☰ உள்ளே....

Life..


புத்தகம் மற்றும் சினிமாவிற்கான கடைகளில் மட்டும் எனது ஷாப்பிங் நேரத்தை அதிகமாக செலவிடுவேன். அப்படி ஒரு DVD கடையில் மேய்ந்து கொண்டிருந்தேன். பத்து வயது மதிப்புள்ள ஒரு சிறுவன் தன் அம்மாவுடன் சற்று மழையில் நனைந்து கடைக்குள் நுழைந்தான். மழையின் காரணமாக அனைத்து கல்வி நிலையங்களும் விடுமுறையில் இருந்த சமயம் அந்த சிறுவன் தனக்கு வேண்டிய தமிழ் பட டிவிடிக்களின் பெயர்களை கடைக்காரரிடம் அடுக்கிக் கொண்டே போனான். அவன் கேட்ட அந்த படங்களை நினைத்து நான் கொஞ்சம் திகைத்துப்போனேன். 

அவை எல்லாம் தற்போது வெளியான புதிய தமிழ் திரைப்படங்கள். அதிலும் "கா மா- சோ மா" காட்சிகள் நிறைந்த படங்கள். இந்த படங்களில் என்ன இருக்கிறது என தெரியாமல் அவன் பார்க்க விரும்பி கேட்டுக் கொண்டிருக்கிறான். என்ன இருக்கிறது? எதைப்பற்றி போதிக்கிறது? எனத் தெரிந்தும் அவன் அம்மா அதை வாங்கிக் கொண்டிருக்கிறாள்.
இளசுகளையும் விசிலடிச்சான் குஞ்சுகளையும் மட்டுமே நம்பி தற்போது பல திரைப்படங்கள் வந்து கொண்டிருக்கிறது. ஈஸ்ட்ரேஜன் மற்றும் ஆண்ட்ரோஜென்களை தூண்டக்கூடிய பாடல்களும் காட்சிகளும் நிறைந்த இந்த மாதிரி திரைப்படங்கள் சிறுவர்களை எப்படி பாதிக்கும் பாதித்திருக்கிறது என நினைக்கும் போது சற்று கவலையுரச் செய்கிறது. தனிமையிலோ நண்பர்களுடனோ ஜாலியாக பொழுது போக்க நினைத்துப் பார்த்தால் இந்த வகை திரைப்படங்கள் ரசிக்கத்தக்கவையாக இருக்கின்றன ஆனால் இவற்றை எல்லாம் வீட்டில் குழந்தைகள் மற்றும்  அக்கா, தங்கை, அண்ணன், தம்பிகளோடு பார்பதென்றால் சற்று சங்கடமான நிலையை ஏற்படுத்தும் என நினைக்கிறேன். குடும்பத்துடன் திரையரங்குகளுக்கு செல்லும் பழக்கத்தை குறைத்துக்கொண்ட நாம் இது போன்ற படங்களை வீட்டில் DVD -களில் பார்ப்பதை தவிர்ப்பதே நல்லது எனப்படுகிறது அதிலும் குறிப்பாக நம் பிள்ளைகளின் பார்வை படாதபடி.

சிறுவன் கேட்ட திரைப்படங்களை அவனது அம்மா பெருமையுடன் வாங்கிக் கொடுத்து புதிய உலகத்தை காண்பிக்க அங்கிருந்து அழைத்துச் சென்றாள். சற்றுநேரம் அவர்கள் போவதை பார்த்துவிட்டு திரும்பினேன். கடையில் குழந்தைகளுக்கான டிவிடிக்கள் என்று தனியே ஒரு பிரிவு வைத்திருந்தனர். ரைம்ஸ், ஸ்டோரி, வரலாறு, மற்றும் ஒருசில கார்ட்டூன் படங்கள் நிறைந்திருந்தது.அதில் என்னை மிகவும் கவர்ந்தது Life எனும் Documentary DVD.
டிஸ்கவரி சேனல் தமிழில் வெளிவந்த புதிதில் அதில் ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சிதான் Life.

Challenge of Life.
Reptiles and Amphibians.
Mammals.
Fish.
Birds.
Insects.
Hunters and Hunted.
Creature of the deep.
Plants.
Primates.

என மொத்தம் பத்து எபிசோடுகளை நிமிடத்திற்கு 8000 frames அளவிற்கு படம்பிடிக்கும் கேமராக்களைக் கொண்டு பலரது பலவருட உழைப்பில் இயற்கையை நமக்கு அழகாக காட்டி இருந்தனர். மிகச்சிறந்த ஒளிப்பதிவு, பின்னனி இசை, தேர்ந்தெடுத்த குரல்கள், இனிமையான உச்சரிப்பு என ஒவ்வொரு தொகுப்பையும் இழைத்திருந்தனர். இவற்றின் மொத்த வடிவமே இந்த Life DVD. ஒவ்வொரு வீட்டிலும் இருக்கவேண்டிய ஒரு பொக்கிஷம். உலகத்தில் உள்ள பல்லுயிர்களைபற்றி அறிந்துகொள்ளவும் புரிந்து கொள்ளவும் நிச்சயம் இந்த DVD உதவும். 

மீண்டும் அந்த சிறுவனை நினைத்துப் பார்த்தேன். டீவி சினிமாவைத் தவிர வேறு எந்த பொழுதுபோக்கையும் யாமறியோம். இவைகள் நமக்கு காட்சிப்படுத்துபவை இயற்கைக்கு முரண்பாடானவற்றையே எனத் தோன்றுகிறது. இவற்றை பார்த்துக்கொண்டிருக்கும் நம் வீட்டு பிள்ளைகளை ஓடிப்போய் கண்ணைப் பொத்திக்கொண்டால் எல்லாம் சரியாகிவிடும் என நினைக்கவில்லை அவர்களின் பார்வையை மாற்றினால் போதுமென்றே நம்புகிறேன். அதற்கு முதலில் நாம்தான் விழிக்க வேண்டும் எனத்தோன்றுகிறது. பெரிதாக மாற்றிவிட ஒன்றுமில்லை அடுத்த தலைமுறையாவது செழித்திருக்க வேண்டும் என சிறிய தன்னலத்தோடு ஒன்றிரண்டு சினிமாக்களுடன் Life DVD- ஐயும் பெற்றுக்கொண்டு நடக்கத் தொடங்கினேன்..

  • Life Documentary
  • a BBC presents
  • Narated by- David Attenborough, Opera winfrey, Junes
  • Composer- George Fenton.
  • Written - Paul Paulspillengr.
  • Rs. 1200.