☰ உள்ளே....

Old is Gold (பாடல்கள்) .

அந்த காலத்துல இது மாதிரியா பாட்டு வந்தது என சில பெருசுகள் புலம்புவதை அடிக்கடி கேட்டிருப்போம். அப்படி என்னதான் இருக்கிறது என பழைய பாடல்களை கேட்டால் அவர்களின் புலம்பல் நியாயமானதாகவே தோன்றும்.
இந்தியமொழி திரைப்படங்களின் உயிர்நாடி இசையும் பாடல்களும். திரைப்படங்களின் பரிணாம வளர்ச்சியில் ஒலி அமைப்புகள் மோனோ, ஸ்டிரியோ என மாறிக்கொண்டே வந்திருக்கிறது அந்த வளர்ச்சியின் ஆரம்ப காலட்டத்தில் வெளிவந்த பாடல்கள் கவித்துவம் மிக்கதாகவும், இனிமையான இசையைக் கொண்டதாகவும் இருந்திருக்கிறது. பாடலின் உயிர் இசைக்கருவியிலும், பாடல் வரிகளிலும், பாடும் குரலிலும் மறைந்திருக்கிறது. பழைய பாடல்களை கேட்கும்போது நிச்சயம் நாம் இதை உணரலாம்.
தற்போதைய பாடல் பதிவுகளிலும், இசையமைக்கும் கருவிகளிலும் நவீனம் புகுந்து கொண்டது வெறும் இரைச்சல்களினால் இசை நிறைந்திருக்கிறது. நம் காதினால் கேட்கக்கூடிய இனிமையான ஒலி நாதம் எனப்படும். நாதம் இரண்டுவகைப்படும் "அகத நாதம்" இது மனிதர்களால் செயற்கையாக எழுப்பப்படுவது. மற்றொன்று "அநாகத நாதம்" இது இயற்கையாக ஒலிப்பது. நாதத்தில் இருந்து வந்தது சுருதி, சுருதியில் இருந்து வந்து ஸ்வரம், ஸ்வரத்தில் இருந்து வருவது தாளம், லயம் அடுக்கிக்கொண்டே போகலாம். இந்த பிரிவுகளை தவிர்த்து இனிமையான ஒலியை தாண்டினால் கிடைப்பது இரைச்சல்களே. நாம் தற்போது கேட்கும் இசை இரைச்சல்களே! நான்கு ஐந்து வெளிநாட்டு ஆல்பங்களின் தொகுப்பு அடங்கிய சிடி கையில் இருந்தால் யார் வேண்டும் என்றாலும் இசையமைக்கலாம் பேனாவும் பேப்பரும் இருந்தால் பாடல் எழுதலாம், கழுதை கூட சூப்பர் சிங்கராகலாம். நமக்கு ஏன் அந்த வம்பு விசயத்திற்கு வருவோம் அதுபோல காலட்டங்களில் அறுபதுகளில் வெளிவந்த பாடல்கள் நாதத்தின் அடிப்படையை மாற்றாமலும், இலக்கிய நயம் கொண்ட பாடல் வரிகளாலும்,தெளிந்த உச்சரிப்பிலும் ரசிக்கத் தக்கவையாகவே இருக்கின்றன. 

காமம், காதல், சோகம், தத்துவம் என அடியேன் ரசிக்கும் அறுபதுகளின் பாடல்கள் சிலவற்றை பகிர்கிறேன்.