காதலின் நரம்பு.



உலக அளவில் திருமணத்தின் குறியீடு மோதிரம். மோதிரம் மாற்றுவது என்பது இரண்டு உள்ளங்களையும் இணைப்பதாகும். பல நாடுகளில் இதுதான் திருமணத்தின் மொத்த சாட்சியம். நமது நாட்டில் தாலி போன்ற கயிறுகள்  முதன்மையாக இருந்தாலும் மோதிரம் மாற்றி திருமணம் உறுதி செய்யப்படுகிறது. அதற்குபின் "உனக்கு நான், எனக்கு நீ, நமக்கு நாம்" என வாழ்க்கை தொடங்குகிறது. இந்த மோதிரம் மாற்றிக்கொள்ளும் பழக்கம் எப்படி வந்தது.

பழைய வேதகாமத்தில் சொல்லப்பட்ட எத்தியர்கள் (Hittite) மோதிரங்களை வாழ்க்கையின் உயர்வாக பயன்படுத்தினர். அவர்களின் வழித் தோன்றல்களான எகிப்தியர்கள்தான் முதலில் திருமணத்தின்போது மோதிரம் மாற்றிக் கொண்டனர். நாணல், புல், பாப்பிரஸ் இலை இவற்றைக் கொண்டு அன்றைய திருமண மோதிரத்தை உருவாக்கினர். முடிவில்லா மோதிரங்கள் அமரத்துவத்தை குறிக்கும் என நம்பிய அவர்கள்,மோதிரத்திற்கு திருமணங்களில் முக்கியத்துவம் கொடுத்தனர். அன்றைய எகிப்தியர்கள் இடதுகையில் மோதிரங்களை அணிவார்கள். வாழ்க்கை துணைக்கு அந்த விரலில் மோதிரம் அணிவித்தால், அது நம் மீதான நம்பிக்கையை அதிரிக்கும் என நம்பினர்.

கி.மு.332 - ல் அலெக்சாண்டர் எகிப்தை கைப்பற்றியதில் இருந்து இந்த வழக்கம் கிரேக்கர்களிடம் பரவத் தொடங்கியது. பின்பு ரோமானியர்களிடமும் தொற்றியது. ரோமானியர்கள் இதை "Vena amoris" என்கிறார்கள் அதாவது Vein of Love "காதலின் நரம்பு"

ரோமானியர்களின் ஆட்சி உலகில் பரவ இந்த பழக்கமும் எங்கும் பரவியது. உலோகங்களின் கண்டுபிடிப்பு மோதிரங்களை மேலும் ஜொலிக்க செய்தன. பண்டைய ரோம் நகரத்தில் மோதிரங்கள் இரும்பால் செய்யப்பட்டன. "துருப்பிடித்தாலும் இரும்பின் வலிமை போகாது. அதுபோலவே பிரச்சனைகள் இருந்தாலும் கணவன்-மனைவி இடையே உள்ள அன்பு குறையக்கூடாது " என்பது அவர்களின் கான்செப்ட்.

17 - ஆம் நூற்றாண்டில் இத்தாலி, இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற நாடுகளில் வெள்ளியினால் செய்யப்பட்ட மோதிரங்கள் மதிப்புமிக்கவையாக இருந்தன. அடுத்தடுத்த காலகட்டங்களில் தங்கம், வைரம், தற்போது பிளாட்டினம் என மாறிவிட்டன. திருமணம் நடைபெறாதபோதோ, விவாகரத்தில் முடிந்தாலோ, அணிவித்த மோதிரத்தை திருப்பி கேட்க முடியாது. அப்படி திருப்பிக் கேட்பது குற்ற செயல் என பல நாடுகளில் சட்டமே உள்ளது. மோதிரத்தை மாற்றிக்கொண்டால் அதை முறைப்படி திருமணமாக அங்கீகரிக்கும் சட்டமும் பல நாட்டில் வழக்கில் உள்ளது. அங்கெல்லாம்  ஒரு சின்ன மோதிரத்தை வைத்துக்கொண்டு வாழ்க்கையை ஆரம்பித்து விடலாம்.

நமது நாட்டில் ஆங்கிலோயர்கள் ஆட்சிக்குப்பின்தான் மோதிரம் மாற்றும் வழக்கம் வந்தது. இன்றளவும் கயிறு ஒன்றே நம் உறவுகளின் முடிச்சு. நாம் நிச்சயதார்த்தம் என மோதிரங்களை மாற்றி திருமணத்தை உறுதி மட்டுமே செய்து கொள்கிறோம். எது எப்படியோ மோதிரம் மாற்றுவது என்பது இரு இதயங்களின் இணைப்பு. அப்படி மாற்றிக் கொண்டவர்களும், இனி மோதிரம் மாற்ற தயாராக உள்ளவர்களும் மறக்காதீர்கள் "மோதிரம் என்பது Vena amoriis -காதலின் நரம்பு".