறையில் வழங்கப்பட்டு வருகிறது என்பதுதான் உண்மை. ஆனால் நிர்வாகத்தின் சிக்கனத் தன்மையும் அலட்சிய போக்கும் அவற்றையெல்லாம் காற்றில் பறக்க விட்டுவிடுகின்றன.

கழிவுகளை பொருத்தவரை ஒவ்வொரு தொழில்சாலைகளும் அவற்றின் தண்மைக்கு ஏற்ப கழிவுகளை தன்வசம் கொண்டுள்ளன. அவற்றை மறுசுழற்சி செய்வதும், வெளியேற்றுவதையும் முறையாக செய்து வந்தாலும், இதுபோன்ற மழைக் காலங்களில் பொதுவாக மெத்தன போக்கையே கடைபிடிப்பார்கள். குறிப்பாக கழிவுநீரை மழையோடு சேர்த்து ஆற்றிலோ, கால்வாய்களிலோ திறந்து விட்டுவிடுவார்கள். இதற்கு எடுத்துக்காட்டு திருப்பூர் சாயத் தொழில்சாலைகளைக் கூறலாம். மழை பொழிந்தால் திருப்பூர் நொய்யல் ஆறு சிவப்பாக ஓடும். ஈரோடு காலிங்கராயண் வாய்க்கால், மற்றும் சேலத்திலும் இதே நடைமுறைதான். கரூரில் உள்ள காகித ஆலையில் இருந்து காவிரி ஆற்றில் வெளியேற்றப்படும் கழிவுநீரின் வாசம் குளித்தலை வரை மணக்கும், இராணிபேட்டை, வேலூரில் உள்ள தோல் தொழில்சாலைக் கழிவுகளைப் பற்றி சொல்லவே வேண்டாம். தாமிரபரணியாறும் அவ்வாரே அழிந்து வருகிகிறது.

தவழ்ந்து, நடந்து, ஊர்ந்து, மிதந்து தொழில்சாலையை அடைந்தோம்.20000 லிட்டர் கொள்ளளவு நிறைந்த தொட்டியிலிருந்து கந்தக அமிலம் கசிந்து கொண்டிருந்தது. தேங்கிய வெள்ளநீரில் அது கலந்து புகையையும் எழுப்பிக் கொண்டிருந்தது. வெளியேற்றும் மோட்டார்கள் நீரில் மூழ்கி செயலிழந்திருந்தது. கந்தக அமிமும் நீரும் மாமியார் மருமகள் மாதிரி எப்பவும் ஒன்று சேர்க்க முடியாது. அப்படி சேர்க்க மிகுந்த பாதுகாப்பு தேவைப்படும். மழை காரணமாக உற்பத்தி நிறுத்தப்பட்டிருந்தது தொழில்சாலையின் மின்சாரமும் துண்டிக்கப் பட்டிருந்தது. கழிவுநீரை சுத்திகரிக்கும் இயந்திரத்தின் (ROplant) இரண்டு நிலைகள் சரிவர இயங்கவில்லை. கழிவுநீர் சேமிப்பு தொட்டியில் கொள்ளளவு வழிந்துபோகும் நிலையில் இருந்தது இதையும் கடந்து மேலே குறிப்பிட்ட பாதுகாப்பு முறை மற்றும் கழிவுநீரை சுத்திகரிக்கும் வேலை இது இரண்டையும் காலதாமதமின்றி செய்ய வேண்டும். 

கண்ணைக்கட்டி காட்டில் விட்டதுபோல் இருந்தது. மழைவேறு தூரிக்கொண்டே இருந்தது கந்தக அமிலம் நீரோடுகலக்கும் புகை நுரையீரலை அழித்துக் கொண்டிருந்தது.
இக்கட்டான நிலையிலும் , முடிவெடுக்க முடியாத தருணங்களிலும் சற்று தூரம் நடந்துவிட்டு வருவது எனது வழக்கம். எதாவது தீர்வுகிடைக்கும் அல்லது தப்பித்து போவதற்கான வழியாவது கிடைக்கும். சற்றுதூரம் மழையிலும் நடந்தேன்.
மூன்று நிலைகளில் பிரச்சனைக்கான தீர்வு முடிவு செய்யப்பட்டது முதலில் கழிவுநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை சரிசெய்ய வேண்டும், அதற்கு செலவாகும் நேரத்தில் கந்தக அமில வெளியேற்றும் மோட்டார்களை சரிசெய்ய வேண்டும்.

குறிப்பிட்ட அளவு உற்பத்தியை தொடங்க வேண்டும் அவ்வாறு செய்யதன் மூலம் கந்க அமிலத்தின் அளவை குறைக்கலாம். உற்பத்தியிலிருந்து வெளிவரும் கழிவுநீரோடு அதிக அளவு கந்தக அமிலத்தை பாதுகாப்பாக கலக்க வேண்டும்.

கந்தக அமிலத்தை வேறொரு தொட்டிற்கு மாற்ற வேண்டும்.

மூன்று நிலைகளையும் அலசிபோட்டு வேலையை தொடங்கினோம்.  டீ, மற்றும் ஒருசில சிகரெட்டுடன் நேரமும் புகைந்து கொண்டிருந்தது. எட்டுமணிநேர போராட்டத்திற்குப்பின் கழிவுநீர் இயந்திரத்தையும், உற்பத்தியையும் தொடங்கினோம். பாதியளவு கந்தக அமிலம் குறைந்த பின் மீதம் இருப்பவைகளை் வேறொரு தொட்டியில் அடைக்கும் பணியும் முடிந்தது. அமிலம்அரித்த சிறு காயங்களைத் தவிர யாருக்கும் எந்த பாதிப்பு இல்லாமல் மொத்தம் பதினாறுமணிநேரம் முழுதாக செயல்பட்டு வெற்றிகரமாக முடித்திருந்தோம். கழிவுநீரின் அளவும் குறைந்திருந்தது. உற்பத்தியையும் அதிகரிக்க தொடங்கினர். அடுத்த நாளுக்கான பொழுதும் விடிந்திருந்தது.
அளவுக்குமீறிய மழைநீரில் கழிவுநீரும், 

கந்தக அமிலமும் கலந்தால் என்ன வந்துவிட போகிறது என நினைக்காமல் அதை சரிசெய்ய நினைத்த நிர்வாகத்தை நினைத்து பெருமையாக இருந்தது. இதுபோல் எத்தனை தொழில்சாலைகள் செயல்பட்டிருப்பார்கள் என நினைத்தும் கவலையடைய செய்தது. சென்னையைச் சுற்றி எண்ணற்ற தொழில்சாலைகளும், நிறுவனங்களும் நிறைந்திருக்கின்றன அவைகளின் கழிவுகள் ஏரியிலும், ஆற்றிலும், கால்வாய்களிலும் முறையின்றி கொட்டப்பட்டே வருகின்றன. அனைவரும் Reduce.. Reuse.. Recycle.. என்பதை சரிவர பயன்படுத்தி இருந்தால் வெள்ளம் தற்போது கழுத்துக்கு கீழே ஓடியிருக்காது என நினைக்கிறேன்.

நிலமையை சரிசெய்யும் பொருட்டு நாங்கள் செய்த இந்த வேலை தற்காலிகமானதுதான். நிறந்தறமாக செயல்படுத்த ஒப்புதல் வாங்கி அதற்கான ஆர்டர்களை பெற்றபின் அங்கிருந்து கிளம்பினோம்.

- தொடரும்.